பெண் தொழிலாளர் நலன் குறித்து மாநில அளவிலான கருத்து பகிர்வு மற்றும் ஆலோ சனைக் கூட்டம் ‘தோழி’ கூட்டமைப்பின் சார்பில் சென்னை எழும்பூரில் செவ்வாயன்று (ஜூலை 4) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உ.வாசுகி பேசுகையில், “தொழிலாளர்கள் இல்லாமல் இந்த சமூகத்தினுடைய சக்கரம் சுழல்வதற்கான வாய்ப்பே இல்லை என்பது ஆட்சியா ளர்களுக்கும், திட்டமிடுபவர்களுக்கும் தெரி யும். ஆனால் தொழிலாளர்களுடைய மேம்பாடு, வாழ்க்கை தரத்திற்கான ஊதிய உயர்வு, ஆரோக்கியமான பணிச்சூழல் இவையெல் லாம் இன்னும் கோரிக்கைகளாகவே உள்ளன. தொழிலாளர்களின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என இடதுசாரி கட்சிகள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின் றன. மதிய உணவு அருந்தக் கூட சில நிறுவனங்களில் போதிய நேரம் ஒதுக்குவதில்லை; பாம்பு, பல்லி நடமாட்டம் உள்ள இடங்களில் பணி செய்யும் நிலை உள்ளது.
சமூக பாது காப்போடு கூடிய வேலை என்பது இன்றைக்கும் கேள்விக்குறியாக உள்ளது. பணியில் இருந்து ஓய்வுபெறும் போது ஏதாவது கொஞ்சம் பணம் கையில் இருக்க வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் வெறும் கையோடு அனுப்புகின்றன. பிஎப் தொகை பிடிக்கப்பட்டாலும் அதை முறையாக செலுத்துவதில்லை. மேலும் ஆதார் கார்டு கொடுக்கவில்லை, கையெழுத்து சரியாக இல்லை என ஏதாவது காரணத்தைக் கூறி நிறுவனங்கள் ஏமாற்றும் சூழ்நிலை இன் றும் நிலவுகிறது” என்றார்.
பேராசிரியர் மீது பாலியல் புகார்
“தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பது தொழிற்சங்க இயக்கங்கள் மட்டும்தான். உழைப்பாளி மக்கள் பங்கேற்கிற அரசி யல்தான் தொழிலாளர்களை பாதுகாக்கும் தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் பெரும்பாலான நிறுவனங்கள் அதை அமல்படுத்துவதில்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்தார்கள். அதையொட்டி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் தலை வரும், உறுப்பினர்களும் உதவி பேராசிரி யர்களாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் மீது அவருக்கு கீழ் நிலையில் இருப்பவர்கள் எப்படி விசாரணை நடத்த முடியும் எனக் கேள்வி எழுப்பினார். முறையாக விசாரணை நடைபெறவில்லை என்றால் புகார் அளித்தவர் மீண்டும் பாதிக்கக்கூடிய நிலை உள்ளது” என்றும் வாசுகி கூறினார்.
எனவே, அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக விசாரணைக்குழு அமைக்க வேண்டும், முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் போன்றவற்றில் மகளிர் ஆணையம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சாதிய பாகுபாடு பல இடங்களில் மேலோங்கி வருகிறது. வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால், குறிப்பாக அந்த இளைஞர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் அந்த இளைஞரையோ அல்லது அந்த பெண்ணையோ பெற்றோரே கொலை செய்யும் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்கள் என்ற அடிப்படையில், உழைப்பு சுரண்டப்படுகிறது என்ற அடிப்படையில் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவை உள்ளது என்பதை புரிந்து கொண்டு, கோரிக்கைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் போது, அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், சமூக அவலங்களுக்கு எதிராகவும் பெண்கள் போராட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மகளிர் ஆணையம் தலைவர் ஏ.எஸ்.குமாரி
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் தலைவர் ஏ.எஸ்.குமாரி பேசுகையில், ஆய்வுக்கு சென்ற போது பல நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய பெண்களுக்கு உள்ளக புகார் குழு என்பதைப் பற்றி தெரியவில்லை. ஒரு நிறுவனத்தில் 4 ஆயிரம் பெண்கள், 5 ஆயிரம் ஆண்கள் என 9 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அதில் புலம்பெயர்ந்த பெண்கள் அதிகம். பெண்களுக்கென விடுதியும் இருந்தது. ஒரு விடுதியில் 1000 பேரையும், மற்றொரு விடுதியில் 800 பேரை யும் அடைத்து வைத்தது போல் இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளையும் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறது. உள்ளக புகார் குழு விசாரணையின் போது, குற்றம் நிரூபிக்கப்பட்டவர் பெரிய பதவியில் இருந்தால் ராஜினாமா கடிதம் வாங்கி விடலாம் என்பார்கள்.
சாதாரண நபராக இருந்தால் நட வடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. ஆணையத்தின் கவனத்திற்கு வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்கிறோம். கல்வி நிலையங்களுக்கு சென்று உள்ளக புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். கேரளாவில் உள்ளக புகார் அமைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் அபராதம் விதிக்க வேண்டும் என்று அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு பரிந்துரைக்கலாம். பெண்கள் தைரியமாக உள்ளக புகார் குழுவிடம் புகார் அளிக்க வேண்டும். நடவடிக்கை இல்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம். அங்கும் நடவடிக்கை இல்லையென்றால் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமாரி கூறினார்.
காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சிந்தனைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். பெண் தொழிலாளர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் அமைப்பின் நிர்வாகிகள் எம்.சங்கர், ஆர்.சரஸ்வதி, அமீர்கான், தேவநேயன், கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.