Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
’’ யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படத்தின் கதை என்ன ?’’ இயக்குநர் சிம்புதேவன் விவரிக்கிறார் - Madras Murasu
spot_img
More
    முகப்புசினிமா’’ யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் கதை என்ன ?’’ இயக்குநர் சிம்புதேவன் விவரிக்கிறார்

    ’’ யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படத்தின் கதை என்ன ?’’ இயக்குநர் சிம்புதேவன் விவரிக்கிறார்

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான ’யோகி பாபு’ நாயகனாக நடிக்கும் ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  ‘போட்’ திரைப்படத்தின் கதை என்ன ?’’ என்பதையும் சூட்டிங்கில் நடந்த ’ கடல்’ அனுபவங்களையும் இயக்குநர் சிம்புதேவன் விவரித்தார். 

    சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.

    இந்த திரைப்படத்தின் டீசர், இரண்டு பாடல்கள், ப்ரோமோ பாடல், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன், இயக்குநர் சிம்பு தேவன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, நடிகர்கள் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மாஸ்டர் அக்ஷத் தாஸ் , நடிகைகள் மதுமிதா, கௌரி கிஷன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    இயக்குநர் சிம்பு தேவன் பேசுகையில், ”கதை எழுதுவது எளிது. அதனை செயல்படுத்தும் போதும் நடைமுறைப்படுத்தும் போதும் தான் அதன் கடினம் தெரியும். எழுதிய கதையை காட்சிப்படுத்துவதற்காக குழுவாக நிறைய மெனக்கடல் இருந்தது. இது கடினம் என்று தெரியும். இருந்தாலும் விரிவாக இதைப்பற்றி சிந்திக்கவில்லை.‌ இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றிய சந்தானம் இன்று நம்மிடம் இல்லை. மறைந்துவிட்டார். இருந்தாலும் அவர்தான் இந்த கதைக்கான காட்சிப்படுத்துதலின் அடித்தளத்தை உருவாக்கினார்.‌

    படத்தொகுப்பு பணிகளை தினேஷ் பொன்ராஜ் கவனித்துக் கொண்டார்.‌ இப்படி ஒரு திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் குழு எனக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டனர். கதைப்படி போட் மூன்று நாள் கடலுக்குள் இருக்கும். இதனால் நடிகர்களுக்கு உடை பற்றிய கவலை இல்லை. அனைவருக்கும் ஒரே உடை தான். ஆனாலும் படப்பிடிப்பின் போது நடிகர்கள் அணிந்திருந்த ஆடை பாழானது. இந்த விஷயத்தில் நட்சத்திரங்கள் கஷ்டப்பட்டனர்.‌

    இந்தப் படத்தின் திரைக்கதைக்கு 1943 ஆம் ஆண்டு காலகட்டத்திய பின்னணியை அமைத்திருந்தோம்.‌ ஏனெனில் பொதுவாகவே வரலாற்றில் நம் விஷயங்கள் மறைக்கப்படுகிறது என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது. சுதந்திர போராட்டத்தை பொறுத்தவரை மும்பையையும், டெல்லியையும் முதன்மைப்படுத்தும் அளவிற்கு சென்னையையும், கொல்கத்தாவையும் கண்டு கொள்வதில்லை.‌ ஆனாலும்
    பரவாயில்லை, இது தொடர்பாக நம் வரலாறு குறித்து ஆய்வு செய்ய தொடங்கினேன். குறிப்பாக இரண்டாம் உலக போர்.‌

    1943 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் குறித்த விவரங்களையும், ஆவணங்களையும் பார்வையிட தொடங்கினேன்.‌ இதில் திரைப்படங்களையும் இணைத்துக் கொண்டேன். டொரண்டீனோவின் ஆங்கில திரைப்படத்திலிருந்து பல திரைப்படங்கள் வரை இரண்டாம் உலகப்போர் குறித்த குறிப்புகளில் எதிலும் இந்தியர்கள் இடம்பெறவில்லை. ஆனால் சரித்திரத்தின்படி இரண்டாம் உலகப்போரில் 25 லட்சம் இந்தியர்கள் இறந்திருக்கிறார்கள். இதுதான் எனக்கு கிடைத்த முதல் தகவல். இதிலிருந்து உந்துதலை பெற்று இரண்டாம் உலக போர் பற்றிய ஒரு கதை கருவினை உருவாக்கி, அதனை படைப்பாக்க வேண்டும் என திட்டமிட்டேன்.‌

    அந்த காலகட்டத்தில் சென்னை மீது ஜப்பான் குண்டு வீச தயாராக இருந்திருக்கிறது. இதற்கான எச்சரிக்கை வெளியாகி ஆறு மாத காலம் வரை மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக லண்டனில் உள்ள என்னுடைய நண்பர் ஸ்ரீ கணேஷ் மற்றும் பெங்களூரூவில் உள்ள நண்பர் ஜெயராஜ் ஆகியோருடன் விவாதிக்கத் தொடங்கி, தகவல்களை சேகரிக்கத் தொடங்கினோம்.

    அந்தத் தருணத்தில் சென்னையிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். சென்னையிலிருந்து எழுபது சத மக்கள் வெளியேறி விட்டார்கள். மீதமிருந்த மக்கள் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி பதுங்கு குழிகளில் பதுங்கியபடி வாழ பழகியிருந்தார்கள். இது தொடர்பாக மக்களுக்கு போலீசார் பயிற்சி அளித்து இருந்தனர். எந்த அரசு அலுவலகமும் செயல்படவில்லை. உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் இவை அனைத்தும் ஒரு பொது இடத்தில் வைத்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள்.

    இந்த தகவல்களை எல்லாம் சேகரித்து, விவாதித்து அதன் பிறகு இது தொடர்பாக படைப்பை உருவாக்கலாம் என திட்டமிட்டோம். அந்த காலகட்டத்தில் துடுப்பு படகு தான் இருந்தது. 1980-களுக்கு முன்னர் வரை துடுப்பு படகைத் தான் மீனவர்கள் பயன்படுத்தினார்கள். துடுப்பு படகை உருவாக்குவதற்கு கலை இயக்குநர் சந்தானம் கேரளா, ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு அலைந்து திரிந்து படத்தில் இடம்பெற்ற துடுப்பு படகை வடிவமைத்தார். இந்தக் கதையை எழுதும் போது நன்றாக இருந்தது. ஒரு படகில் பத்து பேர் அமர்ந்திருக்கிறார்கள் என எழுதினேன். ஆனால் இதனை படமாக்கும் போது என்னைவிட நடிகர்கள் சிரமப்பட்டார்கள். நாங்கள் வடிவமைத்த ‘போட்’டில் நடிகர்கள் அமர்ந்து விடுவார்கள். ஆனால் அவர்களால் நகரவோ.. அசையவோ இயலாது. அந்த அளவிற்கு நெருக்கடியாக இருந்தது.

    அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை தேடி தமிழக கடற்கரையோரம் முழுவதும் பயணித்தோம். இறுதியாக திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள உவரியை தேர்ந்தெடுத்தோம். இங்குதான் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கினோம். அடர்ந்த வனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம், உயர்ந்த மலைப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இங்கெல்லாம் கடினம் இருந்தாலும், பிறகு பழகிவிடும். ஆனால் கடல் என்பது ஒவ்வொரு நிமிடமும் புதிராக இருந்தது. எதையுமே தீர்மானிக்க இயலாது. முதலில் எங்களுக்கு எதுவும் புரியவில்லை.

    மாதேஷ் ஒரு காட்சியை படமாக்க தொடங்குவார். அதை காட்சிப்படுத்துவதற்குள் கடல் அலையின் காரணமாக நட்சத்திரங்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் நிறைவு செய்ய இயலாது. எங்களுக்கும், கடலுக்கும் இடையேயான ஒரு ரிதம் கிடைப்பதற்கு நான்கு நாட்கள் ஆனது. நடிகர்களுக்கு நீச்சல் தெரியாது.‌ தொழில்நுட்ப குழுவினர்களில் பலருக்கும் நீச்சல் தெரியாது. அதனால் அந்த மீனவ கிராமத்தில் உள்ள இளைஞர்களை எங்களுக்கு உதவியாக அமர்த்திக் கொண்டோம். அவர்கள் எங்களுக்கு உதவி செய்வதற்காக தொடர்ச்சியாக தண்ணீரில் இருந்ததால் அவர்களின் கை கால்கள் எல்லாம் ஊதி வெளுத்து விட்டன. ஏராளமான தருணங்களில் படப்பிடிப்பிற்கான உபகரணங்கள் வீணாகி இருக்கின்றன. இப்படி தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டோம்.

    ஒரு அலை வந்தால் எங்களுடைய எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஒரு காட்சியை நிறைவு செய்வதற்குள் சூரிய ஒளியில் நிறைய மாறுபாடு ஏற்படும். நடிகர்களுக்கு இது மிகப்பெரும் சவாலாக இருந்தது. எனக்கு கடலுக்குள் இறங்கினாலே தலை சுற்றி விடும். ஆனால் நடிகர்கள் இவற்றையெல்லாம் கடந்து, படகில் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த படம் கடின உழைப்பால் உருவாகி இருக்கிறது. நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவினரும் வியர்வை சிந்தி உழைத்திருக்கிறார்கள்.‌

    இப்படத்தின் படப்பிடிப்பு பெரிய அனுபவமாக இருந்தது. ஏனெனில் என்னைப் பொருத்தவரை கடல் என்பதை தனி உயிரினமாகத் தான் பார்க்கிறேன். சில நேரங்களில் கோபமாக இருக்கும். சில நேரங்களில் அமைதியாக இருக்கும். கடலின் வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். காலையில் தொடங்கி மாலைக்குள் இருபது வண்ணங்களை காணலாம். நாங்கள் எதை எல்லாம் சந்தித்தோமோ எங்களது அனுபவம் என்னவாக இருந்ததோ.. அவற்றை எல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறோம். அதனால் இந்த திரைப்படம் சுவாரசியமாக இருக்கும். அனைத்து வகையிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

    நடுக் கடலுக்கு சென்று படம் எடுத்தால் யார் வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். நாங்கள் மட்டும்தான் கஷ்டப்பட்டு படமாக்கினோம் என்று சொல்ல வரவில்லை. கடல் என்று சென்றாலே கஷ்டம் தான்.‌

    நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உருவாக்கியது ஒரு பாதி தான். மீதி பாதியை சென்னையில் ஒரு அரங்கத்தில் அமர்ந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கினார். தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் அளித்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, யோகி பாபு நடிக்க ஒப்புக்கொண்டு, அவருடன் இத்தனை நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து பணியாற்றி நல்லதொரு படைப்பாக ‘போட்’டை உருவாக்கி இருக்கிறோம்.” என்றார்.

    நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன் பேசுகையில், ”போட் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது.‌ இயக்குநர் சிம்பு தேவன் அற்புதமாக இயக்கி இருக்கிறார். ஜிப்ரானின் இசையில் படம் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் , பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் சிம்பு தேவன் உள்ளிட்ட அனைவருக்கும் தயாரிப்பாளர் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது திரையரங்கிற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

    நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ”சிம்பு தேவனின் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருக்கிறேன்.‌ இதில் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தில் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். இந்த படத்திலும் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். அந்தப் படத்தில் குதிரை என்றால் இந்த படத்தில் போட்.‌

    தம்பி சிம்பு தேவன் சொன்னது போல் கடலை கணிக்க முடியவில்லை. திடீரென்று தண்ணீர் உள்வாங்குகிறது. திடீரென்று தண்ணீர் அதிகரிக்கிறது. திடீரென்று அலை அடிக்கிறது. போட்டில் அமர்ந்து நடிக்கும் போது முதுகு வலியும் ஏற்பட்டது.

    சிம்பு தேவன் பேசும் போது, ‘எழுதுவது எளிதாக இருந்தது’ எனக் குறிப்பிட்டார். ஆனால் இப்படி எழுத வேண்டும் என்று மனதிற்குள் தோன்ற வேண்டும் அல்லவா, அது கடினம் தானே. கற்பனையில் உதித்ததை எழுதி, அதற்காக படப்பிடிப்பு தளத்தை தேடி பயணித்து தேர்வு செய்து அதில் படபிடிப்பு நடத்தி நாங்கள் கொடுக்கும் தொல்லைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு படமாக்கினார். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் இன்பச் சுற்றுலா சென்றது போல் தான் இருந்தது.‌ என்னுடன் நடித்த சக நடிகர்கள் அனைவரும் அதே போட்டில் தான் இருக்க வேண்டும். யாரும் எங்கும் செல்ல முடியாது.

    இந்தப் படத்தில் அவர் எனக்கு கொடுத்த வேடத்தில் நடிக்கும் போது, நான் யாரை குருவாக மனதிற்குள் நினைத்திருக்கிறேனோ.. அவருடைய சீடனாகவே நடிக்க கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது என்ன கதாபாத்திரம் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் ரசித்து ரசித்து செய்து கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று,” என்றார்.

    நாயகி கௌரி கிஷன் பேசுகையில், ”நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற வளரும் கலைஞர்களின் கனவாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன். இந்தப் படத்தில் நடிக்கும் போது கஷ்டங்களும் சவால்களும் இருந்தன. இருந்தாலும் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டே படத்தின் பணிகளை நிறைவு செய்து இருக்கிறோம். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருந்தோம்.

    படத்தின் மேக்கிங் வீடியோவை பார்க்கும் போது அந்த தருணங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சிம்பு தேவனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் படத்தில் லட்சுமி என்ற இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தை ஏற்று நடிக்க முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்தது பெரிய விஷயம். நான் தமிழ் பெண் அல்ல.‌ கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்த பெண். அதனால் ஓரளவிற்கு தான் தமிழ் பேசுவேன்.‌ இந்தப் படத்தில் செந்தமிழை பார்ப்பனர்களின் பேச்சு மொழியுடன் பேசி இருக்கிறேன். இதனை பேசும் போது எனக்குள் தயக்கம் இருந்தது. இருந்தாலும் இயக்குநர் அதனை உடைத்து உன்னால் முடியும் என்று நம்பிக்கை அளித்தார்.‌

    படப்பிடிப்பு நடைபெற்ற படகுக்குள் நான் பாதுகாப்பாக இருந்தேன். படத்தில் நடித்திருக்கும் சக கலைஞர்களுடன் இதற்கு முன் நான் பணியாற்றியதில்லை. இருந்தாலும் அவர்களுடைய எனர்ஜி, மேஜிக்கை நிகழ்த்தியது.‌ இந்தப் படத்தின் மூலம் மதுமிதா எனக்கு சொந்த சகோதரி போல் ஆகிவிட்டார்.

    படப்பிடிப்புக்காக படகிற்குள் அமர்ந்து விட்டால் அவ்வளவுதான். அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவு என்று சொன்ன பிறகுதான் படகிலிருந்து இறங்கி கரைக்கு வருவோம். அதுவரை எங்களுடைய மேக்கப்பை சீராக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. என்னைப் பொருத்தவரை ஒரு நடிகைக்கு அழகான தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் தோற்றத்தை விட ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலம் நடிப்பை வெளிப்படுத்துவது தான் சிறந்தது என்ற எண்ணம் உதித்தது. இந்த ஒரு விஷயத்தை இந்த படத்தில் கற்றுக் கொண்டேன்.

    மாலி & மான்வி பட தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். அவர்கள் தயாரிப்பில் நான் நடித்த முதல் படமான ‘அடியே’ திரைப்படமும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் வெளியானது. அந்த வகையில் இந்தப் பட நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இந்தப் படத்திலும் பாடகியாக தான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஜிப்ரானின் இசை அற்புதமாக இருக்கிறது. நானும் அவரின் தீவிர ரசிகை. இந்தப் படத்தில் கானா பாடல் கலந்த ஒரு நாட்டுப்புற பாட்டு இருக்கிறது. அந்த பாடல் காட்சியை நான் நன்றாக ரசித்து அனுபவித்து நடித்தேன்.

    இந்தப் படத்தில் நடித்த ஜெஸ்ஸி ஒரு ஆஸ்திரேலிய நடிகர். எனக்கு கிடைத்த சிறந்த நண்பர்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு சில விஷயங்களை மொழிபெயர்ப்பதில் உதவியிருக்கிறேன்.

    இந்தப் படத்தில் என்னை தவிர்த்து என்னுடன் நடித்தவர்கள் அனைவரும் நகைச்சுவை கலைஞர்கள். அதனால் படப்பிடிப்பு தருணத்தின் போது அனைவரும் பேசி காட்சிகளை மேம்படுத்துவார்கள். அதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்.‌ எனக்கு அவர்களைப் போல் உடனடியாக காமெடியாக பேச முடியாது, பேசவும் தெரியாது. இது தொடர்பாக இயக்குநரிடம் பேசும் போது, அவர் ‘லட்சுமி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடம் நிறைய பேசும்’ என்றார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பை பொருத்தவரை எனக்கு ஒரு பயிற்சி பட்டறை போல் தான். தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டே இருந்தேன்.

    இந்தத் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் போது பிரமிப்பை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு விஷுவல் ட்ரீட் இருக்கிறது. கடல் பேரழகு. அதனைக் காண ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்,” என்றார்.

    இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், ”சிம்பு தேவனுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது.‌ ’24ம் புலிகேசி’ படத்தில் இணைந்தோம். அதற்காக விவாதித்து பாடல்களையும் உருவாக்கினோம். அவருடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையாக இருந்தது. அதன் பிறகு அவருடன் ஒரு குறும்படத்தில் இணைந்தேன். அதன் பிறகு இந்தப் படத்தின் கதையை விவரித்தார். கேட்கும்போதே எனக்கு ஆவலாக இருந்தது. முழுவதும் கடல் தானா..! என கேட்டேன். அவர் ஆமாம் என்றார். அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் கடலுக்குள் சென்று தான் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார். ஆனால் அதன் பின்னணியில் இவ்வளவு கடினமான உழைப்பு இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

    பாடலை உருவாக்கும்போது அவருக்குள் எப்போதும் இருக்கும் கவிதைத்தனம் எட்டிப் பார்க்கும். பார்த்திபன் சார் ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது போல் சிம்பு தேவன் ஒரு விஷயத்தை வித்தியாசமான கோணங்களில் பார்ப்பார். முதலில் கர்நாடக இசை பாணியில் ஒரு பாடல் என்றார். உடனே நல்லதொரு ராகத்தின் பின்னணியில் நேர்த்தியாக உருவாக்கலாம் என மனதிற்குள் நினைத்தேன். ஆனால் பாடல் வரிகள் சென்னை மக்களின் பேச்சு மொழியில் இருக்க வேண்டும் என்றார். அப்படித்தான் ‘சோக்கா..’ எனும் பாடல் உருவானது.

    அடுத்த பாடலை உருவாக்கலாம் என பேச தொடங்கிய போது.. சென்னையில் இசை மொழியான கானா பாடலை உருவாக்குவோம் என்றார். ஆனால் இந்தப் பாடல் கர்நாடக இசையில் பயன்படுத்தும் ‘சரிகம’ என்ற சொல்லாடலை பயன்படுத்த வேண்டும் என்றார். சிம்பு தேவனின் இந்த முரண்பாட்டை ரசித்தேன். இது சவாலாகவும் இருந்தது. ஏனெனில் இந்தப் பாடலை ‘பத்ம பூஷன்’ சுதா ரகுநாதன் பாடினார்கள். முதலில் அவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறிய பிறகு அவர்கள் பாட சம்மதிப்பார்களா என்ற தயக்கம் எங்களுக்குள் இருந்தது. ஆனால் பாடலைக் கேட்டுவிட்டு, இந்த பாடல் ராகத்தில் அழகாக அமைந்திருக்கிறது, நான் பாடுகிறேன் என்றார். அப்போதுதான் எங்களுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    இரண்டாவதாக கானா பாடல். கானா என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது இசையமைப்பாளர் தேவா தான். அவரை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்ன போது, அவரும் பாடலை கேட்டு விட்டு, மகிழ்ச்சியுடன் பாட ஒப்புக்கொண்டார்.

    இந்த ரெண்டு பாடலில் பணியாற்றிய அனுபவம் தனித்துவமாக இருந்தது. சுதா ரகுநாதனின் பாடலுக்கு நடிகை கௌரி கிஷன் பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் எங்களை வியக்க வைத்தார்.

    பின்னணி இசைக்காக படத்தின் காட்சிகள் என்னிடம் வந்தன. இதில் எதிர்பாராத விதமாக மிகப்பெரும் சவால் ஒன்று இருந்தது. படத்தின் தொடக்கத்தில் பத்து நிமிடம் வரை காட்சிகள் நிலத்தில் நடைபெறும். அதன் பிறகு கடலுக்குள் சென்று விடும். பிறகு கடலிலிருந்து கடைசி பத்து நிமிடத்தில் மீண்டும் கரைக்கு திரும்புவார்கள். மீதமுள்ள பெரும்பாலான காட்சிகள் கடலில் தான் இருக்கும். அதை பார்க்கும் போது எங்கே முற்றுப்புள்ளி வைப்பது, எங்கே தொடர் புள்ளி வைப்பது என்று தெரியாமல், சிம்பு தேவனை தொடர்பு கொண்டேன். பொதுவாக மாற்றங்கள் இசையமைப்பாளருக்கு உதவி புரியும்.‌ ஏதேனும் ஒரு இடையூறு இருக்கும் அல்லது பின்னணியில் மாற்றம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் எங்கு தொடங்குவது எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் படத்தில் உணர்வு என்பது தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும். அதிலும் அதில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் திறமையாக நடித்திருப்பார்கள். ஒருவருடைய நடிப்பிலிருந்து மற்றவர்கள் அதை புரிந்து கொண்டு பேசுவார்கள். அதை துல்லியமாக உணர்ந்து கொண்டு இதற்கு பின்னணி இசை அமைக்க வேண்டியதாக இருந்தது.

    இந்த படத்தில் இயக்குநர் சிம்பு தேவனை ஒரு தயாரிப்பாளராகவும் பார்த்திருக்கிறேன். கடும் போராட்டத்திற்கு இடையே அனைவரையும் ஒருங்கிணைத்து தன்னுடைய கற்பனையை சாத்தியமாக்கி இருக்கிறார். அவரிடம் இருந்த பாசிட்டிவிட்டி பாராட்டத்தக்கது,” என்றார்.

    நடிகர் யோகி பாபு பேசுகையில், “போட் திரைப்படம் இந்த அளவுக்கு சிறப்பாக உருவாகி உள்ளதற்கு இயக்குநர் சிம்பு தேவன் தான் காரணம், அவருக்கு எனது நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர், என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கடின உழைப்போடு இப்படம் உருவாகியுள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் மேலான ஆதரவை ‘போட்’ திரைப்படத்திற்கு வழங்க வேண்டும். மிக்க நன்றி,” என்று கூறினார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments