‘தர்பார் ஹால்’,’அசோக் ஹால்’ ஆகியவை முறையே ‘கணதந்த்ர மண்டபம்’, ‘அசோக் மண்டபம்’ என்று மறுபெயரிடப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவரின் அலுவலகம் மற்றும் இல்லமான குடியரசுத் தலைவர் மாளிகை, நாட்டின் அடையாளச் சின்னமாகவும், மக்களின் மதிப்புமிக்க பாரம்பரிய இடமாகவும் திகழ்கிறது. அதை மக்கள் மேலும் அணுகக்கூடிய இடமாக அமைக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகையின் சூழலை இந்திய கலாச்சார மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகையின் முக்கிய இரண்டு மண்டபங்களான ‘தர்பார் ஹால்’,’அசோக் ஹால்’ ஆகியவை முறையே ‘கணதந்த்ர மண்டபம்’, ‘அசோக் மண்டபம்’ என்று பெயர் மாற்றம் செய்வதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
‘தர்பார் ஹால்’ என்பது தேசிய விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடமாகும். ‘தர்பார்’ என்ற சொல் இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் சட்டப்பேரவைகள், நீதிமன்றங்களைக் குறிக்கிறது. ‘கணதந்த்ரம்’ என்ற கருத்து பழங்காலங்களிலிருந்து இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. எனவே ‘கணதந்த்ர மண்டபம்’ என்ற பெயர் இந்த இடத்திற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது.
‘அசோக் ஹால்’ முதலில் ஒரு நடன அரங்காக இருந்தது. ‘அசோக்’ என்ற சொல் “அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்ட” அல்லது “எந்த கவலையும் இல்லாத” ஒருவரைக் குறிக்கிறது. மேலும், ‘அசோகர்’ என்பது ஒற்றுமை, அமைதியான அடையாளமான அசோக அரசரைக் குறிக்கிறது. அசோக் என்ற வார்த்தை அசோக மரத்தையும் குறிக்கிறது. இது இந்திய மத, பாரம்பரியங்கள், கலைகள் மற்றும் கலாச்சாரங்களில் மிகவும் சிறப்புமிக்கதாகும்.
‘அசோக் ஹால்’ என்பதை ‘அசோக் மண்டபம்’ என்று மறுபெயரிடுவதன் மூலம் மொழியில் சீரான தன்மையை உணர்த்துகிறது. ‘அசோக்’ என்ற வார்த்தையுடன் தொடர்புடைய முக்கிய மதிப்புகளை நிலைநாட்டும் போது ஆங்கிலமயமாக்கலின் சான்றுகளை நீக்குகிறது.