சென்னை உதயம் காம்ப்ளக்சில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, இரு சக்கர வாகனங்களை நிறுத்த இடமில்லை. ஊழியர்கள் முகத்தில் எல்லாம் மகிழ்ச்சித் தாண்டவம். எல்லாம் லியோ செய்த மாயம். நான்கு திரையரங்குகளில் மூன்றில் லியோ. ஒன்றை பாலய்யாவின் (பாலகிருஷ்ணா) புதுப் படத்திற்கு ஒதுக்கியிருந்தார்கள். இது ஒரு ஆச்சரியம்தான்.
தமிழ் சந்தையையும் மனதில் வைத்து, சில முன்னணி தமிழ் நடிகர்களையும் இணைத்துக்கொண்டு உருவாகும் தெலுங்கு படங்களின் தமிழ் டப்பிங் இங்கே வெளியாவதில் ஆச்சரியமில்லை. ஆனால், முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து உருவான Bhagavant Kesariஐ தெலுங்கிலேயே உதயம் காம்ப்ளக்சில் வெளியிட்டிருந்தார்கள்.
உள்ளே போனால், ஏகப்பட்ட பாலய்யா ரசிகர்கள். ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ‘ஜெய் பாலய்யா, ஜெய் ஜெய் பாலய்யா’ என ஒரு முழக்கங்கள்தான். அகண்டா, வீரசிம்மா ரெட்டி படங்களின் வெற்றிக்குப் பிறகு, பாலய்யா நடித்து வெளியாகியிருக்கும் படம்தான் பகவந்த் கேசரி.
சிறு வயதிலிருந்து தான் எடுத்து வளர்த்த விஜி என்ற பெண்ணை ராணுவ அதிகாரியாக்க நினைக்கிறார் பகவந்த் கேசரி. மற்றொரு பக்கம் மாநில முதலமைச்சரை கொலைசெய்கிறான் வில்லன். கொலை தொடர்பான வீடியோ ஒன்றுடன் தப்பிச்செல்லும் ஒரு நபரையும் தேடுகிறான். அந்த நபர், அந்த வீடியோவை விஜியின் லேப்டாப்பிற்கு மாற்றுகிறார். அதனால், வில்லன் விஜியைத் துரத்துகிறான்.
விஜியோ பாலய்யாவின் வளர்ப்பு மகள்…
வில்லனுக்கு போதாத நேரம், வேறு என்ன சொல்ல?
பாலகிருஷ்ணா ரொம்பவுமே மாறியிருக்கிறார். போன படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர், இந்தப் படத்தில் ஸ்ரீ லீலாவுக்கு தந்தை ரோலில் நடித்திருக்கிறார். குழந்தைகளுக்கு Good Touch, Bad touch பற்றியெல்லாம் வகுப்பெடுப்பது, பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவது என ஒரு ரேஞ்சில் களமிறங்கியிருக்கிறார் மனிதர். ஆனால், அடிதடி என்று வந்துவிட்டால் அகண்டாவில் பார்த்த அதே பாலய்யாதான்.
ஒரு சண்டைக் காட்சியில் கையில் கிடைத்ததையெல்லாம் வைத்து ஆட்களை குத்திக்கொலைசெய்து கொண்டிருப்பார். கடையில் ஒரு கார்ட்லஸ் மைக்தான் கிடைக்கும். அதை எடுத்து ஒருவர் கழுத்தில் குத்திக் கொன்றுவிடுவார். பிறகு அதே மைக்கில், “மைக் டெஸ்டிங்.. ஒன் டூ.. த்ரீ” என்பதெல்லாம் பாலய்யாவுக்கே உரிய கொலைகள்.
இன்னொரு சண்டைக் காட்சியில் பாலய்யாவுக்கு பயந்து, வில்லனின் அடியாட்கள் எல்லாம் ஒரு இரும்புக் கூண்டுக்குள் சென்று தங்களைப் பூட்டிக் கொள்வார்கள். ஆனால், ட்விஸ்ட் என்னவென்றால் அதே கூண்டுக்குள்தான் பாலய்யாவும் இருப்பார். பிறகென்ன, இரும்பு அறையில் முரட்டு குத்துதான்.
கஜோலும் பாலய்யாவும் சந்திக்கும் முதல் காட்சியில், கஜோலைப் பார்த்து பாலய்யா “ஆன்ட்டி” என்று அழைப்பார். அதாவது பாலய்யாவுக்கு கஜோல் ஆன்ட்டியாம். என்னதான் பாலய்யா என்றாலும், மனசாட்சி வேண்டாமா?
முதல் பாதி மிக மெதுவாக நகர்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ஈடுகட்டியிருக்கிறார்கள். அகண்டா, வீரசிம்மா ரெட்டி அளவுக்கு இருக்காது. ஆனால், ஜாலியான படம்தான்.
படம் தெலுங்கில் மட்டும்தான். சப் – டைட்டில் ஏதுமின்றி வெளியாகியிருக்கிறது.