“நினைவெல்லாம் நீயடா” படத்தின் முதல் சிங்கிள் பாடல் அக்டோபர் 27 ஆம் தேதி காலை 10.17 மணிக்கு வெளியிடப்படும் என்று இப்படத்தின் இயக்குநர் ஆதிராஜன் அறிவித்துள்ளார்.
இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி இருக்கிறது “நினைவெல்லாம் நீயடா”. இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் . சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகன் பிரஜன். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார்.
இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயும் நடிக்கின்றனர். மனோபாலா, முத்துராமன், மதுமிதா, பட அதிபர் பி எல் தேனப்பன், டைரக்டர் ஜெயபிரகாஷ், ரஞ்சன் குமார் தமிழ்செல்வி ஆகியோருடன் முக்கிய வேடத்தில் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் நடித்துள்ளார்.
’’எங்கள் திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 27ஆம் தேதி காலை 10.17 மணிக்கு வெளியிடப்படும்…கார்த்திக்கால் பாடப்பட்டது. பழனி பாரதி எழுதியது’’ என்று இயக்குநர் ஆதிராஜன் அறிவித்துள்ளார்.