தெலுங்குப் பட இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனுவின் முந்தைய படமான ‘அகண்டா’ ஒரு அட்டகாசமான ஆக்ஷன் த்ரில்லர். பாலய்யாவின் நடிப்பில் ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் வித்தியாசமாகச் செய்திருப்பார்கள். இதற்கு முன்பு பாலய்யாவை வைத்து இவர் இயக்கிய ‘லெஜண்ட்’ படமும் ஒரு சிறப்பான பொழுதுபோக்குச் சித்திரம்.
‘அகண்டா’ வுக்குப் பிறகு ராம் பொத்தினேனியை வைத்து, ‘ஸ்கந்தா’ இயக்கியிருக்கிறார் பொய்யபடி ஸ்ரீனு. இந்தியாவில் யாருமே யோசிக்க முடியாத ஒரு கதையை இந்தப் படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஆந்திரப் பிரதேச முதல்வரின் மகளுக்கு கல்யாணம் ஆகவிருக்கும் நேரத்தில், அந்தப் பெண்ணை தெலுங்கானா முதலமைச்சரின் மகன் கடத்திக்கொண்டு போய்விடுகிறார். இதனால், தெலுங்கானா முதலமைச்சரைப் பழிவாங்க அடியாட்களை அனுப்புகிறார் ஆந்திர முதல்வர். அப்படி வரும் அடியாள், இரண்டு முதல்வர்களின் மகளையும் கடத்திக்கொண்டு தனது கிராமத்திற்குப் போய்விடுகிறார்.
இதற்கு நடுவில், ஒரு மிகப் பெரிய கம்யூட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த இரண்டு கதைகளுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் மீதிக் கதை.
கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கதையை எழுதி வைத்திருக்கிறார். இரண்டு மாநில முதல்வர்களும் முழு நேரமும் அடிதடி வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கதாநாயகனானவர், போலீஸ், என்.எஸ்.ஜி கமாண்டோக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதல்வர் வீட்டிற்குள் புகுந்து ஒரு ஐம்பது பேரைக் கொல்கிறார்.
தமிழ்ப் படங்களில் அமைதியாக வந்துபோன ராஜா, இந்தப் படத்தில் நாயகனுக்குத் தந்தை. கிராமத்தில் இருந்தபடி இரு மாநில முதல்வர்களுக்கும் சவால் விடுகிறார்.
கதாநாயகன் இரு மாநில முதல்வர்களின் பெண்களையும் கடத்தி வந்து விடுகிறார் அல்லவா, அதில் தெலுங்கானா மாநில முதல்வரின் பெண், கடத்தியவனையே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். ஸ்டாக்ஹோம் சின்ரோம் போலிருக்கிறது.
முந்தைய படத்தில் சண்டைக் காட்சிகளைச் சிறப்பாக அமைத்திருந்தார் ஸ்ரீனு. இந்தப் படத்தில் சில சண்டைக் காட்சிகளைத் தவிர, மற்றவையெல்லாம் வெகு சாதாரணமாக இருக்கின்றன.
இந்தப் படத்தில் நாயகனுக்கு இரண்டு ரோல்கள். ஒரு ரோலை கடைசியில்தான் யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. சர்வதேச நாடுகள் தேடும் ஒரு போதைக் கும்பல் தலைவனை மெக்ஸிகோவில் கொன்றுவிட்டு நேரடியாக ஆந்திராவில் வந்து சண்டை போடுகிறாராம்.
அந்தக் கதையைச் சொல்ல அடுத்த பாகம் வரும் என்று லீட் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிசில் ஊத்திக் கொண்டதால், அடுத்த பாகம் வருமா என்பது சந்தேகம்தான்.
”ஸ்கந்தா” – டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் தமிழிலும் ஸ்ட்ரீமாகிறது.