’’நாம் எடுத்த உறுதியையும், வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் முக்கியம். அமிர்தப் பெருவிழாவின் மூலம் வளர்ந்த பாரதத்தின் அமிர்த காலத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
என் மண் என் தேசம் இயக்கத்தின் அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட அமிர்தப் பூங்கா மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச் சின்னத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் என் மண் என் தேசம் இயக்கத்தின் அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 31-10-2023 அன்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாகவும் அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, அமிர்தப் பூங்கா மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச் சின்னத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், நாட்டின் இளைஞர்களுக்கான எனது இளைய பாரதம் – எனது பாரதம் (மேரா யுவ பாரத்’ – மை பாரத்) தளத்தை தொடங்கி வைத்தார்.
காந்தியின் தண்டி யாத்திரை
சிறப்பாக செயல்படும் முதல் 3 மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமைச்சகங்கள் அல்லது துறைகளுக்கு விடுதலையின் அமிர்தப் பெருவிழா விருதுகளை நரேந்திர மோடி வழங்கினார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்கள் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்து விருதுகளைப் பெற்றன. அமைச்சகங்களைப் பொறுத்தவரை வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை முதல் இடங்களையும் ரயில்வே கல்வி அமைச்சகங்கள் கூட்டமாக 3-ம் இடத்தையும் பிடித்து விருது பெற்றன.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கடமைப் பாதை ஒரு யாகத்தைக் காண்கிறது என்று குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையால் ஈர்க்கப்பட்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழா, 2021 மார்ச் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். சர்தார் படேலின் பிறந்த நாளான 2023 அக்டோபர் 31 ஆன இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிறைவடைவதாக அவர் கூறினார். ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்ற தண்டி யாத்திரையை ஒப்பிட்டு, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவும் மக்களின் பங்கேற்பில் ஒரு புதிய சாதனையை உருவாக்கியது என்று பிரதமர் மோடி கூறினார். தண்டி யாத்திரை சுதந்திரத்தின் சுடர்களை மீண்டும் உயிர்ப்பித்தது என்று கூறிய அவர், அதேபோல் அமிர்த கால இந்தியாவின் 75 ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தின் தீர்மானமாக இது மாறி இருக்கிறது என்று நரேந்திர மோடி கூறினார்.
எனது பாரதம் என்ற ஒரு புதிய தீர்மானம்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் 2 ஆண்டு கால கொண்டாட்டங்கள் என் மண் என் தேசம் இயக்கத்தின் மூலம் நிறைவடைவதாக அவர் தெரிவித்தார். நினைவுச் சின்னத்தின் அடிக்கல் நாட்டு விழா, இன்றைய வரலாற்று சிறப்புமிக்க அமைப்பை எதிர்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறந்த செயல்திறன் கொண்ட விருதுகளைப் பெற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
ஒரு மாபெரும் கொண்டாட்டத்திற்கு விடைகொடுக்கும்போது, (மை பாரத்) எனது பாரதம் என்ற ஒரு புதிய தீர்மானத்தைத் தொடங்குவதாக என்று அவர் சுட்டிக்காட்டினார். 21 ஆம் நூற்றாண்டில் தேசத்தைக் கட்டமைப்பதில் எனது பாரதம் ஒரு பெரிய பங்கை வகிக்கப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஐந்து உறுதிமொழிகள்
இந்திய இளைஞர்களின் கூட்டு வலிமையை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் இளைஞர்கள் ஒவ்வொரு இலக்கையும் எவ்வாறு ஒழுங்கமைத்து அடைய முடியும் என்பதற்கு என் மண் என் தேசம் இயக்கம் ஒரு நேரடி எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எண்ணற்ற இளைஞர்களின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதிலுமிருந்து 8500 அமிர்தக் கலசங்கள் கடமைப் பாதையை அடைந்துள்ளதாகவும், கோடிக்கணக்கான இந்தியர்கள் பஞ்ச் பிரான் எனப்படும் ஐந்து உறுதிமொழிகளை எடுத்து, இணையதளத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளதாகவும் கூறினார்.
கடமையின் உணர்வை நினைவூட்டும்
விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிறைவுக்கு மண் ஏன் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கிய பிரதமர் மோடி, ஒரு கவிஞரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். நாகரிகங்கள் செழித்து வளர்ந்த, மனிதர்கள் முன்னேறிய மண், சிறந்த முத்திரையைக் கொண்டுள்ளது என்று கூறினார். இந்திய மண்ணுக்கு விழிப்புணர்வு உள்ளது என்றும் நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தடுக்கும் ஒரு வாழ்க்கை வடிவம் அதற்கு உள்ளது என்றும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்தியா இன்னும் வலுவாக இருந்தாலும் பல நாகரிகங்கள் எவ்வாறு சரிந்தன என்பதைக் குறிப்பிட்டார். இந்திய மண் ஆன்மீகத்தின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். இந்தியாவின் வீரத்தின் எண்ணற்ற கதைகளை எடுத்துரைத்த அவர், ஷாஹீத் பகத் சிங்கின் பங்களிப்புகளையும் குறிப்பிட்டார். ஒவ்வொரு குடிமகனும் தாய்நாட்டின் மண்ணில் எவ்வாறு ஆழமாக வேரூன்றியுள்ளார் என்பதை எடுத்துரைத்த பிரதமர் மோடி, இந்திய மண்ணுக்கான கடன்களை திருப்பிச் செலுத்தாவிட்டால் வாழ்க்கையில் என்ன பலன் என்று கேள்வி எழுப்பினார். தில்லிக்கு வந்துள்ள ஆயிரக்கணக்கான அமிர்தக் கலசத்தின் மண் அனைவருக்கும் கடமையின் உணர்வை நினைவூட்டும் என்றும், வளர்ந்த பாரதத்தின் உறுதியை அடைய ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார். தேசத்தைக் கட்டமைப்பதில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒரே பாரதம் உன்னத பாரதம்
நாடு முழுவதிலுமிருந்து மரக்கன்றுகளுடன் நிறுவப்படும் அமிர்தப் பூங்கா, வரும் தலைமுறையினருக்கு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது பற்றிக் கற்பிக்கும் என்று பிரதமர் கூறினார். அனைத்து மாநிலங்களின் மண்ணைச் சேர்ந்த 75 பெண் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள கலைப்படைப்புகள் குறித்து பிரதமர் கூறினார்.
சுமார் 1000 நாள் நடைபெற்ற விடுதலையின் அமிர்தப் பெருவிழா இயக்கத்தின் மிகவும் சாதகமான தாக்கம் இந்தியாவின் இளம் தலைமுறையினர் மீது ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இன்றைய தலைமுறையினர் அடிமைத்தனத்தை அனுபவிக்கவில்லை என்றும், சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர், தாம்தான் என்றும் அவர் கூறினார். அந்நிய ஆட்சியின் போது சுதந்திரத்திற்கான இயக்கம் இல்லாத ஒரு தருணம் கூட இல்லை என்பதையும், எந்தவொரு பிரிவினரும் அல்லது பிராந்தியமும் இதில் இருந்து விடுபடவில்லை என்று அவர் கூறினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தரவுத்தளம்
அமிர்தப் பெருவிழா, ஒரு வகையில், வரலாற்றின் காணாமல் போன பக்கங்களை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்த்துள்ளது என்று பிரதமர் கூறினார். இந்திய மக்கள் அமிர்தப் பெருவிழாவை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் வெற்றி ஒவ்வொரு இந்தியரின் வெற்றி என்று அவர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் குடும்பங்கள் மற்றும் கிராமங்களின் பங்களிப்பைப் பற்றி மக்கள் அறிந்து கொண்டனர் என்றும் மாவட்ட வாரியாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வந்தே பாரத் ரயில்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாக் காலத்தில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், உலகின் முதல் 5 பொருளாதாரங்களுக்கு இந்தியா முன்னேறியது என்றும் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது எனவும் ஜி20 உச்சிமாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் கூறினார். அதேபோல் ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார். ஏற்றுமதி, விவசாய விளைபொருட்கள், வந்தே பாரத் ரயில் கட்டமைப்பின் விரிவாக்கம், அமிர்த பாரத ரயில் நிலைய இயக்கம் தொடக்கம், நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் நமோ பாரத், 65,000 க்கும் மேற்பட்ட அமிர்த நீர் நிலைகளை உருவாக்குதல், இந்தியாவின் சொந்த 5ஜி அறிமுகம் மற்றும் விரிவாக்கம், உள்கட்டமைப்பு இணைப்பை மேம்படுத்த பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டத்தின் அறிமுகம் போன்றவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பழங்குடியினர் பெருமை தினம்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின்போது, ராஜபாதையில் இருந்து கடமைப் பாதைக்கான பயணத்தை நாடு நிறைவு செய்தது என்று அவர் கூறினார். அடிமைத்தனத்தின் பல அடையாளங்களை நீக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை, கடற்படைக்குப் புதிய சின்னம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ஊக்கமளிக்கும் பெயர்கள், பழங்குடியினர் பெருமை தினம், சாஹிப்சாதே நினைவாக வீர பாலகர் தின பிரகடனம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 அன்று பிரிவினை துயரத்தை நினைவுகூரும் தினம் போன்றவற்றையும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்குப் புதிய ஆற்றல்
ஒரு விசயத்தின் முடிவு எப்போதுமே புதிய ஒன்றின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார். அமிர்தப் பெருவிழாவின் நிறைவில் எனது பாரதம் (மை பாரத்) தொடங்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், இந்த எனது பாரதம் இந்தியாவின் இளைஞர் சக்தியின் பிரகடனம் என்றார். நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் ஒரே தளத்தில் கொண்டு வரவும், தேசத்தைக் கட்டமைப்பதில் அதிக பங்கேற்பை உறுதிப்படுத்தவும் இது ஒரு சிறந்த தளமாக மாறும் என்று கூறினார். மை பாரத் இணையதளம் தொடங்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், இளைஞர்களுக்காக நடத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்கள் இந்தத் தளத்தில் சேர்க்கப்படும் என்றார். இளைஞர்கள் இயன்றவரை இதனுடன் இணைந்து, இந்தியாவுக்குப் புதிய ஆற்றலைக் கொடுக்க வேண்டும் எனவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதி
ஒவ்வொரு குடிமகனின் பொதுவான தீர்மானங்களை நிறைவேற்றுவதே இந்தியாவின் சுதந்திரம் என்று கூறியதோடு, அதை ஒற்றுமையுடன் பாதுகாக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டைக் குறிப்பிட்ட அவர், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது இன்றைய இந்த சிறப்பான நாள் தேசத்தால் நினைவுகூரப்படும் என்றார். நாம் எடுத்த உறுதியையும், வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். அமிர்தப் பெருவிழாவின் மூலம் வளர்ந்த பாரதத்தின் அமிர்த காலத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி : என் மண் என் தேசம்
என் மண் என் தேசம் இயக்கம் என்பது நாட்டிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த வீரர்கள் மற்றும் வீரங்கனைகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகும். மக்கள் பங்களிப்புடன், இந்த இயக்கம் நாடு முழுவதும் கிராமம், வட்டாரம், நகர்ப்புற உள்ளாட்சி, மாநில மற்றும் தேசிய அளவில் பல நடவடிக்கைகள் மற்றும் விழாக்களை உள்ளடக்கியதாக இருந்தது. உன்னத தியாகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் வகையில் நினைவுச்சின்னம் கட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் நடைபெற்றன. நினைவுச் சின்னத்துடன் மக்கள் எடுத்த ‘பஞ்ச பிராண்’ ஐந்து உறுதிமொழிகள் பழங்குடி இனங்களின் மரக்கன்றுகளை நடுதல், அமிர்தப் பூங்காவை உருவாக்குதல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் பாராட்டு விழாக்கள் ஆகியவையும் நடைபெற்றன.
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2.3 லட்சத்துக்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டதன் மூலம் இந்த இயக்கம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட 4 கோடி பஞ்ச் பிராண் உறுதிமொழி ஏற்கப்பட்டு புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 2.36 கோடிக்கும் அதிகமான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அத்துடன் நாடு முழுவதும் 2.63 லட்சம் அமிர்தப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பெரிய அமிர்தக் கலசத்தில் ஒரே பாரதம்
என் மண் என் தேசம் இயக்கத்தில் அமிர்தக் கலச யாத்திரையும் அடங்கும். இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், நகர்ப்புறங்களில் உள்ள வார்டுகளிலிருந்தும் மண் மற்றும் அரிசி தானியங்கள் சேகரிக்கப்பட்டன. வட்டார அளவில் அனைத்து கிராமங்களின் மண்ணும் கலக்கப்பட்டு பின்னர் மாநில தலைநகருக்கு அனுப்பப்பட்டது. ஆயிரக்கணக்கான அமிர்தக் கலச யாத்ரிகர்களுடன் மாநில அளவில் இருந்து மண் தேசியத் தலைநகருக்கு அனுப்பப்பட்டது.
30-10-2023 அன்று நடைபெற்ற அமிர்தக் கலச யாத்திரையில், அந்தந்த வட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் கலசத்திலிருந்து மண்ணை ஒரு பெரிய அமிர்தக் கலசத்தில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வில் கலந்தன. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட அமிர்தப் பூங்கா மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச்சின்னம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து கட்டப்படும்.
விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக என் மண் என் தேசம் இயக்கம் திட்டமிடப்பட்டது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் விடுதலையின் அமிர்தப் பெருவிழா 12 மார்ச் 2021 அன்று தொடங்கியது. அதன் பின்னர் நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பொதுமக்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டன.
எனது பாரதம் (மை பாரத்)
மேரா யுவ பாரத் – மை பாரத் (எனது இளைய பாரதம் – எனது பாரதம்) நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு நிலையான முழு அரசுத் தளமாக செயல்பட ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மை பாரத் அரசின் முழு நடைமுறைகளிலும் ஒரு சாத்தியமான செயல்முறையை வழங்க, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இதனால் அவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வளர்ந்த பாரதத்தைக் கட்டமைப்பதற்காகப் பங்களிக்கவும் முடியும். இளைஞர்களை சமூக மாற்றத்துக்கான முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாற ஊக்குவிப்பதும், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக செயல்படுவதும் மை பாரத் (எனது பாரதம்) திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில், ‘மை பாரத்’ (எனது பாரதம்) நாட்டில் இளைஞர்களின் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.