இந்தியாவின் முன்னணி வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் 1925 ஆம் ஆண்டு பிறந்து 2023 ஆம் ஆண்டில் மறைந்தார். வேளாண் ஆய்வு, கொள்கை, திட்டமிடல் போன்றவற்றில் அவரின் பங்களிப்பு இருக்கிறது. விவசாயத்தின் வளர்ச்சியை, அதிகரிக்கும் விளைச்சலை கொண்டு மதிப்பிடாமல், விவசாயிகளின் வருமானத்தை கொண்டு மதிப்பிட வேண்டும் என்று சொன்னார். பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு தெரிந்திருக்கும் சில ஆங்கில வார்த்தைகளில் ‘சுவாமிநாதன் ரிப்போர்ட்’ அல்லது ‘சுவாமிநாதன் கமிஷன் ரிப்போர்ட்’ ஆகியவையும் நிச்சயமாக இருக்கும். அந்த அறிக்கை முன் வைக்கும் முக்கியமான பரிந்துரையும் அவர்களுக்கு தெரியும்: குறைந்தபட்ச ஆதார விலை (MSP) = ஒருங்கிணைந்த உற்பத்திச் செலவு + 50 சதவிகிதம் (C2 + 50 சதவிகிதம் என்றும் குறிப்பிடப்படும்).
அரசாங்கத்தாலோ அதிகாரவர்க்கத்தாலோ அறிவியல் நிறுவனங்களாலோ மட்டும் நினைவு கூரப்படுபவர் அல்ல எம்.எஸ்.சுவாமிநாதன். விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் (NCF) அறிக்கையை அமல்படுத்தக் கோரும் கோடிக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் நிறைந்தவர் அவர். பெரிய பங்களிப்பும் தாக்கமும் ஏற்படுத்தக் கூடிய தேசிய விவசாயிகள் ஆணையம் (NCF) அறிக்கைகளை ‘சுவாமிநாதன் அறிக்கை’ என்றுதான் இந்திய விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் அந்த ஆணையத்தின் தலைவராக அவர் இருந்தார். ஆனால் அந்த அறிக்கைகளை இருட்டடிப்புச் செய்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, (UPA) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆகிய இரு அரசாங்கங்களும் ஏமாற்றின.
முதல் அறிக்கை டிசம்பர் 2004-ல் சமர்ப்பிக்கப்பட்டது. கடைசி அறிக்கை அக்டோபர் 2006-ல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவற்றின் பொருட்டு நாம் கேட்கும் விவசாய நெருக்கடியை விவாதிக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு என்பது நடக்கவே இல்லை. அந்தப் பிரச்சனை சார்ந்து ஒருமணி நேர விவாதம் கூட நாடாளுமன்றத்தில் நடக்கவில்லை. முதல் அறிக்கை வந்து 19 வருடங்கள் ஆகிவிட்டன. 2014 ஆம் ஆண்டில் சுவாமிநாதன் அறிக்கையையும் அதன் குறிப்பான அம்சமான குறைந்தபட்ச ஆதார விலை பரிந்துரையையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது மோடி அரசாங்கம். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அவர்கள், அத்தகைய பரிந்துரையை அமல்படுத்தினால் சந்தை விலைகள் பாதிப்படையும் என வேகவேகமாக பிரமாணப் பத்திரத்தை அளித்தனர்.
ஒருவேளை அந்த அறிக்கைகள், விவசாயிகளு க்கு அதிகச் சார்புடன் இருப்பதாக ஐமுகூவும் தேஜ கூ-வும் கருதியிருக்கலாம். ஏனெனில் இரு அரசாங்கங்களும் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்க முயன்று கொண்டிருந்தன. சுதந்திரத்துக்கு பிறகு விவசாயத்தை ஆக்கப்பூர்வமாக அணுகிய ஒரே விஷயம் அறிக்கைதான். அதை அளித்த சுவாமிநாதனை பொறுத்தவரை, விவசாய வளர்ச்சியை விளைச்சல் அடிப்படையில் அல்லாமல் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதை கொண்டே அளவிட வேண்டும் என்றார். தனிப்பட்ட முறையில் 2005 ஆம் ஆண்டில், தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவராக இருந்தபோது அவரை விதர்பாவுக்கு வரும்படி அழைத்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்பகுதியில் நாளொன்றில் 6-8 விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை இருந்தது. நிலவரம் கடுமையாக இருந்தது. அவற்றை பற்றி உங்களின் ஊடகங்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.
2006 ஆம் ஆண்டில், விவசாயம் நொடித்துப் போன ஆறு மாவட்டங்களில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்கொலைகள் நேர்ந்து கொண்டிருந்தபோது ஆறு பேரளவுக்குதான் விதர்பாவை தாண்டி அச்செய்திகளை எழுதிக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் மும்பையில் நடந்த லாக்மே ஃபேஷன் நிகழ்ச்சியை 512 முன்னணி பத்திரிகையாளர்கள் 100 தினசரி டிக்கெட்டுகளை கொண்டு செய்திகளாக்கிக் கொண்டிருந்தனர். ஃபேஷன் நிகழ்ச்சியின் கருப்பொருள் பருத்தி என்பது தான் முரண்நகை. மாடல்கள் ஒய்யாரமாக பருத்தி ஆடைகளில் நடந்து வரும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அதை விளைவிக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒரு மணி நேர விமானப் பயண தூரத்தில் அளவில்லா எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.
அதாவது, 2005 ஆம் ஆண்டில் விதர்பா நிலவரத்தை செய்தியாக்கிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களாகிய நாங்கள் முன் வைத்த அழைப்பை, எங்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி வேகமாக ஏற்று, தேசிய விவசாயிகள் ஆணைய குழுவுடன் அங்கு வந்து சேர்ந்தார் பேராசிரியர் சுவாமிநாதன். விலாஸ்ராவ் தேஷ்முக் அரசாங்கம் எச்சரிக்கை அடைந்தது. அதிகாரிகளுடன் கலந்துரையாடல், விவசாயக் கல்லூரி விழாக்கள் போன்ற தங்களின் வழி காட்டுதலுடன் கூடிய பயணத் திட்டத்தில் அவரை உள்ளடக்கக் கடுமையாக முயன்றது. ஆனால் பணிவான ஆளுமையான அவர், மகாராஷ்டிரா அரசாங்கம் விரும்பும் இடங்களுக்கு செல்வதாக ஒப்புக் கொண்ட அதே நேரம், நானும் ஜெய்தீப் ஹர்திகர் போன்ற சகபத்திரிகையாளர்களும் விடுத்த அழைப்பின்படி களத்துக்கும் செல்லவிருப்பதாகக் கூறி விட்டார்.
வார்தாவில் நாங்கள் அவரை ஷ்யாம்ராவ் கடாலே வின் வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். அவரின் இரு மகன்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தார்கள். பசியால் வாடி, மகன்களின் இழப்பால் துயருற்று, உடல் நலம் குன்றி சற்று முன்தான் ஷ்யாம்ராவும் இறந்திருந்த விஷயம் தெரியவந்தது. அவரின் இறப்பை சொல்லி, பயணத் திட்டத்தை மாற்ற அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் சுவாமிநாதன் இறுதி மரியாதை செலுத்த வேண்டுமெனச் சொல்லி, அங்கு சென்று அஞ்சலி செலுத்தவும் செய்தார். அடுத்தடுத்துச் சென்ற வீடுகளில், தற்கொலை செய்தவர்களின் குடும்பத்தினர் சொல்வதை கேட்டு அவர் கண்ணீர் விட்டார்.
விவசாய நெருக்கடியில் இருந்த விவசாயிகள் வார்தாவின் வைஃபதில் ஒருங்கி ணைத்த கூட்டத்துக்கும் அவர் சென்றார். அக்கூட்டத்தை சந்தேகமே இன்றி நம் விஜய் ஜவாந்தியாதான் ஒருங்கிணைத்திருந்தார். விவசாயப் பிரச்சனைகள் சார்ந்து இயங்கும் முக்கியமான அறிஞர் அவர். ஒரு கட்டத்தில், கூட்டத்திலிருந்து ஒரு மூத்த விவசாயி கோ பத்துடன் எழுந்து, ஏன் அரசாங்கம் அவர்களை வெறுக் கிறது என கேள்வி கேட்டார். நாங்கள் சொல்வதை கேட்க வேண்டுமென்பதற்காக தீவிரவாதிகளாக வேண்டுமா என்றார். மனம் நொடிந்திருந்த பேராசிரியர் அவருடனும் அவரின் நண்பர்களுடனும் பொறுமையாகப் பேசினார். அப்போது சுவாமிநாதன் 80 வயதுகளில் இருந்தார். அவரிடம் இருந்த உறுதியும் நிதானமும் அமைதியும் என்னை ஆச்சரியப்படுத்தின. அவரின் பணி மற்றும் கருத்துகளை விமர்சித்தவர்களுடன் எவ்வளவு உண் மையாக அவர் பேசினார் என்பதையும் நாங்கள் கண்டோம்.
எத்தனை பொறுமையாக கவனித்தார், சமயங்களில் சில விமர்சனங்களுடன் கூட உடன்பட்டார் என்பதையும் நாங்கள் கண்டோம். அவரைத் தவிர, எனக்குத் தெரிந்த வேறு எவரும் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்த விமர்சகர்களை அழைத்து தன்னுடைய பயிற்சி வகுப்புகளிலோ நிகழ்ச்சிகளிலோ நேரடியாக அந்த விமர்சனங்களை கூறச் சொன்னதில்லை. தன்னுடைய பணியில் எடுத்த முக்கியமான முடிவு கள், தற்போது அடைந்திருக்கும் தோல்விகளையும் ஏற் படுத்தியிருக்கும் பாதிப்புகளையும் ஒப்புக்கொள்ளுதல் என்பது மிக முக்கியமான குணம். அது அவரிடம் இருந்தது.
பசுமைப் புரட்சிக்கு பிறகு, ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் ஏற்படுத்திய பாதிப்பு, கற்பனை செய்திராதளவு கட்டுப்பாட்டை மீறிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி கொண்டதாகக் கூறினார். கடந்த சில பத்தாண்டுகளில் அவர் சுற்றுச்சூழல் மீதும் நீராதார பாதுகாப்பு மீதும் அதிக அக்கறை செலுத்தினார். கடந்த சில வருடங்களில், வரம்பு மீறி பயன்படுத்தப்படுகிற பிடி மற்றும் மரபணு மாற்றப் பயிர்கள் குறித்தும் அவர் அதிகம் விமர்சித்திருக்கிறார். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதனின் மறைவால், முன்னணி வேளாண் விஞ்ஞானியை மட்டுமின்றி, ஒரு சிறந்த மனதையும் நல்ல மனிதரையும் இந்தியா இழந்திருக்கிறது.
கட்டுரையாளர்: இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்,
நன்றி: தீக்கதிர்