இந்த ஆண்டு நம் வயலில் சாகுபடி செய்த பருத்தியை எடுத்து விற்பனை செய்து விட்டோம். கடந்த ஆண்டு 100 கிலோ பஞ்சு 11 ஆயிரம் ரூபாய் வரை சென்றது. இந்த ஆண்டு வெறும் ₹6700/- ரூபாய் தாண்டவில்லை. விலை உயரும் என்று காத்திருந்து வைத்திருந்த நமக்கு 150 ரூபாய் நஷ்டம் தான் ஏற்பட்டது. ஆம், வெறும் 6550 ரூபாய்க்கு தான் விற்பனை செய்தோம்.
பருத்தியின் கொள்முதல் விலை குறைந்து விட்டது. ஆனால் ஜவுளி கடைகளில் ஆடைகளின் விலை குறையவில்லை. Poomex பனியன் கடந்த ஆண்டு விற்ற அதே ₹115 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இது ஒரு புறம் இருக்கட்டும்.
கொள்முதல் செய்யும் வியாபாரிகள், விவசாயிகளின் உழைப்பை எப்படி எல்லாம் பறிக்கிறார்கள் என்று பாருங்கள்.
வயலில் பருத்திச் செடியில் இருந்து நெட்டியுடன் பறித்து அதை வீட்டிற்கு கொண்டு வந்து நெட்டி தனியாக பஞ்சு தனியாக எடுத்து அந்தப் பஞ்சை சாக்கு மூட்டைகளில் அடைத்து காற்றுப் புகாத அறையில் சேமித்து வைப்போம்.
முழுவதும் அறுவடை செய்து முடிந்து, விற்பனைக்கு தயாராகும் போது வியாபாரி தராசுடன் வீட்டிற்கு வந்து மூட்டை மூட்டையாக எடை போடுவார். அதில் ஒரு மூட்டையை தூக்கி தராசில் வைத்தால், 85 கிலோ 650 கிராம் எடை காட்டுகிறது என்று அதில் 85 கிலோவை மட்டும் கணக்கில் எழுதுவார்கள் 650 கிராம் கழித்து விட்டு கணக்கில் சேர்க்க மாட்டார்கள். காரணம் கேட்டால் அமைதியாக இருப்பார்கள்.
அதாவது 85 கிலோ 850 கிராம் இருந்தால் மட்டுமே 86 கிலோ என்று கணக்கில் எழுதுவார்கள்.
இதை எதிர்த்து நாம் கொஞ்சம் அழுத்தமாக கேட்க முடியாது. காரணம், அனைத்து விவசாயிகளிடமும் இதே போலத்தான் கொள்முதல் செய்கிறார்கள். இதையும் மீறி நாம் கேட்டால் அடுத்த ஆண்டு நம்மிடம் உள்ள விளை பொருட்களை கொள்முதல் செய்ய வர மாட்டார்கள்.
கொள்முதல் செய்யும் பருத்தியை ஏற்றி, இறக்குவது , லாரி போக்குவரத்து, டோல்கேட் என்று வியாபாரிகளுக்கும் பல்வேறு சிக்கல்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். அதற்காக விவசாயிகளிடம் கண் முன்னே ஏமாற்றாமல், சரியான முறையில் எடையை வைத்துக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை நமது விருப்பம்.
இதை எதற்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை சேர்ந்த ஒருவர் தான் வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டில் 16 பிஸ்கட்டிற்கு ‘1 குறைவாக இருந்ததால், அதற்காக அவர் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டு உள்ளது.