பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் தமிழை வளர்ப்பதில் தமிழறிஞர்களின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து விரிவான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தேன். தைலாபுரம் தோட்டத்தின் கதவுகள் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழறிஞர்கள் 10 பேர் கொண்ட குழுவாக தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து என்னை சந்திக்கலாம்.
தமிழ் வளர்ச்சிப் பணிகள் குறித்து என்னுடன் விரிவாக கலந்துரையாடலாம். என்னை சந்திக்க விரும்பும் தமிழறிஞர் குழுவினர் முன்கூட்டியே என்னை தொடர்பு கொண்டு பேசி, அவர்களைப் பற்றிய விவரங்களையும், அலைபேசி எண்களையும் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தேன்.
தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப்புலவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கான போட்டி மன்றம், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ என்ற தலைப்பில் இந்த போட்டிமன்றம் நடைபெறும். இது முழுக்க முழுக்க அரசியல் கலப்பற்ற போட்டியாகும். தமிழ் வளர்ச்சி மட்டும் தான் இதன் நோக்கம். அனைத்துக் கட்சியினரும், கட்சி சாராதவர்களும் இதில் பங்கேற்கலாம் என்றும் அறிவித்திருந்தேன்.
ஆனால், கடந்த இரு வாரங்களாக போதிய எண்ணிக்கையில் போட்டியாளர்கள் வராததால் கடந்த ஞாயிற்றுக் கிழமையும், இன்றும் ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ போட்டி நடைபெறவில்லை. எனினும் வரும் 14-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ போட்டி ஏற்கனவே அறிவித்தவாறு நடைபெறும். அதில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்கலாம்.
போட்டிக்கான நடைமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை தான்.
3 பேர் கொண்ட நடுவர் குழுவினரின் முன்னிலையில் 5 மணித்துளிகளுக்கு (நிமிடங்கள்) பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் பேச வேண்டும். குறிப்பிட்ட தலைப்பில் தான் பேச வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; தமிழறிஞர்கள் அவர்கள் விரும்பிய தலைப்பில் பேசலாம். அதே நேரத்தில், போட்டியாளர்கள் பேசும் தலைப்பு சார்ந்து, நடுவர்கள் அதிக அளவாக 3 முறை குறுக்கிட்டு வினாக்களை எழுப்புவார்கள். அதற்கு போட்டியாளர்கள் விடையளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
5 மணித்துளிகளுக்கு பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் பேசுவோருக்கு 4 குண்டுமணி ( 4 கிராம்) தங்கக் காசு பரிசாக வழங்கப்படும். அதிக அளவாக 10 பேர் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 9443658621 ( இசக்கி படையாட்சி) என்ற தொலைபேசி எண்ணில் வரும் 13-ஆம் நாள் சனிக்கிழமை வரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.