நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று தோல்வியைக் காணாத அணியாக அரையிறுதி ஆட்டத்தை விளையாடவுள்ளது இந்தியா. ஷ்ரேயஸ், கேஎல் ராகுல் ஆகியோரின் சதம் அடித்தனர்.
பெங்களூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இன்றைய தினம் களத்தில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பந்து ஆடுகளத்தில் பவுன்ஸ் ஆகி மெதுவாக பேட்டுக்கு வந்தது. இருப்பினும், இதனைச் சரியாக கணித்து கூட்டணி அமைத்தார்கள் ரோஹித்தும் கில்லும்.
ஆர்யன் தத் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ரோஹித். அடுத்தடுத்த ஓவர்களிலும் அதிரடி தொடரவே முதல் 10 ஓவர்களில் 5 பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தினார் எட்வர்ட்ஸ். ஆனால் எதுவும் பலன் கொடுக்கவில்லை. முதல் பவர்பிளே-வில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவித்தது. 30 பந்துகளில் அரை சதம் அடித்தார் கில்.
மீகெரன் வீசிய 12-வது ஓவரில் ஷார்ட் பந்தை ஃபைன் லெக்கில் சிக்ஸர் அடிக்க முயன்றார் கில். ஆனால் நிடமானுரு பவுண்டரி லைனுக்கு சில அங்குலம் முன்பாக நின்ற இடத்தில் இருந்தபடி அட்டகாசமாய் கேட்சை பிடித்தார். அதன்பிறகு ஸ்டம்ப் லைனில் பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்த முயன்றார்கள் நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள்.
தவறான பந்துகளைத் தண்டித்த ரோஹித் 44 பந்துகளில் அரை சதம் அடித்தார். வேன் டர் மெர்வ் கச்சிதமாகப் பந்துவீசி இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அவருடைய முதல் 5 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 61 ரன்களை எடுத்த ரோஹித் 18-வது ஓவரில் பாஸ் டி லீ-டின் லெங்த் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று லாங் ஆனில் கேட்ச் ஆனார். நேரம் செல்லச் செல்ல பந்து வேகம் குறைவாக வரத் தொடங்கியது.
இதனைப் புரிந்து விளையாடிய கோலி 53 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே வேன் டர் மெர்வின் லெங்த் பந்தை கட் செய்ய முயன்று போல்ட் ஆனார். அதன்பிறகு ஷ்ரேயஸுடன் கரம் கோர்த்தார் ராகுல். 29-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது இந்தியா.
இருவரும் திறம்பட நெதர்லாந்து பந்துவீச்சாளர்களின் மித வேகப் பந்துகளை எதிர்கொண்டார்கள். 48 பந்துகளில் அரை சதம் அடித்தார் ஷ்ரேயஸ். மறுபுறம் அதிரடி காட்டிய ராகுல் 40 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இந்தியாவின் முதல் 5 பேட்டர்களும் அரை சதம் அடித்து புதிய சாதனையைப் படைத்தார்கள். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 3 முறை மட்டுமே ஓர் அணியின் முதல் 5 பேட்டர்களும் அரை சதம் அடித்துள்ளார்கள். இரு முறை ஆஸ்திரேலியா இந்த சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்த சாதனைப் பட்டியலில் இணைந்தது இந்தியா.
ஷ்ரேயஸ் – ராகுல் இணை கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. ஷ்ரேயஸ் 84 பந்துகளில் தனது முதல் உலகக் கோப்பை சதத்தைப் பூர்த்தி செய்தார். லோகன் வான் பீக் வீசிய 49-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார் ஷ்ரேயஸ்.
கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் விளாசி ராகுல் சதம் விளாச, இந்தியாவும் 400 ரன்களைக் கடந்தது. ராகுல் 102 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் கடைசிப் பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார். இறுதியில் 410 ரன்களைக் குவித்தது இந்தியா.
இந்த பிரம்மாண்ட இலக்கைத் துரத்திய நெதர்லாந்து, சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரிலேயே பார்ரேசியின் விக்கெட்டை இழந்தது. ஆனால், அதன்பிறகு ஜோடி சேர்ந்த அக்கர்மேன் – ஓ டாவ்ட் இணை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடியது. வழக்கமாக முதல் 10 ஓவர்களில் எதிரணியைத் திணறடிக்கும் இந்திய பந்துவீச்சாளர்களால் இன்றைய ஆட்டத்தில் அந்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
சிராஜ் வீசிய 6-வது ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசினார் அக்கர்மேன். 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் குவித்தது நெதர்லாந்து. 11-வது ஓவரில் குல்தீப்பிடம் பந்தைக் கொடுத்தார் ரோஹித். 35 ரன்கள் எடுத்த அக்கர்மேனை தனது அடுத்த ஓவரில் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார் குல்தீப்.
15-வது ஓவரில் குல்தீப்பின் முழு நீளப்பந்தை இறங்கி வந்து அடித்தார் ஓ டாவ்ட். லாங் ஆனில் பந்தைப் பிடிக்க முயன்ற சிராஜ், அதைத் தவறவிட, பந்து தொண்டையில் பட்டது. இதனால், சில ஓவர்களுக்கு சிராஜ் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஜடேஜா தனது முதல் பந்திலேயே ஓ டாவ்ட்-டை போல்ட் ஆக்கினார்.
இதன்பிறகு ஏங்கல்பிரெச் – எட்வர்ட்ஸ் இணை தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காததால் கோலி, கில், சூர்யகுமார் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் ரோஹித். கடைசியில் அவரே பந்துவீசவும் செய்தார். அதாவது கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் தவிற மற்ற அனைவரும் இன்றைய ஆட்டத்தில் பந்துவீசினார்கள்!
25-வது ஓவரை வீசிய கோலி, எட்வர்ட்ஸை வீழ்த்தினார். உலகக் கோப்பையில் கோலியின் முதல் விக்கெட் இதுவாகும். அதன்பிறகு பாஸ் டி லீட் மற்றும் ஏங்கல்பிரெச் இணை பொறுமையாக விளையாடியது. 21 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த பாஸ் டி லீடை தனது துல்லிய யார்க்கரில் வீழ்த்தினார் பும்ரா.
சூர்யகுமார் யாதவ் வீசிய 35-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசினார் நிடாமனுரு. அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஏங்கல்பிரெச் 45 ரன்களில் சிராஜின் வேகத்தில் வீழ்ந்தார். 41-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது நெதர்லாந்து. 16 ரன்கள் எடுத்த லோகன் வான் பீக் 43-வது ஓவரில் குல்தீப்பின் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஜடேஜாவின் அடுத்த ஓவரில் வேன் டர் மெர்வ் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
47-வது ஓவரில் ஆர்யன் தத், பும்ராவின் பந்தில் போல்ட் ஆனார். இதெல்லாம் ஒருபுறம் நடந்தாலும் நிடாமனுரு நிலைத்து விளையாடினார். 48-வது ஓவரை ரோஹித் சர்மா வீசினார். அந்த ஓவரில் சிக்ஸர் மூலம் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் நிடாமனுரு. அடுத்தப் பந்தையும் சிக்ஸருக்கு முயன்று கேட்ச் ஆனார் நிடாமனுரு. இறுதியில் 250 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது. 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தோல்வியைக் காணாத அணியாக அரையிறுதி ஆட்டத்தை விளையாடவுள்ளது இந்தியா.
தகுதிச் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பைக்குள் நுழைந்த நெதர்லாந்து, இரண்டு வெற்றிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி நியுசிலாந்து அணியை அரை இறுதிப்போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.