வருமான வரிச்சட்ட விதிமுறைகளை மீறிய இரண்டு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்குத் தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
2023-24 நிதியாண்டில், வருமான வரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) மண்டலத்தில், வேண்டுமென்றே வருமான வரிப்படிவம் சமர்ப்பிக்கத் தவறியதற்காகவும், வேண்டுமென்றே வரி செலுத்தத் தவறியதற்காகவும் மற்றும் பொய்யான அறிக்கை / உறுதிமொழி அளித்ததற்காகவும், வருமான வரிச்சட்டம், 1961, பிரிவு 276CC, 276C(1), 276C(2) மற்றும் 277இன் கீழ் திலீப்குமார் மேத்தா மற்றும் பிரவீன் குமார் மேத்தா ஆகிய இரண்டு தனி நபர்கள் மீது வழக்கு விசாரணை தொடுக்கப்பட்டு, சென்னை, கூடுதல் பெருநகர நீதிபதி (பொருளாதார குற்றங்கள் – 1) அவர்களால் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
2013-14 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிப்படிவத்தில் அசையாச் சொத்தை விற்பனை செய்ததன் விளைவாக பெறப்பட்ட ரூ.6.30 கோடிக்கான மூலதன ஆதாய வருமானத்தையும் (Capital Gain) சேர்த்து தாக்கல் செய்யத் தவறிவிட்டனர், மேலும் அதற்கான வரியையும் செலுத்தவில்லை. மேலும், 2013-14 மதிப்பீட்டு ஆண்டுக்கான, தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிப் படிவத்தில் மூலதன ஆதாயங்களுக்கான வரியை செலுத்தியதாக மேற்கண்ட இரண்டு நபர்களும் பொய்யாக தெரிவித்துள்ளனர். வரிவிதிப்புக்கு உரியவர்களான மேற்கண்ட இரண்டு நபர்கள் செய்த குற்றங்களை கவனத்தில் கொண்டு மாண்புமிகு பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
அரசுத் தரப்பில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை விசாரித்த பின்னர், சென்னை, பொருளாதார குற்றங்கள்-1, மாண்புமிகு கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி, 27.09.2023 தேதியிட்ட உத்தரவில், அனைத்து குற்றங்களும் வரிவிதிப்புக்கு உரிய இருவருக்கும் எதிராக நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கி உத்திரவிட்டார். சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு. எல். முரளிகிருஷ்ணன், இந்த இரண்டு வழக்குகளிலும் அரசுத் துறையின் சார்பில் ஆஜரானார்.
வரிவிதிப்புக்கு உரியவர்களான இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, இருவருக்கும் வருமான வரிச்சட்டம், 1961 பிரிவு 276 சிசி மற்றும் 277-ன் படி நிருபிக்கப்பட்ட குற்றத்திற்கு, தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.50,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், வருமான வரிச்சட்டம், 1961 பிரிவு 276C(1) மற்றும் 276C(2) படி நிருபிக்கப்பட்ட குற்றத்திற்காக தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ 25,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், இந்த தண்டனைகள் அனைத்தும் ஒரு சேர அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.