spot_img
More
    முகப்புசெய்திகள்உலகம்’’பெரியார்: அவர் ஏன் பெரியார்..?’’ பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீடு..! சென்னையில் 3-ம்...

    ’’பெரியார்: அவர் ஏன் பெரியார்..?’’ பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீடு..! சென்னையில் 3-ம் தேதி விழா

    சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையில் 03.05.2023 (புதன் கிழமை) அன்று முழுவதும் ‘பெரியார்: அவர் ஏன் பெரியார்’ எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

    சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையில் 03.05.2023 (புதன் கிழமை) அன்று முழுவதும் ‘பெரியார்: அவர் ஏன் பெரியார்’ எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

    ஊடகவியலாளர் ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’ எனும் ஆய்வு நூலின் மீதான விமரிசனக் கருத்தரங்கமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கக் கட்டுரைகள் ‘பெரியார்: அவர் ஏன் பெரியார்’ எனும் தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டு, கருத்தரங்க நாளன்றே மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்களால் வெளியிடப்பட உள்ளது.

    மாநிலக் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.இராமன், தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் சீ.இரகு ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.

    சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு அவர்களின் தொடக்கவுரையோடு, எழுத்தாளர் சு.வேணுகோபால், வவுனியன் (எ) இரா.சுப்பிரமணி (‘நமக்கு ஏன் இத்தனை எதிரிகள்’ நூலின் ஆசிரியர்), பேராசிரியர் ஹாஜாகனி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு ஆளுமைகள் இக்கருத்தரங்க நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

    மாலை நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பெருமாள்முருகனின் நிறைவுரையோடு, மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூலை வெளியிட்டு பெரியார் குறித்துச் சிறப்புரையாற்றுகிறார்.

    தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் தன் வாழ்நாளின் இறுதிவரை களமாடிய தந்தை பெரியார், நம் உரிமைகளை நிலைநாட்ட எதிர்த்தரப்பாரோடு போராடுவது மற்றும் நம் சொந்தத் தரப்புக்குள்ளேயே அதன் மடைமைகளை எதிர்த்துப் போராடுவது என்கிற இரண்டு நிலைகளிலும் தீவிரமாகச் செயல்பட்டவர். தன்னுடைய சொந்தத் தரப்பை விமரிசித்துப் பேசிய பெரியாரின் வார்த்தைகளின் வழியாகவே அவரைத் ‘தமிழர் விரோதி’ என்பதாகக் கட்டமைக்கும் அறமற்ற அவதூறை எதிர்த்து எழுதப்பெற்ற ஆய்வுநூலே ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’ எனும் நூல்.

    இந்த நூலை அடிப்படையாக வைத்தே பன்னாட்டுக் கருத்தரங்கம், 31 கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு என்பதாகக் கல்விப் புலத்தில் நிகழ்வது ஆய்வுலகின் மைல்கல் என்றே கூறலாம். அதுவும் மாநிலக் கல்லூரியிலிருந்து வெளிவருவது சாலப் பொருத்தமானதாகும். ஏனெனில் 1969 – 70 காலக்கட்டங்களில் தந்தை பெரியார் இக்கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களில் உரையாற்றியவர்.

    தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாய முதலியார், சென்னை, மாநிலக் கல்லூரியில் பணியாற்றியபோது அவருடைய மாத ஊதியம் ரூ.81. அதே கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியற்றிய குப்புசாமி சாஸ்திரிக்கு ரூ.300-க்கு மேல் ஊதியம். இந்நிலையைக் கண்டித்து பெரியார் ஒரு தலையங்கத்தை எழுதினார். உடனே அன்று நீதிக்கட்சியின் ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர், அரசாணை வெளியிட்டு அந்த வேற்றுமையை ஒழித்தார் என்பதே வரலாறு.

    மேலும், மறைமலையடிகளாரின் ‘அறிவுரைக்கொத்து’நூல் 1935-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டபோது பார்ப்பனர்கள் பலரும் எதிர்த்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகக் கல்விக் குழுக் கூட்டத்தில் மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியரும் ஒப்பியன் மொழியியல் ஆய்வாளருமான மகாமகோபாத்தியாய குப்புசாமி சாஸ்திரி, உறுப்பினர்கள் சாரநாதன், டாக்டர் ஏ.இ.லட்சுமணசாமி முதலியார் போன்றோர் ‘‘மதம், நம்பிக்கை, மக்களின் வாழ்க்கை, உரிமை, உயிர் ஆகியவற்றிற்கு இந்நூல் ஊறு விளைவிக்கிறது’’ என இறுதியில் தமிழ்ப் பாடத்திட்டக் குழுவிற்குப் பரிந்துரைத்தபோது அதை எதிர்த்து ‘அரசியல் நோக்கில்’ அந்நூலை அரவணைத்தது பெரியார் இயக்கம்!

    திராவிட மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை ‘மொழி விடுதலை’ நோக்கில் முன்னெடுத்துப் பெருந்திரளான மாநாட்டுப் பந்தல்களில் கொண்டு சேர்த்தது ‘பெரியார் இயக்கம்!’

    பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ‘தனித்தமிழ் இதழியல்’ இடையறாமல் நிலைக்க உடன் உறை ஊக்கமாக வந்தவர்கள் ‘விடுதலை நாளேட்டின்’ வாசகர்களே!

    தமிழ் மறவர் புலவர் வை.பொன்னம்பலனார், பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து, பேராசிரியர் முனைவர் பொற்கோ ஆகியோரைத் ‘தமிழ் மூவர்’ என்று அழைத்து, இவர்கள் தலைமையில் ‘தமிழ் ஆராய்ச்சிக் குழு’ அமைக்க விரும்பியவர், தந்தை பெரியார். மேலும், ‘‘இவர்கள் சொல்லும் நூல்களையும் கருத்துகளையும் என் தலைமேல் சுமந்து மக்களிடம் பரப்பத் தயாராக இருக்கிறேன்’’ என்று பிரகடனம் செய்தவர்.

    இத்தகு சிறப்போடு விளங்கிய பெரியார் குறித்து மாநிலக் கல்லூரி நடத்தும் இக்கருத்தரங்கம் பெரும் வரவேற்புக்குரியது. 03.05.2023 காலை 9:55 மணிக்குத் தொடங்கி, மாலை 5:05 மணிக்கு இக்கருத்தரங்கம் நிறைவு பெறுகிறது. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். 

    கட்டுரையாளர் – முல்லை வேனிலன்

    RELATED ARTICLES

    1 கருத்து

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments