இந்தியாவின் யுபிஐ, உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணியில் உள்ளது. 2016 இல் ஒரு சாதாரண தொடக்கத்தில் இருந்து, முந்தைய ஆண்டைக் காட்டிலும் யுபிஐ பரிவர்த்தனைகள் 900 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இந்திய புத்தாக்கம் இடம் பெற்றிருந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி யுபிஐ (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) கட்டண முறையாகத்தான் இருக்கும். இன்று, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணப்பரிவர்த்தனைகளிலும் 40%க்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. யுபிஐ முறையை 30 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் மற்றும் 5 கோடிக்கும் அதிகமான வணிகர்கள் பயன்படுத்துகின்றனர்.
தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி இன்று, உலகின் அனைத்து நாடுகளிலும், கிட்டத்தட்ட 46% பங்கைக் கொண்டு, அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. 2016 இல் ஒரு மில்லியன் ஆக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள், இப்போது 10 பில்லியன் (1,000 கோடிகள்) பரிவர்த்தனைகளைத் தாண்டியுள்ளது.
இந்தியர்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் விதத்தில் யுபிஐ கொண்டு வந்துள்ள மிகப்பெரிய மாற்றம் இதுவாகும். சர்வதேச தரவு ஆய்வின்படி, மொத்த ரொக்கப் பரிவர்த்தனைகள் 2017 இல் மட்டும் 90 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறைந்துள்ளன. 2016ல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் படிப்படியாக நீக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள், யுபிஐ மீதான மொத்த பரிவர்த்தனை அளவு 2.9 மில்லியனில் இருந்து 72 மில்லியனாக உயர்ந்தது. 2017 ஆம் ஆண்டின் இறுதியில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் யுபிஐ பரிவர்த்தனைகள் 900 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன் வளர்ச்சிப் பாதை மேலும் தொடர்ந்தது.
யுபிஐ பரிமாற்ற முறையானது பயனர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது. முக்கியமான வங்கி விவரங்களைப் பகிர வேண்டிய தேவையை நீக்கி, மெய்நிகர் பணம் செலுத்தும் முகவரியை (விபிஏ) பயன்படுத்தி, பயனர்கள் பணம் செலுத்த அனுமதிக்கிறது. ஸ்மார்ட் போனில் குறுஞ்செய்தி அனுப்புவது போல இந்தச் செயல்முறை எளிமையானதாகும். அதன் தாக்கம், நிதி உள்ளடக்கம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்குப் பங்களிக்கிறது.
யுபிஐயின் வளர்ச்சியானது குறிப்பிடத்தக்க வகையில் பணம் செலுத்துவதற்கான பணப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், பிற டிஜிட்டல் கட்டண முறைகளுக்கும் மாற்றாக உள்ளது. உதாரணமாக, பணம் செலுத்துவதற்கான டெபிட் கார்டுகளின் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. யுபிஐ தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருவதால், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இது இன்னும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.
டிஜிட்டல் கட்டண முறையின் வெற்றியானது, டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பின் வலிமையில் மட்டுமல்லாமல், ரொக்கப் பணத்திலிருந்து டிஜிட்டலுக்கு மாறுவதற்கு மக்களை ஊக்குவித்த நடத்தைத் தூண்டுதலிலும் பிரதிபலிக்கிறது.
எந்தவொரு நடத்தை மாற்றத்தையும் போலவே, நுண்ணுணர்வான புதுமைகள் மூலம் அதன் முக்கிய அம்சங்கள் அதனை உறுதி செய்துள்ளன. யுபிஐ அமைப்பின் நம்பிக்கை, அதன் அணுகல்தன்மையின் அடிப்படையில் இருக்கிறது.
கட்டணம் செலுத்தும் செயலிகளால் வழங்கப்படும் சிறிய குரல் பெட்டிகள் போன்ற சிறிய மற்றும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் இதில் அடங்கும், இதில் க்யூஆர் குறியீடு மூலம் ஒவ்வொரு முறையும் எவ்வளவு பணம் உடனடியாகப் பெறப்பட்டது என்பதை குரல் தெரிவிக்கிறது. இது சிறு வணிகர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் மத்தியில் நீண்ட காலமாக ரொக்கப் பணப் பரிவர்த்தனையால் ஏற்படும் அவநம்பிக்கையைப் போக்க உதவியுள்ளது.
வாடிக்கையாளர் எந்த வங்கியில் தனது கணக்கை வைத்திருக்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல்,யுபிஐக்கான சேவை வழங்குனரை வாடிக்கையாளருக்கு வழங்குவது மற்றொரு முக்கிய வடிவமைப்பு அம்சமாகும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பணம் செலுத்தும் செயலியை தேர்வு செய்து, யுபிஐ வாயிலாக பணம் செலுத்தலாம்.
யுபிஐ உடன் ருபே கிரெடிட் கார்டுகளின் ஒருங்கிணைப்பு என்பது, வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகள் மற்றும் யுபிஐ ஆகிய இரண்டின் நன்மைகளையும் ஒருங்கிணைக்கிறது. இது டிஜிட்டல் பணப் பரிமாற்ற துறையில் ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பை குறிக்கிறது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டுகளால் வழங்கப்படும் குறுகிய கால கடன் வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவின் வலுவான டிஜிட்டல் கட்டணச் சூழல் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. யுபிஐயின் உள்ளூர் வெற்றியைத் தொடர்ந்து, நாட்டிற்கு வெளியே பணம் செலுத்தும் முறையை எடுத்துச் செல்ல, 2020 ஆம் ஆண்டில் இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட்(NIPL) என்ற ஒரு பிரிவை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அமைத்தது. அப்போதிருந்து, என்ஐபிஎல் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகளை விரிவுபடுத்த 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
சமீபத்திய காலங்களில், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகியவை யுபிஐ பரிமாற்ற அலைவரிசையில் இணைந்துள்ளன. பிரான்சில் யுபிஐ இன் நுழைவு குறிப்பிடத்தக்கது. இது முதல் முறையாக ஐரோப்பாவில் காலூன்ற உதவுகிறது. இப்போது ஆறு புதிய உறுப்பு நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் குழுவில் யுபிஐயின் விரிவாக்கத்திற்கு பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.
2016 இல் ஒரு சாதாரண தொடக்கத்தில் இருந்து, யுபிஐ தற்போது அடைந்துள்ள அற்புதமான வெற்றியின் அளவுக்கும் தாக்கத்துக்கும் ஒப்பீடே இல்லை என்பதே உண்மை.