காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்லாவரத்தில் நடந்த திமுக அரசின் சாதனை விளக்க பொக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” ஆறாவது முறையாக அன்னைத் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது – சீரோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் 1222 பொதுக்கூட்டங்களை இன்றும் நாளையும் நாளை மறுநாளும் ஏற்பாடு செய்துள்ளோம். மூன்றே நாளில் 1,222 கூட்டங்கள் நடைபெறுவது என்பது இதுவரை நடைபெறாத எண்ணிக்கையாகும்.
100 கூட்டத்திலோ 200 கூட்டத்திலோ நமது சாதனைகளைச் சொல்லி முடியாது. 1000 கூட்டத்தில் சொல்லக் கூடிய அளவுக்கு நாம் சாதனைகளைச் செய்துள்ளோம்.அதனால் தான் 1,222 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்தைக் காக்க வந்த விடிவெள்ளியாம் பேரறிஞர் அண்ணா பிறந்தது காஞ்சிபுரம் மாவட்டம். அதிலும் வரலாற்றுப் புகழ் பெற்றது இந்த பல்லாவரம் பகுதி. ஒரு காலத்தில் இது பல்லவபுரம் என்று அழைக்கப்பட்ட பகுதி இது. கல்வெட்டுகளில் பல்லவபுரம் என்று தான் உள்ளது. பல்லவ மன்னன் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கலைகள் வளர்ந்தது இந்த பல்லவபுரம்.
எப்படி இருந்தது தமிழ்நாடு? பத்தாண்டு காலம் பாழ் பட்டுக் கிடந்தது தமிழ்நாடு. முதல் ஐந்தாண்டு காலம் தனது வழக்கில் இருந்திருந்து தப்பிப்பதற்கான முயற்சிகள் இருந்தார் அம்மையார் ஜெயலலிதா. சிறைக்குப் போனார், திரும்பி வந்தார். அதன்பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டார். மறைந்தும் போனார்.
பழனிசாமி – பன்னீர்செல்வம் – சசிகலா என்று பிரிந்து நின்று மோதியதன் காரணமாக தமிழ்நாடே அனைத்து வகையிலும் சீரழிந்தது. ஊழல் முறைகேட்டின் காரணமாக தமிழ்நாட்டின் நிர்வாகத்தை சூறையாடினார்கள். தனது செயலின்மை காரணமாக நிதிநிர்வாகத்தையே பாழடித்தார்கள். கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் தடியெடுத்தவன் தண்டல் காரன் என்ற சூழலை உருவாக்கினார்கள்.
குட்கா விற்பனை ஏகபோகமாக இருந்தது. குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கியதாக அமைச்சர் மீதும் டிஜிபி மீதும், போலீஸ் அதிகாரிகள் மீதும் புகார் வந்து, அவர்கள் வீட்டில் ரெய்டு நடந்தது.
1991-96 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலம் என்பது மிக மோசமான ஆட்சி காலமாக இருந்தது என்றால் – அதனை விட மிகமிக மோசமான காலமாக 2016-21 ஆட்சிகாலம் என்பது இருந்தது. விடியல் பிறக்காதா? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வராதா? என்று ஏங்கிக் கிடந்த தமிழ்நாட்டு மக்களின் தாகம் தீர்க்க உதயமானது தான் 2021 மே மாதம் உதயமான உதயசூரியன் ஆட்சி.
இந்த இரண்டாண்டு காலத்தில் பத்தாண்டு கால பாதாளத்தை சரி செய்திருக்கிறோம். ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் செய்து காட்டி இருக்கிறோம் என்பதை பல்லவ மன்னர்கள் உலவிய மண்ணில் நின்று கம்பீரமாகச் சொல்ல விரும்புகிறேன்” என்று பேசினார்.