வெகுமானம் கொடுக்கும் பெருவிடைக்கோழி! கால்நடை வளர்ப்பு நமக்கு எப்போதும் பலன் கொடுக்கும் தொழிலாக இருந்து வருகிறது. நாம் புதிதாக ஏதாவது வளர்க்கலாமா? என யோசிப்பவர்களுக்கு கோழி வளர்ப்பு சரியான சாய்ஸ். அதிலும் தூயபெருவிடைக் கோழிகளுக்கு இன்று அதிக டிமாண்ட் இருப்பதால் அதையே வளர்க்க ஆரம்பிக்கலாம் என்கிறார் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, மாட்டுக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வகணபதி. அவரை சந்தித்தபோது தனது கோழி வளர்ப்பு அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். “எனக்கு சிறிய வயதில் இருந்தே கோழி வளர்ப்பில் அதிக நாட்டம். அதிலும் நாட்டுக்கோழி ரகத்தில் பெருவிடைக் கோழிகளை விரும்பி வளர்ப்பேன். ஒரு கட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கோழிகளை உற்பத்தி செய்தேன். இந்த தருணத்தில்தான் எனக்கு கோழிகளை மேய்ச்சலில் வளர்த்து விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஒரு தொழில் துவங்குவதற்கு அதைப் பற்றிய அக்கறை மட்டும் இருந்தால் போதாது. அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் அவசியம். அதனால் கோழிகளைப் பண்ணையில் வளர்ப்பது பற்றி முறையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அனுபவம் மட்டுமே நமக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கும். அதனால் அனுபவம் உள்ளவர்களிடம் பண்ணை அமைப்பது குறித்து தெரிந்து கொண்டேன். நாம் வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்கும் பண்ணை மூலம் வளர்க்கும் கோழிகளுக்கும் மிகப்பெரிய மாற்றம் இருக்கிறது. கோழிகளுக்கு எந்தளவிற்கு இயற்கை முறையில் தீவனம் கொடுக்கிறோமோ அதைப் பொருத்துதான் கோழிகளின் வளர்ச்சி இருக்கும் என்பதை அறிந்துகொண்டேன். கோழிகளுக்கு என்று பிரத்தியேகமாக இரண்டு அளவுகளில் கொட்டகை அமைத்திருக்கிறேன். இதில் 20க்கு 40 அடி என்ற கணக்கில் 10 கொட்டகையும், 6க்கு 8 என்ற கணக்கில் 4 கொட்டகைகளும் அமைத்திருக்கிறேன். ஒவ்வொரு கொட்டகையைச் சுற்றி கம்பி வேலி அமைத்திருக்கிறேன். இதற்கு 20 லட்சம் செலவானது. கொட்டகையில் ஜோடிக்கோழிகள், குஞ்சுகள், வளர்ந்த கோழிகள், குஞ்சுகளுடன் மேய்ச்சலில் இருக்கும் பெட்டைக் கோழி என்று பிரித்து வைத்திருக்கிறேன். இப்போது 300 பெட்டைக்கோழிகள், 75 சேவல்கள் உள்ளன. இவற்றின் மூலம் மாதத்திற்கு கிட்டத்தட்ட 1000 முட்டைகள் கிடைக்கும்.
காலநிலையைப் பொருத்து தீவனம் கொடுப்பது, தண்ணீர் வைப்பது. உரிய நேரத்தில் மேய்ச்சலில் விடுவது போன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோழிக்குஞ்சுகளைப் பொருத்தவரையில் அதிக வெளிச்சம் இருந்தால் தீவனம் எடுத்துக்கொள்ளாது. அதனால் அவற்றை இருட்டு இருக்கும் பகுதிகளாக பார்த்து அடைப்போம். காலையில் 6 மணிக்கு கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்துவிடுவோம். அனைத்து கோழிகளும் நல்ல மேய்ச்சலில் இருக்கிறதா என்பதை கவனிப்பேன். அதன்பிறகு 11 மணியளவில் கம்பு, ராகி, சோளம், கோதுமை, அரிசி அடங்கிய கலப்புத்தீவனம் கொடுப்போம். மாலையில் அடைய வரும் கோழிகள் சரியான அளவில் தீவனம் உட்கொண்டதா? என்பதை கவனித்துக் கொள்வேன். அதேபோல் காலையில் கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்ட பின்பு கூண்டுகளை சுத்தம் செய்துவிடுவேன். பண்ணையைச் சுற்றிலும் இயற்கை முறையில் விளைந்த மூலிகைச்செடிகள் இருக்கின்றன. இவற்றைக் கோழிகள் சாப்பிடுவதால் நோய்கள் வருவதில்லை. வாரம் ஒருமுறை சேவல்களை குளிப்பாட்டுவேன்.
கோழிகளுக்கு அருகில் எப்போதும் தண்ணீர் வைத்திருப்பேன். காலை, மாலை என இருவேளைகளும் தண்ணீர் வைக்கும் கிண்ணத்தை சுத்தம் செய்வேன். வாரம் ஒருமுறை கோழிகளுக்கு வெள்ளை சாதத்தில் வேப்ப எண்ணெய் கலந்து கொடுப்பேன். இவ்வாறு கொடுக்கும்போது ஒருமணி நேரத்திற்கும் மேலாக வேப்ப எண்ணெயை தானியத்தோடு ஊற வைத்துக் கொடுப்பது நல்லது. இது கோழிகளின் இரைப்பையை சுத்தம் செய்யும். இதன்மூலம் கோழிகளை நோயில் இருந்து காக்கலாம். மழைக்காலத்தில் கோழிகளுக்கு நோய் வராமல் தடுக்க நன்கு ஆற வைத்த வெந்நீர் மட்டுமே கொடுக்கிறேன். கோழிகளுக்கு அரசு கால்நடை மருத்துவர்கள் மூலம் ஆர்2டி தடுப்பூசி போடுகிறேன். இந்தத் தடுப்பூசியை 1 மற்றும் 6வது மாதத்தில் போடுவேன் சராசரியாக ஒரு பெருவிடைக்கோழி 10 லிருந்து 14 முட்டைகள் வரை இடும்.
5 நாட்களுக்கு ஒருமுறை கோழி முட்டைகளை இன்குபேட்டரில் வைப்பேன். ஒரு நாளைக்கு எப்படியும் 50 முட்டைகள் கிடைக்கும். இதை இன்குபேட்டரில் வைத்துத்தான் குஞ்சு பொரிக்க வைப்பேன். ஆயிரம் முட்டைகள் வைக்கிறோம் என்றால் எப்படியும் 250 முட்டைகள் கருகூடாமல் வீணாகிவிடும். ஆனால் 750 முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் கிடைக்கும். இந்தக் கோழிக்குஞ்சுகளை 7 நாட்கள் வரை குண்டு பல்பின் சூட்டில் வைப்பேன். 14வது நாளில் ஐடிபி மருந்து போட்ட பிறகு அடுத்த செட்டில் அடைத்து விடுவேன். இரண்டு மாதம் ஆன கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வேன். ஒரு மாதத்தில் கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.25 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் பராமரிப்பு செலவு ரூ.25 ஆயிரம் போக ரூ.1 லட்சம் லாபமாக கிடைக்கிறது. இது சராசரியாக ஒரு மாதத்திற்கு கிடைக்கும் லாபம். பெரியகோழிகளை நான் விற்பனை செய்வது கிடையாது. 4 பெட்டைக் கோழிக்கு ஒரு சேவல் என்ற கணக்கில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வதால் பெருவிடைக் கோழிகுஞ்சுகள் தரமானதாக கிடைக்கின்றன. இதனால் நிறைய வாடிக்கையாளர்கள் என்னைத் தேடிவந்து பெருவிடைக் கோழிகுஞ்சுகளை வாங்கிச் செல்கிறார்கள்” என்கிறார்.
தொடர்புக்கு: செல்வகணபதி
90800 94664, 96889 14506.