ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் சுழலர் ஷேன் வார்னின் பிறந்த நாள் இன்று (13.09.2023). விக்டோரியா மாகாணத்தின் ஃபெர்ண்ட்ரீ கல்லியில் 1969-ல் பிறந்த அவர், உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர் என்று போற்றப்படுகிறார். 145 டெஸ்டுகளில் 708 விக்கெட்டுகள் கைப்பற்றிய வார்ன், அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
இயற்கைக்கு சவால் விடும் வகையில் காற்றில் பந்தை அதீதமாக சுழற்றும் அவருடைய திறன், பேட்டர்களுக்கு அவர் வைக்கும் பொறி முறைகள், பந்தை இட வலமாக கைகளில் தூக்கிப் போட்டபடி ஒய்யாரமாக நடந்து வரும் லாவகம், அடுத்து நிகழப்போவதை முன் கூட்டியே கணிக்கும் அவருடைய உள்ளுணர்வுத் திறன் என வார்னைக் கொண்டாட ஒவ்வொருவருக்கும் பல்வேறு மனப்பதிவுகள் உண்டு.
இவையெல்லாவற்றையும் விட மூன்று முக்கியமான அம்சங்கள் அவர் வாழ்க்கையை கொண்டாட்டத்திற்கும் மேலான போற்றுதலுக்குரியதாக மாற்றுகின்றன.முதலாவதாக அவர் வாழ்க்கையையும் அதனூடாக கிரிக்கெட்டையும் அணுகிய விதம். தன்னுடைய முதனிலை விருப்பத் தேர்வாக இல்லாத ஒரு விளையாட்டில் உச்சபட்ச சாதனையைப் புரிந்த ஒரே விளையாட்டு வீரர் வார்ன் ஆகத்தான் இருக்க முடியும்.
ஆனால் அதேநேரம் நான் யார் என்று காட்டுகிறேன் என்ற கோதாவில் தன்னுடைய இயல்பான ஆட்ட ரசனையையும் அவர் இழந்துவிடவில்லை. அடுத்ததாக ஒரு மேதை என்பவன் அசாத்தியமான ஒன்றைத் தோற்றுவித்தவனாக, மரபை மீறியவனாகத்தான் இருக்க வேண்டும் என்ற இறுக்கமான வரையறையை அவர் உடைத்த விதம். தான் ஒரு சுயம்பு என்ற கர்வம் அவரிடம் என்றைக்குமே இருந்ததில்லை ; அதற்குத் தனது கலை ஆசான்களிடம் அவர் கொண்டிருந்த மரியாதையே சாட்சி.
ஒரு பெரும் வரலாற்றின் போக்கில், தான் ஒரு வழிப்போக்கன் மட்டுமே என்ற அடக்கமும் பொறுப்பும் இருந்ததால்தான் தன் அணியின் மீதான அபிமானத்தையும் கடந்து தனது ஃபிலிப்பரை (Flipper) பாகிஸ்தானின் முஷ்டாக் அகமதின் கண்களில் அவரால் காட்ட முடிந்தது. மூன்றாவதாக, லெக் ஸ்பின் என்ற கலை ரன்களை வாரியிறைக்கும் ஊதாரிகளுக்கானது என்ற பொதுப் பார்வையை வார்ன் உடைத்த விதம்.
லெக் ஸ்பின் கலை ஒரு தேக்க நிலையை சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் ஷேன் வார்ன் கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்தார். ஆர்தர் மெய்லி, கிளாரி கிரிம்மெட், பில் ஓ ரெய்லி என லெக் ஸ்பின் பந்துவீச்சில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட ஆஸ்திரேலியாவும் கூட ரிச்சி பெனாடுக்குப் பிறகு ஒரு முழுமையான லெக் ஸ்பின்னர் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.
கட்டுக்குள் அடங்காமல் திரியும் லெக் ஸ்பின்னர்களை விட கைக்கு அடக்கமான ஆஃப் ஸ்பின்னர்கள் எவ்வளவோ தேவலாம் என்ற முடிவுக்கு அன்றைக்கு எல்லா அணிகளுமே வந்திருந்தன. சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழையும் போதே வார்ன் ஒரு முழுமையான மேதை. லெக் ஸ்பின், டாப் ஸ்பின், கூக்ளி உள்ளிட்ட ஒரு லெக் ஸ்பின்னருக்குத் தேவையான எல்லா வஸ்துகளும் அவர் வசமிருந்தன.
வார்னின் சுழல் தத்துவத்தை ஒருவிதத்தில் கிளாரி கிரிம்மெட்டுக்கும் ஆர்தர் மெய்லிக்கும் இடைப்பட்ட ஓர் அணுகுமுறை என வரையறுக்கலாம். கிளாரி கிரிம்மெட் பெரியளவில் பந்தை இடவலமாக திருப்பவதைக் காட்டிலும் பேட்டரின் பார்வைக் கோட்டிற்கு மேல் பந்தை பறக்கச் செய்யும் கடினமான சுழலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்; கூக்ளி அவருடைய பலம் கிடையாது; ஃபிலிப்பர் பந்துவீச்சின் பிதாமகன்; சிக்கனமாக வீசுவதில் வல்லவர்; ஆட்டத்தைத் தீவிரமாக அணுகியவர்.
கிரிம்மெட்டிற்கு அப்படியே நேர் எதிரான அணுகுமுறையை கொண்டவர் அவருக்கு முந்தையத் தலைமுறையை சேர்ந்தவரான ஆர்தர் மெய்லி. பந்தை இடவலமாகத் திருப்புவதில் அலாதியான ஆர்வம் கொண்டவர் ; ரன்களை விட்டுக் கொடுப்பதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளதவர்; லெக் ஸ்டம்ப் கோட்டில் பந்தை வீசி ஆஃப் ஸ்டம்பின் தலைப்பகுதியை பதம் பார்க்கும் பந்துகள் இவருடைய பலம் ; ஆட்டத்தைக் கொண்டாட்டமாக அணுகியவர்.
கிரிம்மெட்டின் சிக்கனமான கடினமான சுழலுடன் ஆர்தரின் கொண்டாட்டத்துடன் கூடிய இடவலமான சுழலை இணைத்த மாயாஜாலமே வார்னை தனித்துப்படுத்தியது. இதனுடன் ரிச்சி பெனாடின் கண்டுபிடிப்பான அரவுண்ட் த விக்கெட் பாணியையும் அவர் வெற்றிகரமாகத் தன்வயப்படுத்திக் கொண்டார்.
மைக் கேட்டிங்கை வீழ்த்திய அந்த மாயப் பந்தை தொடர்ந்து சந்தர்பால் பந்து (1996, சிட்னி டெஸ்ட்), ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் பந்து (2005, எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்) மாதிரியான அவருடைய இடவலமாகத் திரும்பும் (Side Spin) பந்துகள்தான் பெரியளவில் கொண்டாடப்படுகின்றன. ஆனால் முதல் ஸ்லிப்பை பார்த்தவாறு தையலைப் பிடித்தபடி வார்ன் வீசிய ஓவர் ஸ்பின் பந்துகளில் தான் அவருடைய முழுமையான ஆகிருதியை நம்மால் காண முடியும்.
கல்லி பகுதியைப் பார்த்தபடி தையலைப் பிடித்து அவர் வீசும் பந்து அதீதமாகத் திரும்பி பிரமாண்டமாக காட்சியளிக்கும். ஆனால் அதில் ஃபிலைட், டிரிஃப்ட், டிப் என காற்றில் வார்ன் நிகழ்த்தும் ஜாலங்களை அவ்வளவு விரிவாகத் தரிசிக்க போதிய நேரமிருக்காது. அதுவே அவருடைய ஓவர் ஸ்பின் பந்தில் ஃபிலைட், டிரிஃப்ட், டிப் ஆகியவற்றுடன் சேர்ந்து துள்ளிக் கொண்டு ஓடிவரும் குட்டி யானையைப் போன்ற அவருடைய அலாதியான பவுன்ஸையும் நம்மால் கண்டுகளிக்க முடியும்.
பந்தைக் கடினமாக சுழற்றும் போது அது ஒரு U வடிவ பரவளையத்தை காற்றில் ஏற்படுத்தும். அதாவது பேட்டரின் பார்வைக் கோட்டிற்கு மேலாக சென்று பந்து கீழ் இறங்குவதற்கு பெயர் ஃபிலைட். அப்போது தான் எதிர்கொள்ளும் பந்தின் வந்திறங்கும் இடத்தைக் (Length) கணிப்பதில் பேட்டரின் மனதில் ஒரு குழப்பம் விதைக்கப்படும். பேட்டர் எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே பந்து திடுதிப்பென வந்திறங்குவது தான் டிப்.
பந்தைக் கடினமாக சுழற்றும் (Hard Spun) போது அது சுழலின் எதிர்த்திசையில் போவதாகப் போக்குக் காட்டி மீண்டும் சரியான திசையில் செல்வதற்கு பெயர் டிரிஃப்ட். பொதுவாக இது லெக் ஸ்பின்னருக்கு லெக் சைடிலும் ஆஃப் ஸ்பின்னருக்கு ஆஃப் சைடிலும் இருக்கும். இவையெல்லாம் வார்னுக்கு என்றே விதிக்கப்பட்டிருக்கிறதா, வார்னால் முடியும் போது ஏன் வேறு ஒருவரால் முடியாது என்று ஒருவர் கேட்கலாம்.
இங்குதான் நடைமுறைகளின் மீது வார்னுக்கு இருக்கும் விடாப்பிடியான நம்பிக்கையும் அவருடைய உடல்தகுதியும் துலக்கமாக வெளிப்படுகின்றன. முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தரையில் பந்தை திருப்புகிறவர்கள் எல்லாம் சுழலர்கள் ஆகிவிட முடியாது. காற்றில் பந்தைக் கொண்டு ஜாலங்கள் நிகழ்த்துவதற்கு கை விரல்களில் மட்டுமில்லாமல் தோள்பகுதி, முன்கை (Non Bowling Arm), இடுப்பு, முன்னங்கால் (Braced Front Leg) என அத்தியாவசியமான அவயங்கள் அனைத்தும் வலுவுடன் இருக்க வேண்டும்.
அப்போதுதான் அதிகப்படியான சக்தியைத் திரட்டி பந்துக்குச் சுழற்சியை கொடுக்க முடியும். மேலும் ஒரு லெக் ஸ்பின்னரின் ஓட்டம் (Run Up) ரிதத்தை குறைக்காத வகையிலும் ஆக்சன் Side On ஆகவும் இருத்தல் அவசியம். இவற்றில் பெரும்பாலானவை வார்னுக்கு இயல்பாகவே கூடி வந்திருந்தன. இல்லாதவவற்றை தனது ஆசான்களின் துணையோடும் கடும் பயிற்சியின் மூலமாகம் அவர் ஈட்டிக் கொண்டார்.
பொதுவாக நவீன லெக் ஸ்பின்னர்களின் லைன் என்பது மிடில் அல்லது மிடில் அண்ட ஆஃப் ஆகத்தான் பெரும்பாலும் இருக்கும். இந்தப் பாணிக்கு நல்லதொரு உதாரணம் வார்னின் லெக் ஸ்பின் சகா ஸ்டூவர்ட் மெக்கில். வார்னைக் காட்டிலும் அதிகப்படியாக பந்தைத் திருப்பும் திறனைக் கொண்டவர் மெக்கில். ஆனால் ரன்களை வாரி இரைப்பதில் அவர் ஆர்தர் மெய்லியின் வாரிசாக இருந்தார்.
மேலும் அவருடைய அபாயப் பகுதியும் (The Area of Danger) மிகவும் சன்னமானது. கொஞ்சம் இடம் கொடுத்தால் மட்டையாளன் ஸ்கொயர் திசையில் பந்தை வெட்டியோ கவர் திசையில் பந்தை டிரைவ் செய்தோ ரன் குவித்துவிடுவார். ‘மெக்கில் ஒரு கலைஞன்; வார்ன் ஒரு மேதை’ என்கிறார் ராமச்சந்திர குஹா. இங்கு மெக்கிலின் இடத்தில் எல்லா லெக் ஸ்பின் கலைஞர்களையும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். வார்னின் இயல்பான லைன் என்பது மிடில் அல்லது மிடில் அண்ட் லெக்.
கொஞ்சம் சாதகமான களம் வாய்த்தால் அவுட்சைட் த லெக் ஸ்டம்ப் லைனில் வீசுவதை வழக்கமாக வைத்திருந்தார். பேட்டரை சுழலுக்கு எதிராக ஆடவைப்பதில் அவர் வல்லவர்; அதாவது எல்லாப் பந்துகளையும் ஆடியே ஆகவேண்டும் என்ற ஒரு நிர்பந்தத்தை அவர் மட்டையாளனுக்கு ஏற்படுத்திவிடுவார். வழக்கமாக லெக் ஸ்பின்னர்கள் கவர் திசையை காலியாக விட்டு பேட்டரை கவர் டிரைவ் அடிக்க வைக்க தூண்டில் போடுவார்கள்.
இது சில நேரங்களில் ரன்களை வாரி இரைப்பதற்கு வழிவகுத்துவிடும். ஆனால் வார்ன் மிட் விக்கெட்டைக் காலியாக விட்டுவிட்டு தான் விரும்புகின்ற திசையில் பேட்டரை ஆட வைக்கும் சூட்சமம் தெரிந்தவர். பொதுவாக எந்தவொரு சுழற்பந்து வீச்சு வகைமையாக இருந்தாலும் லெக் சைட் லைன் என்பது ரன்களை கட்டுப்படுத்துவதற்கு வீசுகின்ற ஒரு தற்காப்பு பாணியாகத்தான் பார்க்கப்படும்.
ஆனால் வார்ன் போன்ற ஒரு மேதையால் மட்டும்தான் தற்காப்பு லைனை வரித்துக் கொண்டே தன் தாள லயத்திற்கு ஏற்ப மட்டையாளரை ஆடவைக்கவும் முடிந்தது. ‘வார்ன் ஒரு சாதாரண சுழலர் அல்ல ; ஒரு மிதவேகப் பந்து வீச்சாளருக்கான துல்லியமும் ஒரு அதிவேகப்பந்து வீச்சாளருக்கான ஆக்ரோசமும் ஒருங்கே அமையப் பெற்றவர்’ என்றார் ஆஸ்லி மாலெட்.
எண்ணிலடங்கா மாற்றுப் பந்துகள் வாய்க்கப் பெற்றவராக இருந்தாலும் லெக் ஸ்பின் வீசுவதில் தான் வார்ன் மோகம் கொண்டிருந்தார். மரபின் மீறல் எனக் கருதப்பட்ட கூக்ளியை அவர் ஏனோ அதிகம் விரும்பவில்லை. தன்னுடைய ஆட்ட வாழ்வின் அந்திமக் காலத்தில் தனது அபாயகரமான ஃபிலிப்பரை அவர் இழந்தபோதும் கூட அவருடைய ஆட்டம் சிறிதும் தொய்வடையவில்லை.
‘வார்னின் பந்துவீச்சு தூய்மைவாதிகளின் உச்சபட்சக் கொண்டாட்டம்’ என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் அமோல் ராஜன். ஷேன் வார்னை வெறுமனே ஒரு லெக் ஸ்பின்னர் என்ற அளவில் மட்டும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. அவர் ஒரு தரமான கீழ் மத்தியதர மட்டையாளர்; பிரமாதமான ஸ்லிப் ஃபீல்டர். காலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவுக்கு கூர்மையான உள்ளுணர்வு வாய்க்கப் பெற்றவர்.
1996 உலககோப்பை தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நடந்த அணிக் கூட்டத்தில் கிப்ஸ் பீல்டிங் குறித்து முன்வைத்த பார்வை, 2011 உலககோப்பையில் இந்திய, இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் சமனில் முடியுமென முன்னதாகவே கணித்து ட்வீட் போட்டது என அவருடைய காலத்தை விஞ்சி நிற்கும் கணிப்புகள் ஏராளம்.
கிரிக்கெட்டை கடந்தும் கால்பந்து, டென்னிஸ், கோல்ஃப் என பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபாடு காட்டியவர் வார்ன். பிடித்தமான உணவை உண்பதிலும், விதவிதமான மது வகைகளை ரசித்துப் பருகுவதிலும் அவர் ஒரு மகாரசிகர். இளம் வீரர்களை அரவணைத்துச் செல்வதில் வார்ன் மிகவும் பெருந்தன்மையானவர். இங்கிலாந்து பேட்டிங் ஜாம்பவான் கெவின் பீட்டர்சனை வளர்த்தெடுத்ததில் வார்னுக்கு முக்கியப் பங்குண்டு.
ஓய்வுக்குப் பிறகு பிரபலமான வர்ணனையாளராகத் திகழ்ந்த வார்ன், தனது 52வது வயதில் தாய்லாந்தில் அகால மரணமடைந்தார்.