’’பணம் காய்க்கும் 14 வகை மரங்களை நீங்களும் பார்க்கலாம்; நடலாம்!. பனைமரங்களும் பணம் காய்க்கும் மரங்கள் தான்’’ என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
திண்டிவனத்தையடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக் கோயிலில் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் 14 வகையான 4200 மரக்கன்றுகள் எனது மேற்பார்வையில் நடப்பட்டதை இந்தப் பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த 14 வகை மரங்களில் நாவல் தவிர்த்து மீதமுள்ள 13 வகையான மரங்கள் அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் காய்ப்பவை; அதாவது வளர்ப்பவர்களுக்கு பெரும் இலாபத்தைத் தரக்கூடியவை.
இவை மட்டுமல்ல… அதிசயமரங்கள் என்று நான் போற்றி வரும் பனைமரங்களும் பணம் காய்க்கும் மரங்கள் தான். ஒரு ஏக்கரில் 10 அடிக்கு ஒன்று வீதம் பனை மரக் கன்றுகளை நடலாம். ஒரு ஏக்கரில் 400 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடியும். அவற்றுக்கான பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. பனை மரங்கள் 20 முதல் 22 ஆண்டுகளில் முழுமையாக வளர்ந்து பயன் தரத் தொடங்கும். பனை மரத்தில் இருந்து பனங்கற்கண்டு, பனை வெல்லம் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம், இன்றைய மதிப்பில் ஒரு பனை மரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.4,000 வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கரில் இருந்து ரூ.16 லட்சம் வருவாய் ஈட்ட இயலும். அதனால் தான் சொல்கிறேன்… பனைமரங்களும் பணம் காய்க்கும் மரங்கள் தான்.
கல்விக்கோயில் வளாகத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான பனை மரங்கள் இருக்கும் நிலையில், மேலும் 1000 பனை மரங்களை வளர்க்கும் நோக்குடன் அதற்கான விதைகளை சில மாதங்களுக்கு முன் எனது மேற்பார்வையில் நட்டிருக்கிறோம். கல்விக்கோயிலில் நடப்பட்டுள்ள இந்த பணம் காய்க்கும் மரக்கன்றுகள் நன்றாக வளரத் தொடங்கியுள்ளன. அவற்றை பார்வையிட விரும்பும் மக்கள் கல்விக்கோயிலுக்கு சென்று பார்வையிடலாம்.
பார்வையிடுவதுடன் உங்களின் பணி நிறைவடைந்து விடக் கூடாது. நீங்களும் உங்கள் வீடுகளிலோ, நிலமிருந்தால் அவற்றிலோ இந்த மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். உங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் கைகளால் அவற்றை நட்டு, அவை வளர்வதை பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது.
இந்த பணம் காய்க்கும் மரக்கன்றுகளுக்கு எங்கே போவது என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். உங்கள் ஊருக்கு அருகிலுள்ள வனத்துறை அலுவலகங்கள் மற்றும் பண்ணைகளை அணுகி, உங்களின் திட்டத்தைத் தெரிவித்தால் அவர்கள் நீங்கள் கேட்கும் மரக்கன்றுகளை தருவார்கள்.
எனவே, இனியும் என்ன தாமதம்…. பணம் காய்க்கும் மரக்கன்றுகளை பாருங்கள்…. உங்கள் வீடுகளிலும் நட்டு வளருங்கள்.
மரம் வளர்க்கும் அறமே மாபெரும் அறம்!
இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
குறிப்பு: இலவச மரக்கன்றுகளுக்கு 1800-599-7634 இந்த எண்ணில் அழைக்கலாம். தமிழக அரசின் வனத்துறை.