புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் அதிக நிதி கிடைக்கும் வகையில், புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் வருவாயை அதிகரிக்க புலிகள் காப்பக மேலாண்மையிடம் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (08.11.2023) மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு முன்னிலையில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு புலிகள் காப்பகங்களின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்.
புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், புலிகள் காப்பகங்களை நிர்வகிப்பதற்கு ஆதரவாக, மாநிலத்தின் அனைத்து புலிகள் காப்பகங்களிலும் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையை (TCFT) தமிழ்நாடு அமைத்துள்ளது. புலிகள் காப்பகங்களின் பல்லுயிர் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதில் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை மூலம் நடைபெறுகின்றன. புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை என்பது, புலிகள் காப்பகத்திற்குகிடைக்கப்பெறும் நிதி வருவாயைக் கொண்டு, வன உயிரின பாதுகாப்பு முயற்சிகளுக்கும், வனப்பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் உள்ளுர் சமூக நலனுக்காகவும், அந்நிதியை திரும்ப பயன்படுத்துவதற்கு சிறப்பு நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும்.
புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை
புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையில் கிடைக்கப்பெறும் நிதியானது, புலிகள் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், புலிகளின் வாழ்விடப் பாதுகாப்பிற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு ஊக்கமளிப்பதற்கும், புலிகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புலிகள் காப்பக நிர்வாகத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை சூழல் சுற்றுலா, சரணாலய நுழைவுக்கட்டணம், நினைவுப்பொருட்கள் விற்பனை வருவாய் மற்றும் நன்கொடை மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் இனங்களை பெற்று பிற பங்குதாரர்களுடன் ஒத்துழைத்து, புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்து காப்பகங்கள் திறம்பட நிர்வகிப்பதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றன. வாழ்விட மேம்பாடு, வனவிலங்கு பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு, திறன் மேம்பாடு, விழிப்புணர்வு உருவாக்கம், வாழ்வாதார மேம்பாடு, மனித – வனஉயிரின மோதல் தணிப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அறக்கட்டளை நிதி பயன்படுத்தப்படுகிறது.
அரசு சாரா அமைப்பு
ஒவ்வொரு புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையும் அதற்கென ஏற்படுத்தப்பட்ட ஆளுமை குழுவின் வழிகாட்டுதலின்படி இயங்குகிறது. ஆளுமைக்குழு என்பது ஒவ்வொரு புலிகள் காப்பக அறக்கட்டளையின் உயரிய குழு ஆகும். இது, அறக்கட்டளையின் முக்கிய முடிவுகளை எடுக்கவும், கொள்கைகளை வகுக்கும் குழுவாகவும் உள்ளது. இக்குழுவின் தலைவராக வனத்துறை அமைச்சர் செயல்படுகிறார். மற்றும் துணைத்தலைவராக அரசின் கூடுதல் தலைமை செயலர் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) செயல்படுவார். இக்குழுவில், அந்தந்த புலிகள் காப்பகத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு சாரா அமைப்புகளின் வன பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் மூத்த அலுவலர்கள், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (HoFF), முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர், முதன்மை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்), கள இயக்குநர்கள், ஆளுமைக்குழுவின் அலுவல் வழி உறுப்பினர்களாகவும் இருப்பர்.
அமைச்சர் (வனத்துறை) டாக்டர் மதிவேந்தன்
மேலும், மாநிலத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களின் ஆளுமைக்குழுவின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 08.11.2023 அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிபுணர்களின் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புலிகள் பாதுகாப்பிற்கும், உள்ளூர் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அளித்தனர். ஆளுமைக்குழு, அறக்கட்டளைகளின் செயல்பாட்டை ஆய்வு செய்து, வருடாந்திர செயல்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர். அமைச்சர் (வனத்துறை) டாக்டர் மதிவேந்தன், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் அதிக நிதி கிடைக்கும் வகையில், அறக்கட்டளையின் வருவாயை அதிகரிக்க புலிகள் காப்பக மேலாண்மையிடம் கோரிக்கை விடுத்தார்.
புதிய வெளிச்சம்
சபாநாயகர் மு.அப்பாவு, இத்துறையின் பாதுகாப்பு முயற்சிகள் குறித்து திருப்தி தெரிவித்ததுடன், பழமையான பகுதியைப் பாதுகாக்க அதிகாரிகள் அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளின் ஒருமைப்பாட்டை பராமரிக்கவும், ஆக்கிரமிப்பு அந்நிய இனங்களின் பரவலுக்கு நீண்டகால தீர்வு காணவும் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கோரிக்கை விடுத்தார்.
அறக்கட்டளையின் துணைத் தலைவரும், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருமான சுப்ரியா சாஹு, புலிகள் காப்பக நிர்வாகத்தை, புலிகள் காப்பகத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புச் சூழலில் தமிழக அரசின் புதிய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பின் பலன்களைப் பயன்படுத்தி, மாநிலத்தின் புலிகள் பாதுகாப்பை புதிய வெளிச்சத்துக்குக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு
இந்நிகழ்ச்சியில் சுற்றுசூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் துறைத் தலைவர் சுப்ரத் முஹபத்ர, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்) ராகேஷ்குமார்டோக்ரா சிறப்பு செயலாளர் (சுற்று சூழல் காலநிலை மாற்றம்) அன்ராக் மிஷ்ரா, சிறப்பு செயலாளர் (வனம்) தெ.ரிட்டோ சிரியாக் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.