திருக்கர்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய நாகர்கோவில் ராம் தங்கம், ‘யுவ புரஸ்கார் விருது’-க்கு தேர்வாகி இருக்கிறார். ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதிய கோவில்பட்டி உதயசங்கருக்கு பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.
தலை சிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடமி பல பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு இன்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருதாக பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. யுவ புராஸ்கர் விருது, இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை அங்கீகரிக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ராம் தங்கம். இவர் எழுதிய திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பிற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விகடன் குழுமத்தில் பணியாற்றிய ராம் தங்கம், அந்த குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆனந்தவிகடனில் எழுதிய சிறுகதை திருக்கார்த்தியல். அதன் பெயரில் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார்.
அதாவது, ராம் தங்கம், 2019 ஆம் ஆண்டு எழுதியது திருக்கார்த்தியல். அப்போது, ராம் தங்கம் கதை தொகுப்பு மூத்த இலக்கியவாதிகளால் வெகுவாக பாராட்டப்பட்டது. பல கல்லூரிகள் தமிழ் துறையில் இக்கதைத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது தமிழகத்தைச் சேர்ந்த உதயசங்கருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதிய உதயசங்கருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960 ஆம் ஆண்டு பிறந்தவர் உதயசங்கர். இவர் நீலக்கனவு, யாவர் வீட்டிலும, பிறிதொரு மரணம், ஆதனின் பொம்மை ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மையை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பாலசாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கும்; இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக யுவசாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள ராம் தங்கம் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
தெலுங்கானா அளுநரும் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வாழ்த்து:
2023-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் விருதுகளில் ‘#ஆதனின்பொம்மை’ நாவலுக்காக பால புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் உதயசங்கர், ‘#திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்பிற்காக #யுவபுரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகச் சிறப்பான தமிழ் இலக்கிய படைப்புகளை படைத்து தென் தமிழகத்திலிருந்து விருதிற்கு தேர்வாகியிருக்கும் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.