வழக்கறிஞர் படிப்புகான கிளாட் நுழைவுத் தேர்வுக்கு நவம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, வரும் டிசம்பர் 3- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர ‘கிளாட்’ எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்.எல்.பி மற்றும் எல்.எல்.எம் படிப்புகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், மத்திய அரசின் பணிகளுக்கும் இந்த தேர்வு முக்கியமான ஒன்று.
அதேபோல தேசிய சட்டப்பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின்அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
இந்நிலையில், 2024-25-ம் கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க இருப்பதையொட்டி, கிளாட் தேர்வு வரும் டிச.3-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளத்தில் வரும் நவம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இப்போது, கடைசி தேதி நவம்பர் 10 வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.4 ஆயிரமும், எஸ்சி, எஸ்டிபிரிவினர் ரூ.3,500-ம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8047162020 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். Email: clat@consortiumofnlus.ac.in கிளாட் தேர்வுக்கு விண்ணப்பிக்க https://consortiumofnlus.ac.in/ என்ற முகவரியில் ஆன்லைனில் தொடர்பு கொள்ள வேண்டும்.
திருச்சி தேசிய சட்டப்பள்ளி மற்றும் மத்திய அரசின்கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இந்த கிளாட் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும், வேலூர் விஐடி, தஞ்சாவூர் சாஸ்திரா போன்ற தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் இந்த கிளாட் மதிப்பெண் அடிப்படையில் சட்ட மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. அனால், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் இந்த நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.