அதிகபட்சமாக இங்கிலாந்து ஐந்து டெஸ்டுகளிலும், ஆஸ்திரேலியா நான்கு டெஸ்டுகளிலும், தென்னாப்பிரிக்கா மூன்று டெஸ்டுகளிலும் விளையாடுகின்றன.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்127 ஒருநாள் ஆட்டங்களிலும், 154 டி20யிலும் விளையாடியிருக்கிறார். ஆனால், இவர் விளையாடிய டெஸ்டுகளின் எண்ணிக்கை வெறும் மூன்றுதான். இதன் காரணமாக நிறைய டெஸ்டுகளின் தேவை குறித்து ஹர்மன்பிரீத் கௌர் பேசியிருக்கிறார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் பாட்காஸ்டில் ஹர்மன்பிரீத் கௌர் கூறியதாவது:
“கிரிக்கெட்டராக நிச்சயமாக எனக்கு நிறைய டெஸ்டுகள் தேவை. காரணம், குழந்தைப் பருவத்தில் டி20 போட்டிகளைவிட டெஸ்டுகளை தான் நிறைய தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளோம். ஒவ்வொரு கிரிக்கெட்டரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடவே விரும்புவார்கள்.
இந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடன் இரண்டு டெஸ்டுகள் நடைபெறவுள்ளன. இந்த ஆட்டங்கள் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கிறேன். எதிர்காலத்தில் நிறைய டெஸ்டுகள் கிடைக்கும் எனவும் நான் நம்புகிறேன்.
மகளிர் கிரிக்கெட்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட் அவசியம் என்பதால் அதைத் திரும்ப கொண்டு வர வேண்டும்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளன. நான் விளையாடத் தொடங்கியபோது, உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் உள்நாட்டு கிரிக்கெட்டின் தரம் நிறைய முன்னேறியுள்ளது. நிறைய ஆட்டங்கள் கிடைக்கின்றன. நேரலை செய்யப்படுவதால் சில ஆட்டங்களை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கிறார்கள்.
இது நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஆனால், என்னுடைய தொடக்க காலத்தில் இருநாள் ஆட்டங்கள், மூன்று நாள் ஆட்டங்கள் நடைபெறும். அவை தற்போது இல்லை. இந்த இரு டெஸ்டுகளுக்குப் பிறகு (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) இருநாள் ஆட்டங்களும் திரும்ப நடைபெறத் தொடங்கும் என நம்புகிறேன். நிறைய கிரிக்கெட் விளையாடினால், மகளிர் கிரிக்கெட் நிறைய மேம்படும்.
இந்திய அணியில் இன்னும் நிறைய திறமைசாலிகளைக் காண ஆவலுடன் இருக்கிறேன். மகளிர் பிரீமியர் லீக் எங்களுக்குத் திருப்புமுனையான ஒன்று. இந்தத் தொடர் சிறப்பாக நடைபெறுகிறது. அனைவரும் விரும்புகிறார்கள். எங்களுக்கும் அற்புதமான அனுபவமாக அது அமைந்தது. கிரிக்கெட்டை மேலும் பல உயரத்துக்கு அழைத்துச் செல்லும் இன்னும் நிறைய இளம் திறமைகள் அடுத்த வருடம் கிடைப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் ஹர்மன்பிரீத் கௌர்.
ஐபிஎல் வெற்றியைத் தொடர்ந்து, மகளிர் டி20 லீக்கின் தேவை குறித்து ஏராளமான குரல்கள் எழுந்தன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு 2023-ல் மகளிர் பிரீமியர் லீக் டி20 நடைபெற்றது. இதில் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்றது.
2017-18-ல் மண்டலங்களுக்கு இடையே மூன்று நாள் கிரிக்கெட் தொடரை நடத்தியது பிசிசிஐ. 19 வயதுக்குள்பட்டோருக்கான இரு நாள் ஆட்ட கிரிக்கெட் தொடரையும் பிசிசிஐ நடத்தியது. மகளிர் பிரீமியர் லீக்கைப்போல மீண்டும் மூன்று நாள் கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படும் என்பதே ஹர்மன்பிரீத் கௌரின் எதிர்பார்ப்பாக உள்ளது.