மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ வெளியீட்ட அறிக்கை:
இன்று (06.05.2023) காலை, தமிழக தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை இரண்டு முக்கிய கோரிக்கைகளுக்காக சந்தித்தேன்.
(1) இந்திய சுதந்திரத்திற்காக வீரமுழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் குலதெய்வமான வீர சக்கதேவி ஆலயம் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ளது.
அந்த கோவில் வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆலய குழுவினரால் கிராம மக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டு அந்த நிதியை கொண்டு தாய்மார்கள் பாலூட்டும் அறை, கோவில் நூலகம், ஆவணக் காப்பகம் மற்றும் அன்னதான பாத்திரங்களை வைக்கும் அறை கட்டும் பணியை மேற்கொண்டு இருந்த நிலையில் ஒரு சிலர் அளித்த புகாரினால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது.
ஆலய குழுவினர் அனைத்து ஆவணங்களுடன் தாசில்தார், மாவட்ட ஆட்சித் தலைவர், தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோரை சந்தித்து கட்டுமான பணி நடைபெறுவதற்கு அனுமதி கேட்டு உள்ளனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாகவும் இது குறித்து அமைச்சர் அவர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கி தருமாறு ஆலய குழு நிர்வாகிகள் சார்பில் கேட்டுக் கொண்டனர்.
எனவே இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை நேரில் சந்தித்து நமது இயக்க தந்தை தலைவர் வைகோ, தந்த கோரிக்கை கடிதத்தையும் அமைச்சரிடம் தந்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய சீரமைப்பு பணி நடைபெறுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு தலைவர் வைகோ கடிதத்தை பற்றியும் விளக்கி கூறினேன்.
(2) சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீ வீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு கடந்த ஓராண்டாக உடல் நலம் குன்றி உள்ளார்.
இதுவரை அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் உதவித்தொகையைப் பெற்று வந்தார். தற்போது நடக்க முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் பெற்று வரும் உதவித்தொகை அவரது வீட்டில் கிடைத்திடும் வகையில் ஏற்பாடு செய்திடுமாறும் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து உதவிடுமாறும் முதல்வர். தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நமது இயக்க தந்தை தலைவர் வைகோ விடுத்த கோரிக்கை பற்றியும் எடுத்து கூறினேன்.
மாமன்னரின் வாரிசு ஐயா வீமராஜா அவர்களின் மகளுக்கும், மகனுக்கும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்பிய கோட்டையில் அரசுப் பணியினை இயக்கத் தந்தை தலைவர் வைகோ பெற்றுத் தந்துள்ளார் என்ற மகிழ்வான செய்தியையும் அமைச்சர் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார்.