சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி மெட்ராஸ்), பிஎஸ் பட்டப்படிப்பில் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், மின்னணுவியல் அமைப்புகள் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் – BS in Data Science and Applications & Electronic Systems) பிரிவுகளில் நான்காண்டு படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த இரு படிப்புகளும் சென்னை ஐஐடி-யில் பட்டம்பெற விரும்புபவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் உயர்தரக் கல்வியை வழங்குகின்றன.டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டும் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறைகளாகும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26.05.2024 கடைசி தேசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவ – மாணவிகள் https://study.iitm.ac.in/ds மற்றும் https://study.iitm.ac.in/es என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இரு வழிகளில் இப்படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம். மாணவர்கள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (JEE) எழுதாமலேயே சுயமாகத் தகுதிபெறும் நடைமுறை மூலம் இப்பாடத்திட்டத்தில் சேர முடியும். இரண்டாவதாக, ஜேஇஇ அட்வான்ஸ்டு 2023 அல்லது 2024 தேர்வுகளில் பங்கேற்றத் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேரடி சேர்க்கை உண்டு. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீதம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பிஎஸ் பாடத்திட்டத்தின் தனித்துவமான அம்சங்கள் குறித்து டேட்டா சயின்ஸ் துறை பொறுப்பு பேராசிரியரான பேரா.விக்னேஷ் முத்துவிஜயன் கூறுகையில், “தரவுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், திறமையான தரவு விஞ்ஞானிகளுக்கான தேவையும் அதிகரிக்கும். இத்துறையில் நேரடியாகவும் இணையதளம் மூலமும் கற்றலை ஒருங்கிணைப்பதன் வாயிலாக மாணவர்களுக்கு வசதியான மற்றும் விரிவான கற்றல் அனுபவம் கிடைக்கிறது.” எனக் குறிப்பிட்டார்.
எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை அது, பாடத்திட்ட வகுப்புகள் மற்றும் ஆய்வகப் பயிற்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
இதுபற்றி எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் துறை பொறுப்பு பேராசிரியரான பேரா. அனிருத்தன் கூறுகையில், “ஸ்மார்ட்போன்கள், கணினிகள் தொடங்கி மருத்துவ சாதனங்கள், வாகன அமைப்புகள் வரை அனைத்து இடங்களிலும் மின்னணு சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. மின்னணு சாதன அமைப்புகளை வடிவமைத்தல், மேம்படுத்தல் மற்றும் சோதனை செய்வதில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் இப்படிப்பை படிப்பதன் மூலம் அண்மைக்காலத் தொழில்நுட்பங்கள், அவற்றின் முன்னேற்றங்கள் குறித்த திறன்களைப் பெற்ற முடியும். இது தொடர்பான வேலை வாய்ப்புகளுக்கும் அவர்கள் சிறந்த முறையில் தயாராகின்றனர்” எனத் தெரிவித்தார்.
பொறியியல், மானுடவியல், வணிகம், பொருளாதாரம், அறிவியல், சட்டம், மருத்துவம் போன்ற அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பி.எஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதே சமயம் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் பிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமை நேரடித் தேர்வு
இப்படிப்பிற்கான தகுதித் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள், அடிப்படை நிலைக்காக முதல் நான்கு பாடத்திட்ட உள்ளடக்கங்களை நான்கு வாரங்களில் படிக்க வேண்டியிருக்கும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ – மாணவிகள் அடிப்படைநிலையில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 25,000-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் இப்பாடத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். பாடங்கள் இணையதளம் மூலம் விநியோகிக்கப்படும். நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாதந்தோறும் நேரடித் தேர்வு நடைபெறும். இதனால் பணிபுரியும் வல்லுநர்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் தங்கள் வழக்கமான பணிகள் மற்றும் பட்டப்படிப்புடன் இதனைத் தொடர முடியும்.