தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘’தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (9.05.2023) முகாம் அலுவலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ச. நந்தினி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பள்ளிக்கல்வித் துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி ச.நந்தினி, தமிழ்நாடு முதலமைச்சரை தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் இன்றையதினம் முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, முதலமைச்சர், அம்மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க. நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்’’ இவ்வாறு செய்திக்குறிப்பில் டப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து செய்தியில், ‘’குடும்பச்சூழலோ – பொருளாதார நிலையோ வெல்வதற்கு தடையில்லை என, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்துள்ள தங்கை நந்தினியை இன்று நேரில் வாழ்த்தினோம். கல்வியே அழியாத சொத்தென்று முழங்கிய அவரது உயர்கல்விக்கு துணை நிற்போமென அன்பை வெளிப்படுத்தி, நந்தினிக்கு உத்வேகமளித்த குடும்பத்தார் – ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தோம்’’ என்று கூறியுள்ளார்.
முதல் மாணவி நந்தினி கூறுகையில், ‘’முதலமைச்சரையும் விளையாட்டுத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் சிறப்பாக படித்து சாதிக்க வேண்டும் என்று அவர்கள் ஊக்கப்படுத்தினர். ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே லட்சியம். 600/600 மதிப்பெண் எடுத்ததால் என்னை சாதனை மாணவி என்று அழைத்து பாராட்டுகிறார்கள். வாழ்த்து சொல்கிறார்கள். எனது அப்பா, அம்மா, ஆசிரியர்கள், உறவினர், பிரண்ட்ஸ் கொடுத்த உற்சாகமே இந்த வெற்றிக்கு காரணம். அவர்களை ஒருநாளும் மறக்க மாட்டேன். கடந்த இரண்டு நாட்களாக எங்கிருந்தெல்லாமோ வாழ்த்து மழை, பாராட்டுக்கள் வந்து கொண்டு இருக்கிறது. முதல்வரையும் அமைச்சர் உதயநிதியையும் சந்தித்தது எனது வாழ்வில் மறக்க முடியாத நாள்’’ என்றார்.