2025-ம் ஆண்டுவாக்கில் முதலாவது இந்தியர் விண்வெளிக்குப் பயணம் செய்வதையும் மற்றொருவர் ஆழ்கடலுக்குப் பயணம் செய்வதையும் உலகம் காணவிருக்கிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
புதுதில்லியில் இன்று நடைபெற்ற பாரத் 24 நியூஸ் நெட்வொர்க் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இத்தகவலை தெரிவித்தார்.
விண்வெளியிலும் கடல் சார் துறையிலும் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அவர், இந்தியாவிடமிருந்து மனிதருடன் விண்வெளிக்கு முதலாதாக பயணம் மேற்கொள்ளும் ககன்யானுக்கு 3 குரூப் கேப்டன்கள் ஒரு விங் கமாண்டர் என நான்கு விண்வெளி வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார். அதே போல் இந்தியாவில் ஆழ்கடல் பயணத்தில் 3 இந்தியர்கள் 2025-ல் ஆழ்கடலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
விண்வெளித்துறை ஏற்கனவே, செயற்கைக் கோள்கள் செலுத்துவதோடு மட்டுப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக்கப்பூர்வமான அதன் வளர்ச்சி காரணமாக வேளாண்மை, அடிப்படைக் கட்டமைப்பு, தகவல் தொடர்பு, சுகாதாரம், நில ஆவண நிர்வாகம், மண்வள அட்டை, நேரடி பயன் பரிமாற்றம், நில வரைபடம் ஆகியவற்றிலும் தாக்கத்தை செலுத்துகிறது. இது வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
2022-ல் விண்வெளி தொடர்பாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இருந்த நிலையில், விண்வெளித்துறையைத் தனியார் பங்கேற்புக்குத் திறந்தபின், சுமார் 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார். ஒரு சில மாதங்களில் விண்வெளித்துறைக்கு 1,000 கோடி ரூபாய் தனியார் முதலீடுகள் வந்திருப்பதாக அவர் கூறினார்.
தேசிய குவாண்டம் இயக்கத்தை நாம் பெற்றுள்ள நிலையில், குவாண்டம் தொழில்நுட்பங்களில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் விளங்குகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.