’’மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். சமூகத் தீமைகள் விலகி, நன்மை ஒளி பரவ தீபஒளி திருநாள் வகை செய்யட்டும்!’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.
தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மை. கழனி செழித்தால் தான் மக்கள் மனமும் செழிக்கும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடின்றி தாராளமாக நடைபெற்று வந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் தோல்வியடைந்து விட்டது. அதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாட வேண்டிய உழவர்களின் மனங்கள், வருத்தத்திலும், ஏமாற்றத்திலும் துவண்டு கிடக்கின்றன.
இந்தியாவின் பல மாநிலங்களில் சமூகநீதி செயல்பாடுகள் நாலு கால் பாய்ச்சலில் வேகம் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் சறுக்கிக் கொண்ட சமூகநீதியை சரி செய்வதற்கு கூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், படித்த இளைஞர்கள் ஆகியோரும் மகிழ்ச்சியடையும் வகையில் எந்த செயல்பாடும் நடைபெறவில்லை.
மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.