’’மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பிஜேபி ஆட்சி, தனக்கெதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும், அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக வருமான வரித்துறையை, அமலாக்கத்துறையை, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தொலைபேசியை டேப் செய்கின்ற முயற்சியை கையாண்டிருக்கிறார்கள்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.11.2023) சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்ல திருமண விழாவில் பேசியதாவது:
மணமக்களே, மணமக்களுடைய பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே, திரளாக திரண்டிருக்கக்கூடிய என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
நம்முடைய கிருஷ்ணசாமி அருமை மகள் தாரணி-க்கும், முருகன் – மஞ்சுளா தம்பதியின் மகன் மருத்துவர் எம். பரத் கௌசிக் -கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சீர்திருத்த திருமணங்கள்
நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம் என்பது ஒரு சீர்திருத்த திருமணம். சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இதுபோன்ற திருமணங்களில் நாம் பங்கேற்கின்ற நேரத்தில் வாழ்த்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக ஒரு செய்தியை பதிவு செய்யாமல் நான் இருந்தது இல்லை. அந்த வரலாற்றுச் செய்தி என்னவென்று கேட்டால், இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் 1967-க்கு முன்னால் நடைபெற்றிருக்கும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறமுடியாத நிலையில் இருந்தது. ஆனால் 1967-ல் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக முதன்முதலில் சட்டமன்றத்தில் நுழைந்து சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கின்ற அந்த தீர்மானத்தை கொண்டு வந்து அவர் நிறைவேற்றி தந்தார்.
ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் முறைப்படி, சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இன்னும் பெருமையோடு சொல்லவேண்டுமென்றால், தமிழ் திருமணம், இந்த தமிழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நாடு மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட தமிழ் திருமணமாக, சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணமாக நம்முடைய அருமை சகோதரர் கிருஷ்ணசாமி தன்னுடைய அன்பு மகளுக்கு இன்றைக்கு சிறப்போடு நடத்தியிருக்கிறார்.
இது எங்கள் வீட்டு திருமணம்
‘பூந்தண்மல்லி’ என்பதுதான் அதன் உண்மை பெயராக இருந்தது. இன்றைக்கு பூந்தமல்லி, பூந்தமல்லி என்று நாம் அழைக்கிறோம். ஆனால் உண்மையில் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அது பூந்தண்மல்லி என்றுதான் அழைத்துக் கொண்டிருந்த காலம். அது நாளடைவில் மாறிப்போய் இன்றைக்கு பூந்தமல்லி என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். பூந்தண் என்றால் அந்த ‘தண்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் குளிர்ச்சி! அந்த குளிர்ச்சிமயமான மலர்களுடைய பெயர்கள் மட்டுமல்ல, கொள்கை பிடிப்புள்ள உடன்பிறப்புகளும், பிறந்திருக்கக்கூடிய பகுதியாகதான் பூந்தமல்லி இருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறபோது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். அதில் ஒருவராக இன்றைக்கு நம்முடைய கிருஷ்ணசாமி திகழ்ந்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணசாமி இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் பழகுவதற்கு இனிமையானவர். இனிமையானர் மட்டுமல்ல, உறுதியானவர் அதுதான் முக்கியம். தம்பி, உதயநிதி இங்கே குறிப்பிட்டுச் சொன்னார். இந்த திருமணத்தை அவர்கள் வீட்டு திருமணமாக நாங்கள் கருதவில்லை, இது எங்கள் வீட்டு திருமணமாக, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இது நம்முடைய வீட்டு திருமணமாக கருதிதான் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை நாமெல்லாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் எதிர்க்கக்கூடாது
கிருஷ்ணசாமி, நன்றியுரையாற்றுகின்ற போது குறிப்பிட்டுச் சொன்னார். அவருடைய தந்தையை அடையாளம் காட்டினார். தந்தைக்கு உரிய வணக்கத்தை எடுத்துச் சொன்னார். அப்படி சொல்கின்ற நேரத்தில் அவருடைய வரலாற்றையும் அவர் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார். அவருடைய தந்தை ஆதிசதாசிவம்.
1976-ஆம் ஆண்டில் நாம் ஒரு நெருக்கடி நிலையை சந்தித்தோம். நாட்டிற்கே நெருக்கடி வந்தது. அந்த நேரத்தில் எமர்ஜென்ஸியை நாம் எதிர்த்தோம். தலைவர் கலைஞர் -க்கு தூதுவர்கள் டில்லியிலிருந்து வருகிறார்கள். அம்மையார் இந்திராகாந்தி கொண்டு வந்திருக்கக்கூடிய அவசர நிலையை, எமர்ஜென்ஸியை நீங்கள் எதிர்க்கக்கூடாது. ஆதரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் எதிர்க்கக்கூடாது. அப்படி மீறி எதிர்த்தால், உங்கள் ஆட்சி உடனடியாக கவிழ்க்கப்படும். நீங்கள் எதிர்க்காமல் இருந்தால், இன்னும் உங்கள் ஆட்சி சில ஆண்டு காலம் தொடரும் என்று வந்த தூதுவர்கள், கோபாலபுரத்தில் உள்ள கலைஞரிடத்தில் சொன்னார்கள். அப்போது நான், அண்ணன் துரைமுருகன், டி.ஆர்.பாலு எல்லாம் அருகில் இருக்கிறோம். அப்போது கலைஞர் ஒரு வார்த்தையை சொன்னார். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், நாட்டிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடி சூழ்நிலையை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். நாங்கள் ஜனநாயகத்தைதான் நம்பியிருக்கிறோம். ஆட்சி அல்ல, எங்கள் உயிரே போனாலும், நாங்கள் இதற்கு சம்மதிக்கமாட்டோம் என்று தலைவர் கலைஞர், வந்த தூதுவரிடத்தில் சொல்லி அனுப்பினார்கள். இது வரலாறு.
கழக ஆட்சி கலைக்கப்படுகிறது
சொல்லி அனுப்பிவிட்டு, அடுத்த நாள் சென்னை கடற்கரையில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை திரட்டி, திரண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்தில் தலைவர் கலைஞர் முன்மொழிந்தார்கள். அம்மையார் இந்திராகாந்தி அவர்களே, நீங்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய அவசர கால நிலையை உடனடியாக திரும்ப பெறவேண்டும். எமர்ஜென்ஸியை இரத்து செய்யவேண்டும். மிசா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் வைத்திருக்கக்கூடிய தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், பல்வேறு இந்திய நாட்டின் தலைவர்கள் எல்லாம் வாடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று சொல்லி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை தலைவர் கலைஞர் முன்மொழிய குழுமியிருந்த மக்கள் அனைவரையும் எழுந்திருக்க வைத்து வழிமொழிய வைத்தார். தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த வினாடி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்படுகிறது. கலைக்கப்பட்டதற்கு பிறகு பலபேர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லாம் கைது செய்யப்படுகிறார்கள். அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியும். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு அதுவும் சென்னை சிறையில் நடந்த கொடுமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
சிறையில் அடைத்தார்கள். இதுதான் வரலாறு..!
எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், அந்த சூழ்நிலையில், நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களுடைய தந்தை ஆதிசதாசிவம் துணிச்சலானவர். பல பேர் வேட்டிக் கட்டுவதற்கே பயப்பட்டார்கள். அப்படியே வேட்டிக் கட்டினாலும், கருப்பு, சிவப்பு பார்டர் வைத்த வேட்டியை சிலபேர் கட்டமாட்டார்கள். அவ்வளவு பயம் சில பேருக்கு இருந்தது. உடனே கருப்பு, சிவப்பு உள்ள வேட்டியை பார்த்தால் கைது செய்து விடுவார்கள். அவ்வளவு கொடுமைப்படுத்தக்கூடிய நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. அந்த நேரத்தில் துணிச்சலோடு நம்முடைய கிருஷ்ணசாமி தந்தை ஆதிசதாசிவம் கழுத்தில் கருப்பு, சிவப்பு துண்டை அணிந்துகொண்டு காவல்நிலையத்திற்கு முன்பு நின்றுகொண்டு எமர்ஜென்ஸியை எதிர்க்கக்கூடிய அந்த வாதங்களை எல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய அந்த நிலையை பார்த்து அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதுதான் வரலாறு.
அப்போது சிறையில் இருந்த நேரத்தில் நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களே சொன்னார், அப்போது அவருக்கு வயது 10. அந்த 10 வயது சிறுவனாக இருந்து கிருஷ்ணசாமி தன்னுடைய தந்தையை பார்க்க சிறைக்கு சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் எல்லாம் தன்னுடைய தந்தை சொல்கின்றபோது, அவருக்கு கோபம் வரவில்லை, அதற்கு நேர்மாறாக என்ன வந்தது என்றால், உணர்ச்சி வந்தது. அந்த உணர்ச்சி எல்லாம் கடந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பற்று வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவருக்கு ஈடுபாடு வந்ததற்கு காரணம் என்ன என்று கேட்டால், அவர் தந்தை கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த காட்சிதான் அவர் திமுக மீது இன்றைக்கு ஈடுபாடு கொண்டு, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியில் பல பொறுப்புகளை ஏற்று, செயல்படுத்தக்கூடிய நிலையில் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறார்.
அந்த 10 வயதில், நம்முடைய கிருஷ்ணசாமி
இளைஞர் அணி தொடங்கப்பட்டபோது நான்தான் அந்த பொறுப்பில் இருந்தேன் உங்கள் எல்லாருக்கும் தெரியும். அப்போது இளைஞர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு நம்முடைய கிருஷ்ணசாமி அந்த பகுதியில் கிளைக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிய அந்த நிகழ்ச்சி. அவரே பேசுகின்றபோது சொன்னார், என்னை அழைத்துக்கொண்டு கொடியேற்று விழா நடத்திய நேரத்தில், கொடியை ஏற்றிவிட்டு, ஏன் கல்வெட்டு இல்லை என்று கேட்டேன். கல்வெட்டு மட்டும் கேட்கவில்லை, நிதியும் கேட்டேன். அப்போது நிதியும் கொடுக்கவில்லை. இன்றைக்கும் அவர் கடனாளியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால், எப்படி வசூலிப்பது என்று எனக்கு தெரியும். அது அல்ல முக்கியம். எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால், அந்த 10 வயதில், நம்முடைய கிருஷ்ணசாமி இயக்கத்தில் பற்று கொண்டு அந்த வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி, படிப்படியாக வளர்ந்து, அவர் சட்டக் கல்லூரியில் மாணவரணி பொறுப்பேற்று பணியாற்றி, அதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர் அணியில் தன்னை இணைத்துக்கொண்டு. ஆதிதிராவிடர் நலக்குழுவில் அவர் பொறுப்பேற்று பணியாற்றி, அதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை, அதாவது நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்கள் என்று சிலரை குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. அந்த குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவராக இருந்தவர்தான் நம்முடைய கிருஷ்ணசாமி.
உங்களுக்கு நன்றாக தெரியும்
இதை தலைவர் கலைஞர் சொன்னால் கூட நான் பெரிதுபடுத்தியிருக்க மாட்டேன். ஆனால், நம்முடைய மறைந்த ஒன்றிய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் பலமுறை சொல்லியிருக்கிறார். அவர் வாயில் இருந்து வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அவரே சொல்லியிருக்கிறார். பலமுறை என்னிடத்தில் சொல்லியிருக்கிறார். தலைவரிடத்திலும் சொல்வார், மாமா, கிருஷ்ணசாமி, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்தால், உட்கார்ந்ததுதான், எழுந்து போகமாட்டார். அவ்வளவு உன்னிப்பாக கவனித்து அனைத்து பிரச்சனைகளையும் கூர்ந்து கவனிக்கக்கூடிய ஆற்றலை பெற்றிருக்கக்கூடியவராக இருக்கிறார் என்று பலமுறை சொல்லியிருக்கிறார். நானும் அதை கேட்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் நூல் நிலையம் இருக்கிறது. அந்த நூல்நிலையத்தை பலபேர் பயன்படுத்த மாட்டார்கள். சிலபேர் தான் பயன்படுத்துவார்கள். அதையும் முறையாக பயன்படுத்தியவர்தான் நம்முடைய கிருஷ்ணசாமி. அவர்தான் இன்றைக்கு பூவிருந்தவல்லி தொகுதியில் இடைத்தேர்தல் வந்தபோது அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அதற்குப் பின்னால் இப்போதும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் பணியாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றிக்கின்றபோது நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது இன்றைக்கு நாட்டில் உள்ள நிலைமை எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.
இது என்ன கேலிகூத்து!
ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில்தான் இன்றைய சூழ்நிலை அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பிஜேபி ஆட்சி, தனக்கெதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும், அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக IT-ஐ, EDஐ அதாவது அமலாக்கத்துறையை, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தொலைபேசியை டேப் செய்கின்ற முயற்சியை கையாண்டிருக்கிறார்கள். ஆப்பிள் என்ற ஒரு பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களே எச்சரித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் இதுபோல ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று அவர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கடிதம் எழுதியிருக்கிறார்கள். இப்படி செய்தி வந்தவுடனே, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்கிறார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். இது என்ன கேலிகூத்து! செய்வது எல்லாம் செய்துவிட்டு இன்றைக்கு விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று செய்தியை வெளியிடுகிறார் என்று சொன்னால், அந்த அளவுக்கு நாட்டில் இன்றைக்கு ஒரு கொடுமையை சந்திக்கக்கூடிய நிலையில் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு அவர்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியைப் பார்த்து தோல்வி பயம் வந்துவிட்டது.
பயம் வந்துவிட்டது.
இங்கே இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உட்கார்ந்திருக்கிறோம். இந்தியா கூட்டணி இன்றைக்கு எதிர்பாராத வகையில் அவர்கள் எதிர்பாராத வகையில் அமைந்திருக்கிறது. இன்றைக்கு மக்களிடம் சென்று, மோடி ஆட்சியின் கொடுமைகளை, அக்கிரமங்களை, அநியாயங்களை, அவலநிலைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஐந்து மாநில தேர்தல்கள் வர இருக்கிறது. நமக்கு கிடைக்கக்கூடிய செய்திகள் எல்லாம் ஐந்து மாநிலத்திலும் பிஜேபி தோல்வியை தழுவப் போகிறது என்ற செய்திதான் வந்து கொண்டிருக்கிறது. அதனால் அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. பயம் வந்துவிட்டது. அந்த பயத்தின் காரணமாகத்தான், இன்றைக்கு இதுபோன்ற செயல்களில் எல்லாம் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் முறியடித்து, நாட்டிற்கு ஒரு நல்ல விமோசனத்தை உருவாக்கித் தருவதற்கு, இந்தியாவை காப்பாற்றுவதற்கு, இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அத்தனை பேரும் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு, அந்த வெற்றியை தேடி தரக்கூடிய படைவரிசையில் கிருஷ்ணசாமி இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய செயல்பாடு வெற்றி பெறவேண்டும்.
வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்..!
அவருடைய அன்புச் செல்வங்கள் இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கிறார்கள். மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.