சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி 09.09.2023 நாளிட்ட அறிக்கைக்கு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு அறிக்கை:
கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மஞ்சள் அழுகல் நோய், வேர்ப்புழு தாக்குதல் மற்றும் காட்டுப்பன்றி தொல்லையால் கரும்பு பயிர்கள் பாதிப்படைந்து விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் பல சர்க்கரை ஆலைகள் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதால் கரும்பு பயிரிட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி விவரம் தெரியாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
2011 வரை கலைஞர் தலைமையிலான அரசில் தமிழ்நாட்டின் கரும்பு பயிரிடும் பரப்பின் அளவு 2.24 லட்சம் எக்டேராக இருந்தது. ஆனால், பின்னர் வந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கரும்பு பரப்பளவு கிட்டதட்ட 1.29 லட்சம் எக்டேர் குறைந்து, வெறும் 95 ஆயிரமாக மட்டுமே இருந்தது. மேலும், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும் 1.50 லட்சமாக இருந்ததை 91 ஆயிரமாக குறைக்கப்பட்டதே நிர்வாக திறனற்ற எதிர்கட்சி தலைவர் ஆட்சியில்தான் என்பதை சுலபமாக மறந்து அறிக்கை விடுகிறார். ஆனால் 2021ல் திமுக ஆட்சி ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட கரும்பு பரப்பளவு 1.50 லட்சம் எக்டேராக உயர்த்தியது தற்போதைய திமுக ஆட்சியில் தான் என்பதை ஏனோ அறிக்கை திலகத்திற்கு புரியவில்லை.
கரும்பு விவசாயிகளுக்கு 2015-2016 அரவை பருவம் முதல் 2019-2020 அரவைப் பருவம் வரை, கரும்பு விலை உயர்த்தப்படாமல் ஒரே விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 2,750 மட்டுமே அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கரும்பு விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது விவசாயிகள் டன் ஒன்றுக்கு ரூபாய் 3,016.25 பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கரும்பு விவசாயிகளின் உற்பத்திக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் வழிவகை கடனாக சுமார் ரூபாய் 800 கோடி அளவிற்கு தமிழக அரசு நேரடியாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிட சர்க்கரை ஆலைகளுக்கு நிதி உதவியும் வழங்கி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2021 வரை ரூ.419 கோடி அளவில் கரும்பு விவசாயிகளின் நிலுவைப் பணம் பட்டுவாடா செய்யாமல் கரும்பு விவசாயிகளை தவிக்க விட்டவர்தான் தற்போது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை பற்றி குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலுவைத் தொகை முழுவதையும் 2021-22 பருவம் வரை அனைத்து கூட்டுறவு, பொது மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது என்பது ஆட்சியிலிருந்து இறங்கும் போது கஜானாவையே சுரண்டிவிட்டு சென்ற கல்லாபெட்டி எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நடப்பு பருவத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டுமே கரும்பு விவசாயிகளுக்கு ரூ.17 கோடி அளவிற்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். இது குறித்தும் இத்துறையினால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
டாக்டர் கலைஞர் ஆட்சியில் 2010ஆம் ஆண்டு சுமார் ரூ.1,240 கோடி மதிப்பீட்டில் 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு அறிவிக்கப்பட்ட இணை மின் திட்டம் மற்றும் ஆலை நவீனமயமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக அரசின் திறனற்ற ஆட்சியின் காரணமாக திட்டம் முடியாமலேயே 90 சதவீதம் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கி, 2021வரை இத்திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் இன்றி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.1,400 கோடி அளவில் கூடுதல் வட்டி சுமையை விட்டுவிட்டு சென்றதுதான் எடப்பாடி ஆட்சியின் மற்றும் ஒரு சாதனை.
2021ல் சர்க்கரை ஆலைகளின் 8.97 சதவீதமாக இருந்த கரும்பு பிழிதிறன் 9.33 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ரூ.100 கோடி அளவிற்கு கூடுதல் வருவாய் கிடைத்திட இத்துறை மூலம் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கரும்பு பயிரிடும் விவசாயிகள் மண்வளம் குன்றிய நிலையில் போதிய சத்து இல்லாததன் காரணமாக மஞ்சள் அழுகல் நோய் (Pokkah Boeng) வேர்புழு நோய் போன்ற நோய்கள் தாக்குவது இயற்கையானது ஆகும். பொதுவாக மஞ்சள் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட வயல்களை கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகள் மூலம் வயல் ஆய்வு செய்யப்பட்டு, கடைபிடிக்கப்பட வேண்டிய நோய் கட்டுப்பாட்டு முறைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. மிகவும் அதிகமாக மஞ்சள் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட கரும்பு வயல்கள் கண்டறியப்பட்டு, அங்குள்ள கரும்பினை அவசர கால ஏற்பாடாக அருகில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அனுப்ப உத்தரவு வழங்கப்பட்டு விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேலும், கரும்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், பூச்சி தாக்குதல் மற்றும் மஞ்சள் அழுகல் நோய் தாக்குதல் ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கரும்பு இனபெருக்க நிறுவனம், கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூலம் கருத்தரங்குகள், பயிற்சிகள், வயல் விழாக்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கரும்பு பயிர் காட்டுப்பன்றியால் பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்கும் பொருட்டு கரும்பு விவசாயிகளுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் தயார் செய்யப்படும் காட்டுப்பன்றி விரட்டும் திரவம் கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
நிர்வாக திறனற்ற எடப்பாடி ஆட்சியில் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. புதிய நியமனங்கள் ஏதுமில்லை. 2018க்கு பிறகு ஊதிய பிரச்சனையும் கண்டு கொள்ளப்படவில்லை. கருணை அடிப்படையில் நியமனம் நடைபெறாமல் இருந்து, இதனால் கரும்பு சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறைந்து போனது இவர் கண்ணில் 2021 வரை படவில்லை. சர்க்கரை ஆலைகளில் காலியாக உள்ள பொது தொகுப்பு அலுவலர்கள் மற்றும் ஊதிய குழுவின் கீழ் உள்ள பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் ஆலைகள் தேவைகளை கருத்தில் கொண்டு விரைந்து நிரப்பிட நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசு கருணை அடிப்படையில் பணிநியமனமும், சுமார் 170 பேருக்கு பதவி உயர்வும் வெவ்வேறு நிலைகளில் அளிக்கப்பட்டது. கோரிக்கை வைக்காமலேயே ஊதிய உயர்விற்காக மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டு, வெகுவிரைவில் ஊதிய உயர்வும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகள் நலன் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு கேட்காமலேயே கொடுக்கும் இவ்வரசின் செயல்பாட்டால், தற்போது கரும்பு பிழிதிறன் உயர்வும், சர்க்கரை கரும்பு பரப்பளவு உயர்வு, கரும்பு விவசாயிகளின் எண்ணிக்கை உயர்வு இவ்வரசின் சாதனையாகும்.
கரும்பு விவசாயிகளை கண் போல காத்து, அவர்களுக்கு ஏற்படும் துயரங்களை துடைத்திட இவ்வரசு எப்பொழுதும் நேச கரம் நீட்டிக் கொண்டே இருந்ததன் விளைவாக கரும்பு உற்பத்தி பரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் கல்லாப்பெட்டி எடப்பாடி அவர்கள் சுட்டிக்காட்டுவதற்கு முன்பே, பூச்சி, நோய் வருமுன் காப்போம் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கரும்பு பயிர் நல்ல முறையில் வளர்ந்திடவும், கரும்பு விவசாயிகளுக்கு அவ்வப்போது நிவாரணம் வழங்கிடவும், இவ்வரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எந்த ஒரு கரும்பு விவசாயியும் பாதிக்கப்படாத வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி, எல்லா நடவடிக்கைகளும் சிறப்பாக இத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், முந்தைய அதிமுக அரசால் கைவிடப்பட்ட சர்க்கரைத் துறையினை செம்மை துறையாக்கிட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சிறப்பாக செயல்படும் அரசாக திகழ்ந்து வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை வைக்காமலேயே அவர்களுக்கு சேரவேண்டிய நிலுவைத்தொகை மற்றும் ஊக்கத்தொகை ஆகிய பணப்பயன்கள் யாவும் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் விடியாமல் இருந்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையின் மூலம், தமிழக விவசாயிகள் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த உண்மையை கூடிய விரைவில் விளங்காத அரசின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கு புரிந்துவிடும் என தெரிவித்துக் கொள்கிறேன்.