ஐஜிஎன்ஐடிடிஇ எனப்படும் என்ஐடி (திருச்சி) National Institute of Technology-Trichy கற்பித்தல் குழு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ முதன்மை மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளுக்கு (NIT, IIT களில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி தேர்வு) இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எம்.ராமலட்சுமி என்ற மாணவி 2021-ம் ஆண்டு முதல் இந்தக் குழுவில் பயின்றார். இந்தநிலையில், ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 95.226 சதவீத மதிப்பெண்கள் பெற்று, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
வார நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும், சில வார இறுதி நாட்களில் நேரடி வகுப்புகளும், மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டன. அதில், ராமலெட்சுமி கலந்து கொண்டார். இந்த வகுப்புகள், என்ஐடி திருச்சி வளாகத்தில் 2022 டிசம்பர் 26-ம் தேதி முதல் 2023 ஜனவரி 12-ம் தேதி வரை நடத்தப்பட்டன.
இங்கு படித்தவர்களில், 80 சதவீதத்துக்கு மேல் 5 மாணவர்களும், 75 சதவீதத்திற்கு மேல் 3 மாணவர்களும் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இக்குழுவில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 9 பேர் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். என்ஐடி திருச்சி, இம்மாணவர்களை ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
ஐஜிஎன்ஐடிடிஇ-ல் பயிற்சி பெற்று கடந்த 3 ஆண்டுகளில், என்ஐடி திருச்சியில் 2 மாணவர்களும், ஐஐடி சென்னை மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தலா ஒரு மாணவரும் படித்து வருகின்றனர்.
ஐஜிஎன்ஐடிடிஇ ஆனது, என்ஐடி திருச்சியில் படிக்கும் 50 உறுப்பினர்களைக் கொண்ட குழுவைக் கொண்டுள்ளது. என்ஐடி திருச்சி இயக்குனர் டாக்டர் ஜி.அகிலா, டாக்டர் ஆர். கார்வேம்பு- தலைவர் (மாணவர்கள் நலன்), டாக்டர் என். குமரேசன்- தலைவர் (ஆசிரியர் நலன்), திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் அகியோர் ஆண்டு முழுவதும் அளித்த பயிற்சிக்காக, மாணவி ராமலெட்சுமியின் குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர்.