‘’பன்னாட்டுப் புத்தகக் காட்சி இரண்டாவது ஆண்டாக வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை திறம்பட நடத்த ’ஆலோசனைக் குழு, ஒருங்கிணைப்புக் குழு, நிகழ்வு செயற்குழு’ என்று மூன்று குழுக்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
24 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்களும் படைப்பாளர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்ட சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி 2023 ஜனவரியில் முதன்முதலாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. எண்ணற்ற தமிழ்நூல்களை பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யவும், பல்வேறு நாடுகளின் படைப்புகளை தமிழ் மொழிக்குக் கொண்டுவரவும் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த புத்தகக் காட்சியில் கையெழுத்தாகின. இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி இரண்டாவது ஆண்டாக வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கி விட்டன.
இதற்குரிய இலச்சினை, தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பு நல்கை, கெஸ்ட் ஆஃப் ஹானர் என்ற பிரிவில் கௌரவிக்கப்படும் நாடு (மலேசியா) முதலானவை கடந்த ஜூன் மாதமே பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. அதே நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் 18 வரை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு புத்தகக்காட்சி நடைபெறும் என இடமும் நாளும் அறிவிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான CIBF2024ஐ சிறப்புற நடத்த பொதுநூலக இயக்ககத்தின் இயக்குநர் இளம்பகவத், பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர் குழுவோடு பிராங்க்ஃபர்ட்டில் நடந்த பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் கலந்துகொண்டு வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான பன்னாட்டுப் பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சிக்கென அழைப்பு விடுக்கப்பட்டது. பலரும் ஆர்வத்தோடு தங்களுடைய வருகையை உறுதி செய்தனர்.
இப்போது இந்நிகழ்வை திறம்பட நடத்த மூன்று குழுக்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஆலோசனைக் குழு, ஒருங்கிணைப்புக் குழு, நிகழ்வு செயற்குழு என மூன்று குழுக்களில் அரசு அலுவலர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வல்லுநர்கள் என பல்வேறுபட்ட ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர்.
ஆலோசனைக் குழுவில் தமிழ்வளர்ச்சித்துறையின் இயக்குநர் முனைவர்.அருள், சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழு தலைவரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்கள் இமையம், எஸ்.ராமகிருஷ்ணன், ச.தமிழ்ச்செல்வன் முதலானோரும், பதிப்பாளர் கண்ணன், பத்திரிகையாளர்கள் அசோகன் மற்றும் ஆரோக்கியவேல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை உலகத் தரத்தில் நடத்துவதற்கும், அதற்குரிய நிகழ்விடத்தை வடிவமைக்கவும், நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்புக்கும், தமிழ் இலக்கியத்தை எப்படியெல்லாம் உலக அளவில் எடுத்துச் செல்லலாம் என திட்டமிடுவதற்கும், இந்தியாவிலும் பன்னாட்டு அளவிலும் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க வழிமுறைகளை வகுப்பதற்கும் ஆலோசனைகளை வழங்கும்.
ஒருங்கிணைப்புக் குழுவில், பொது நூலக இயக்ககத்தின் இணை இயக்குநர், தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணை இயக்குநர், மொழிபெயர்ப்பாளர் மினி கிருஷ்ணன், பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன், பதிப்பாளர் ஒளிவண்ணன், விற்பனையாளர் முகமது அலி, பதிப்பாளர் முரளி கண்ணதாசன் முதலானோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு பன்னாட்டுப் பதிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் புத்தகக் காட்சியில் பங்கேற்பதை உறுதி செய்யும். பங்கேற்பாளர்களுக்கான அரங்கை ஒதுக்கீடு செய்வது, பதிப்பாளர் சந்திப்புகளை ஒருங்கிணைப்பது, கருத்தரங்குகளை வடிவமைப்பது, புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வினை ஒருங்கிணைத்தல், துணைக் குழுக்களை உருவாக்குதல், நிகழ்வுகளுக்கான தலைப்பு, பேச்சாளர்கள் நேரம், நிகழ்ச்சி நிரல் உள்ளிட்டவற்றை இறுதி செய்தல், நிகழ்வினை விளம்பரப்படுத்துதல் ஆகிய வேலைகளை செய்யும். நிகழ்வு செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொது நூலக இயக்ககத்தின் துணை இயக்குநர், பதிப்பாளர் வேடியப்பன், பதிப்பாளர் அமுதரசன், பதிப்பாளர் கார்த்திக் புகழேந்தி, பதிப்பாளர் கவிதா சொக்கலிங்கம், பதிப்பாளர் எழுத்தாளர் இவள் பாரதி, பதிப்பாளர் நிவேதிதா லூயிஸ், நூலகர் காமாட்சி, நூலகர் தினேஷ் குமார் முதலானோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு துணைக் குழுக்களை ஏற்படுத்தி நிகழ்வு திறம்பட நடைபெறத் தேவையான வேலைகளை மேற்கொள்ளும். மொழிபெயர்ப்பு மானிய திட்டத்தில் பதிவுசெய்வதற்கான உதவிகளைச் செய்யும். பதிப்புரிமை நூற்பட்டியலை உருவாக்கும்.
இந்த முறை சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன. தமிழில் வெளியான நூறு நூல்களை இருபத்தைந்துக்கும் அதிகமான பன்னாட்டு மொழிகளில் கொண்டு செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.