ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் மெகா வேலைவாய்ப்பு மற்றும் தொழில்பழகுநர் ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. உள்ளூர் நிறுவனங்களும் சர்வதேச நிறுவனங்களும் இந்த முகாமில் கலந்து கொள்கின்றன.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள பி.கே.ஆர் பெண்கள் கலைக் கல்லூரியில் 06.10.2023 அன்று வேலைவாய்ப்பு மற்றும் தொழில்பழகுநர் முகாம் நடைபெறுகிறது. அந்த கல்லூரியுடன் இணைந்து, தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள http://boat-srp.com/cs-pkr/ என்ற தளத்தில் பதிய வேண்டும். அக்டோபர் 6 ஆம் தேதி அன்றும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் முழுக்க முழுக்க இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகள், டிப்ளமோ பொறியியல் படிப்பினை முடித்தோர் அவர்கள் எந்தப் பிரிவானாலும் 2019 முதல் 2023 ஆம் ஆண்டு படித்து முடித்து இருந்தால் இந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பழகுநர் முகாமில் கலந்து கொள்ளலாம். அதுபோல, பி.காம்., பி.ஏ., பி.எஸ்.சி., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட கலை மற்றும் அறிவியல் பாடம் படித்தோரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமிற்கு வருவோர் பயோடேட்டா நகல் மூன்று கொண்டு வர வேண்டும். ஆதார், ரேசன் அட்டை, படிப்பு சான்றிதழ்கள் அனைத்திலும் மூன்று செட் கொண்டு வர வேண்டும். விண்ணப்பித்தோருக்கு அழைப்பு கடிதம் அனுப்பமாட்டார்கள். நேரடியாக வந்து இந்த முகாமில் பங்கேற்கலாம்.
முகாம் நடைபெறும் பி.கே.ஆர் கல்லூரிக்கு ஈரோடு ரயில் நிலையம், ஈரோடு பஸ் நிலையம், பவானி பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், திருப்பூர் பழைய பஸ் நிலையம், அவினாசி பஸ் நிலையம், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து காலை 8 மணிக்கு முகாம் நடைபெறும் 06.10.2023 அன்று இலவச பஸ்கள் இயக்கப்படும்.
இந்த முகாம் குறித்து, பி.கே.ஆர் கல்லூரி பேராசிரியர்கள் உமா மகேஸ்வரி 98426 48008, ராதாமணி 8012860615 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். Email ID: pkrfair2023@pkrarts.org என்ற இமெயில் எண்ணிலும் விபரம் கேட்கலாம்.