வில்வித்தை போட்டியில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. மகேந்திரா நிறுவனம் ’கார்’ ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ளது இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமம் லோய் தார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவர் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி பிறந்தவர் ஷீத்தல் தேவி. இவரது தந்தை ஏழை விவசாயக் கூலி. அந்தப் பகுதியில் உள்ள நெல் மற்றும் காய்கறி பண்ணையில் நாள் முழுவதும் வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இது குடும்பத் தேவைக்கு போதவில்லை. அந்த குடும்பத்துக்கு சொந்தமான மூன்று நான்கு ஆடுகளை வளர்த்து வருகிறார் அவரது அம்மா. உடன் பிறந்தது ஒரு தங்கை. படிப்பறிவு இல்லாத குடும்பத்தின் மூத்த மகளான ஷீத்தல் தேவி ஃபோகோ மெலியா என்ற பிறவி நோய்க்குறைபாட்டால் கைகள் இன்றிப் பிறந்தார். இது ஒரு அரிய வகை குறைபாடு. கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட தாலிடோமைடு என்கிற மருந்தின் பக்க விளைவு.
இன்ப அதிர்ச்சி திருப்புமுனை!
2021 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரில் இந்திய ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வு அது. பள்ளி சென்று கொண்டிருந்த ஷீத்தல் தேவியும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அந்த நிகழ்வின் போது ஷீத்தலின் விளையாட்டுத் திறமை ராணுவத்தினரால் கண்டறியப்பட்டது. ராணுவ அதிகாரிகளான பயிற்சியாளர்கள் அபிலாஷா சவுத்ரி, குல்தீப் வாத்வான் ஆகியோர் ஷீத்தலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, முதலில் செயற்கை முறையில் அறுவை சிகிச்சை செய்வதென்று முடிவு செய்தனர். ஆனால், அது சாத்தியமில்லை எனக் கை விரித்த மருத்துவர்கள், கைகள் இல்லை என்றாலும், அவரின் மேல் உடலமைப்பு வலுவாக இருப்பதை உறுதிப்படுத்தினர். அப்போதுதான், கால்களை கொண்டு மரம் ஏறுவதில் நிபுணத்துவம் உள்ளதாக ஷீத்தல் கூறியது ராணுவ பயிற்சியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
2012 ஆம் ஆண்டு லண்டன் பாரா ஒலிம்பிக் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் மாட் ஸ்டேட்ஸ் மேனனின் திறமை, வில்லை பிடிக்க தனது கால்களை திறமையாகப் பயன்படுத்தியது. அர்ப்பணிப்புடன் செயல்பட்டது நினைவுக்கு வந்தது. இதனையடுத்து, ஷீத்தல் தேவியை வில்வித்தை பயிற்சி மையத்தில் சேர்த்து ஊக்கப்படுத்தினர். அதற்குப் பிறகு ஷீத்தலின் வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்டது. திருப்புமுனையை ஏற்படுத்தியது. குடும்பத்தின் வறுமையை அறிந்து தத்தெடுத்துக் கொண்ட ராணுவம், ஷீத்தல் தேவியின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டது. கடந்த ஆண்டுதான் பத்தாம் வகுப்பை முடித்தார். மருத்துவ உதவி மற்றும் வில்வித்தை விளையாட்டு பயிற்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. பயிற்சியில் சேர்ந்த 6 மாதத்தில் சிறந்த வீராங்கனையாக உருவெடுத்தார். இரண்டு கைகளும் இல்லாமல், சிறிய விஷயத்துக்கும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் வாழ்க்கை மிகவும் கடினமானது என்பதால் கைகள் இல்லாத ஷீத்தல் தேவிக்கு கால்களால் இயக்கக்கூடிய வில்லும் அம்பும் உள்ளூரில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன.
சவால் நிறைந்த பயணம்!
செயற்கை கை பொருத்தும் முயற்சிகள் தோல்வியுற்றாலும், தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. ஆரம்பத்தில் வில்லை அவரால் தூக்க முடியவில்லை. மிகவும் கடினமாகவே இருந்துள்ளது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இரண்டு கால்களையும் பயன்படுத்தி குறி பார்த்து அம்புகளை ஏவினார். பாரா வில்வித்தை வீரர்கள் மட்டுமல்லாமல், வழக்கமான வில்வித்தை வீரர்களுடன் போட்டியிட்டு அசாதாரணமான தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் ஒரு வில்லை தூக்குவதற்கு கூட கஷ்டப்பட்ட அவர், தொடர் பயிற்சியின் மூலம் தினமும் 50 முதல் 100 அம்புகளை வீசத் தொடங்கினார்.
பின்னர் ஒரே நாளில் 300 அம்புகளை வீசும் அளவுக்கு முன்னேற்றம் கண்டார். இதன் மூலம் வில்வித்தை போட்டியில் சாதிக்க முடியும் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை பயிற்சியாளர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டது. அதோடு மட்டு மல்ல, அவரது சொந்த கிராமத்து நண்பர்களின் ஆதரவும் அதிகம் இருந்ததால் கேலோ இந்தியா, தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெண்களுக்கான கேலோ இந்தியா கேம்ஸ் என்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளினார். பயிற்சியில் பங்கேற்ற 11 மாதத்தில் சோனா பட்டில் நடந்த ஜூனியர் தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிக்குள் முதன்முதலாக களம் இறங்கி, முன்னணி மற்றும் நட்சத்திர வீரர்களை எதிர்கொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதன் தொடர்ச்சியாக, ஓப்பன் நேஷனல் விளையாட்டில் நட்சத்திர வீரர்களுடன் போட்டியிட்டு நான்காவது இடத்தை பிடித்தார்.
சாதனையும் அங்கீகாரம்!
அடுத்த இலக்கு சர்வதேசப் போட்டியாக அமைந்தது. சமீபத்தில் செக் குடியரசில் நடைபெற்ற பாரா வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். மன உறுதியுடன் களம் இறங்கி பிரமிக்க வைக்கும் வகையில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த மாதம் சீனாவில் நடந்த ஆசியா பாரா விளையாட்டுப் போட்டியின் தனிநபர் மற்றும் கலப்பு குழு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இரண்டு தங்கமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று சாதனையின் உச்சத்தை அடைந்தார் ஷீத்தல் தேவி, உலக வில்வித்தை வரலாற்றில் கைகள் இல்லாமல் கால்களால் வில்லை இயக்கும் முதல் வீராங்கனையாக தனது பெயரை பொன் எழுத்துக்களால் பொறித்த இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
மகேந்திரா நிறுவனமும் கார் ஒன்றை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது. இப்போது, இவர் பெயர்தான் இண்டர்நெட் உலகில் அதிகம் தேடப்படுகிறது. காரணம் அவர் தங்கம் வென்றார் என்பதற்காக மட்டுமல்ல. அதையும் தாண்டி தன்னம்பிக்கை மிகுந்த பெண்ணாகத் திகழ்கிறார் என்பதற்காகவே. வில்வித்தையை தாண்டி, உடல் ரீதியான சவால்களைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள தனி நபர்களை ஊக்குவிக்கிறது. குறைபாடு உள்ளவர்கள் தடைகளைத் தாண்டி லட்சியங்களை வெல்ல முடியும் என்கிற அசைக்க முடியாத உறுதியையும், நம்பிக்கையையும் உலகுக்கு உணர்த்துகிறது.