இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இக்கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு எழுத ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர், Rashtriya Indian Military College என்று அழைக்கப்படும் இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியை 1922 ஆம் ஆண்டு டேராடூன் நகரில் தொடக்கினர். தற்போது இதனை, இந்திய அரசு நடத்துகிறது.138 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கல்லூரியில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் இருமுறை, நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இக்கல்லூரியில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வழக்கமான பாடங்களுடன், அடிப்படை இராணுவப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
அத்தகைய சிறப்பு வாயந்த ராணுவக் கல்லூரியில் 2025 -ஆம் ஆண்டிற்கான 8 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு இப்போது வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ – மாணவிகள், ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதி அன்று, சென்னையில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்பதாரர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது அவர்கள், 2012 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்கு முன்னதாகவும் 2013 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. 2025 -ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
மாணவ – மாணவியர் சேர்க்கையானது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும். எழுத்து தேர்வில் ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்களைக் கொண்டது. எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்வானது விண்ணப்பத்தாரர்களின் அறிவுக்கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும்.
இத்தேர்விற்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்வு வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஷிகாண்ட், டேராடூன், உத்ரகாண்ட், 248003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில்செலுத்தத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் 600 ரூபாய்க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிவகுப்பினர் சாதிச்சான்றுடன் 555 ரூபாய்க்கும் கேட்பு காசோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். அல்லது ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் உரிய தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் இரட்டையாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை- 600003 என்ற முகவரிக்கு ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
புகழ்மிக்க ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரில் சேர்ந்து படிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவ – மாணவியர் உடனே விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கை அறிக்கையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் NOTIFICATION FOR RIMC ENTRANCE EXAM JUN 2024 செய்யலாம்.