’’முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த முன் மாதிரியான திட்டங்களால், Start-Up தர வரிசையில் இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு, 3-ஆம் நிலைக்கு முன்னேறி ‘‘லீடர்” தகுதியை பெற்றுள்ளது’’ என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், செம்மஞ்சேரி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் 8.11.2023 அன்று நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதல் Artificial Intelligence Incubator _ஐ குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
இன்றைய விஞ்ஞான உலகில் மின்சாரத்திற்கு அடுத்தபடியாக உலகில் அனைத்து இடங்களிலும் பரவி இருப்பது கணினி வளர்ச்சி. தொழில்நுட்ப கல்வியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ரோபோடிக்ஸ், நானோ டெக்னாலஜி தற்போது புதிய துறையான ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence) மெக்கானிக்கல் லெர்னிங் (Mechanical Learning) வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) என்று பல்வேறு பிரிவுகளாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியா வெற்றிகரமாக செலுத்திய சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய போது,அங்கிருந்த பெரும் பள்ளத்தை உடனடியாக கண்டறிந்து மாற்று இடத்தை தேர்ந்தெடுத்து அதில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் எனும் (Artificial Intelligence) தொழில்நுட்பம் தான்.
ஹவே (HaiVE) நிறுவனம்
வளர்ந்து வரும் Artificial Intelligence துறையின் மூலம் மாநில, ஒன்றிய தனியார் துறைகளின் தகவல்களை பாதுகாக்கும் வகையில், இணையப் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க ஒரு புதிய தொழில் நுட்பத்தை சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் ஹவே (HaiVE) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தை நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பயிற்றுவிக்க இந்த Business Incubation Centre துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு உதவியாக இருந்த ஹவே நிறுவனத்தின் உரிமையாளர் ஹெல்லெர் அவர்களுக்கும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக பொறுப்பினை ஏற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ததீபிகா லோகநாதன் -க்கும் இவர்களுடன் இணைந்து செயலாற்றும் AI Venture Factory நிறுவனத்தின் CEO அர்ஜுன் -க்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொழில் வளர் காப்பகங்கள்
AI Venture Factory லாப நோக்கமற்ற அமைப்பாக மாணவர்களின் நலன் கருதி 15 மில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னையில் Business Incubation Centre ஐ துவக்கியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சராசாரியாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு இந்த தொழில் நுட்ப பயிற்சி அளிக்கபட உள்ளது. இதில் பயிற்சி பெறும் இளைஞர்கள் மாணவ – மாணவியர்கள் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் சுய தொழில் தொடங்கவும் முடியும். இது போன்ற ஒரு பெரிய வாய்ப்பினை நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த ஹெல்லெர் தீபிகா லோகநாதன் அர்ஜுன் -க்கும் மீண்டும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் தலைமையிலான கழக அரசு தமிழ்நாட்டில் உள்ள, கல்லூரி மாணவர்களை இளம் தொழில்முனைவோர்களை வளர்த்தெடுக்க 101 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தொழில் வளர் காப்பகங்கள் – Incubation Centres அமைத்து உள்ளது. இந்த இன்குபேஷன் சென்ட்டர்களை மேம்படுத்த ரூ. 19 கோடியே 84 லட்சம் அரசு வழங்கியுள்ளது.
266 புதிய கண்டுப்பிடிப்பாளர்கள்
தமிழகத்தில் உள்ள 1545 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 31 இடங்களில் தொழில் முனைவோர் மையங்கள்- Hubs அமைக்கப்பட்டு தொழில் துவங்க உதவிகளும் ஆலோசணைகளும் வழங்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்ற 50 மாணவர்களுக்கு தங்களின் புதிய கண்டுப்பிடிப்புகளுக்காக ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாக்க சிந்தனைக் கொண்ட நம் இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்திட தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஆட்சி பொறுப்பேற்று, இது வரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 812 இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், 266 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு ரூ. 7 கோடியே 39 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ‘‘லீடர்”
கழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் பள்ளி மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். 4,343 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர்களாக மாற விழிப்புணர்வும், ஆலோசனையும் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 40 மாணவ குழுக்களின் சிறந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. கடந்த ஜீன் மாதம் நடைபெற்ற MSME தின விழாவில் முதல்வர் திருக்கரங்களால் மாநில அளவில் வெற்றி பெற்ற 10 சிறந்த மாணவ குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
புதிய கண்டுபிடிப்புகளை வர்த்தக ரீதியாக சந்தைப்படுத்த, மாண்புமிகு முதல்வர் அவர்கள் Start-Up -TN என்ற இயக்கத்தை துவக்கி, அதற்கான நிதியினை ஒதுக்கி புதிய திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். முதல்வரின் முன் மாதிரியான திட்டங்களால், Start-Up தர வரிசையில் இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு, 3-ஆம் நிலைக்கு முன்னேறி ‘‘லீடர்” தகுதியை பெற்றுள்ளது. Start-Up -TN மூலம் இதுவரை 153 – ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.41 கோடியே 96 லட்சம், பங்குகளாக முதலீடாக வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய தொழில்முனைவோர்கள்
இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக 5 வகையான சுய தொழில் திட்டங்களை கழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2 ½ ஆண்டுகளில் NEEDS-UYEGP-PMEGP – PMFME அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய 5 திட்டங்களின் கீழ், ரூ. 827 கோடியே மானியத்துடன், ரூ.2,503 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 28,325 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்
இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ள Business Incubation Centre மூலம் புதிய தொழில் நுட்பத்தை கற்று கொள்ளும் இளைஞர்கள் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு சுய தொழில் திட்டங்களை பயன்படுத்தி நீங்களும் ஒரு தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பள்ளி கல்வி துறை செயலாளர் குமரகுருபரன்
இந்நிகழ்ச்சியில் MSME அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் துறை அரசு செயலர் அருண் ராய், பள்ளி கல்வி துறை செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, இணை தலைமை செயல் அதிகாரி ரமணா சரஸ்வதி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செயின்ட் ஜோசப் கல்வி குழும தலைவர் பாபு மனோகரன், நிர்வாக இயக்குநர் சாஷி சேகர், Hiller Marine நிறுவன தலைமை செயல் அதிகாரி மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.