தேசிய நீர் விருதுகள் 2023 க்கான பரிந்துரை மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை www.awards.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வளத் துறையில் மக்களின் பணிகளை அங்கீகரிப்பதற்காகவும் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான அம்சங்களில் பணியாற்ற மக்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் தேசிய நீர் விருதுகள், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன.
சிறந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகள், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம ஊராட்சிகள், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள். சிறந்த பள்ளி அல்லது கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற சிறந்த நிறுவனங்கள், சிறந்த தொழில் நிறுவனங்கள், சிறந்த தொண்டு நிறுவனங்கள், சிறந்த நீர் பயனீட்டாளர் சங்கங்கள், சிறந்த தனிநபர்கள் என 10 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். சிறந்த மாவட்டங்கள் பிரிவில் மட்டும் 5 விருதுகள் வழங்கப்படும். மற்ற பிரிவுகளில் தலா 3 விருதுகள் வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் நீர்வள மேம்பாடு தொடர்பாக குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அனைத்துப் பிரிவினரும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்களின்படி www.awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2023, டிசம்பர் 15 ஆகும்.