’’தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கலந்து கொள்ள ’பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள்’ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சார்ந்த மாவட்ட வனத்துறையில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்’’.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2023-24 ஆம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நிலப்
பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது இவ்வருடம் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் மாதம் 02 மற்றும் 03 தேதிகளிலும்
நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பறவைகள் கணக்கெடுப்பிற்காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் நீர் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக ஒரு கோட்டத்திற்கு குறைந்தது 25 இடங்கள் வீதமும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக ஒரு
கோட்டத்திற்கு குறைந்தது 25 இடங்கள் வீதமும், கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பறவைகள் கணக்கெடுப்பானது தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளதால் இதில் அனுபவம் வாய்ந்த பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள்
மற்றும் வனத் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த நிகழ்வில் அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்க விரும்பினால், அவர்கள் கணக்கெடுப்புக்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த கியூ ஆர் கோடு மூலமும் பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்ய https://www.forests.tn.gov.in/ என்ற தளத்தை பார்க்க வேண்டும்.