”ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்வதற்கு மாநில அரசின் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.37,000 கடன் பெறுகிற போது, ஏக்கருக்கு ரூ.5400 தருவது ஏற்புடையதல்ல’’ என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்திற்குரிய காவிரி தண்ணீர் இல்லாத போது உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவிரி ஆணையம் தீர்ப்புகளையும் அமுல்படுத்தாத கர்நாடக அரசை கண்டித்தும், காய்ந்து கருகிய குறுவை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.35000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்கள் உட்பட கடந்த 20.09.2023 அன்று டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர், குறுவை பயிர் பாதிப்புக்கு ஹெக்டேருக்கு ரூ.13500 நிவாரணம் அறிவித்திருக்கிறார். இந்த நிவாரணம் விவசாயிகளுக்கு போதுமானதல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்வதற்கு மாநில அரசின் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.37,000 கடன் பெறுகிற போது, ஏக்கருக்கு ரூ.5400 தருவது ஏற்புடையதல்ல.
காய்ந்து கருகி போன பயிர்கள் 2 லட்சம் ஏக்கர் உள்ள நிலையில் 40 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. எனவே, மாநில அரசு முறையான கணக்கெடுப்பு நடத்திடவும், அறிவித்திருக்கும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.