1956 ஆம் ஆண்டு, நவம்பர் 1 தமிழ்நாடு உருவான நாள்! தொல்லுயிர் எச்சங்களும், மண்டை ஓடுகளும் தமிழ்நாட்டின் – தமிழர்களின் தொன்மையைச் சொல்வதற்கு இருந்தாலும் இந்த நிலப்பரப்பு தனித்த மாநிலமாக அமையவும், உருப்பெறவும் தங்களது வாழ்க்கையை ஒப்படைத்த உத்தம மனிதர்கள் ஏராளம். அடுத்தவர் நிலத்தை அபகரித்து உண்டு கொழுத்த மனிதர்களை மட்டுமே இப்போது பார்த்து வரும் மக்களுக்கு, இனப் பற்றால் மொழிப் பற்றால் தாய்த் தமிழகத்தில் எல்லைப் பரப்பைக் காத்த பத்துப் பேரும் வாழத் தெரியாதவர்களாகக் கூட தெரியலாம். ஆனால் அவர்கள்தான் நம்மை வாழ வைத்தவர்கள். அவர்கள் இவர்கள்…
#ம.பொ.சிவஞானம்
‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் அலறியபோது ‘சென்னை நமதே’ என்று சீறியவர் ம.பொ.சிவஞானம். ‘தலை தந்தாவது தலைநகர் காப்பேன்’ என்று மீசை முறுக்கினார். திருத்தணி மலையையே முழுங்கப் பார்த்தார்கள். திருப்பதியே நமக்குத்தான் சொந்தம் என்றவர் இவர். ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகத்து’ என்பது தொல்காப்பியம். பாட்டை ஆதாரமாகக் காட்டி வாதாடினார் புலவர். ‘மாலவன் குன்றத்தை விட்டாலும் விடுவேன்; வேலவன் குன்றத்தை விடமாட்டேன்’ என்று தமிழ்ச் சண்டை போட்டார். வட தமிழகத்தை தெருத் தெருவாய் அளந்து தீப்பொறி கிளப்பினார். இத்தனை காரியங்களையும் காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே செய்தார். விடுவார்களா காங்கிரஸ்காரர்கள்? விரட்டப்பட்டார் ம.பொ.சி. ஆனால் படைத்தார் புதிய தமிழகம்!
#விருதுநகர் சங்கரலிங்கம்
1956 ஜூலை 27-ம் நாள் உண்ணாவிரதம் உட்கார்ந்த விருதுநகர் சங்கரலிங்கம், அக்டோபர் 13-ம் நாள் இறந்து போனார். 79 நாட்கள் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் உடலுக்கு உணவு எடுக்காமல் உணர்வை மட்டுமே எடுத்துக்கொண்டு படுத்துக் கிடந்தார் சங்கரலிங்கம். மொழிவாரி மாகாணம் அமைத்தல் வேண்டும், சென்னைக்குத் தமிழ்நாடு எனப் பெயரிடுதல் வேண்டும், அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் அணிய வேண்டும்… என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வைத்த சங்கரலிங்கமும், காங்கிரஸ்காரர்தான். அன்றைய காங்கிரஸ் அவரைக் கிண்டல் செய்தது. உண்ணாவிரதம் இருந்த அவருக்கு முன்னால் எச்சில் இலையையும் அல்வாவையும் தூக்கிப் போட்டார்கள் காங்கிரஸ்காரர்கள். ”திருந்தாவிட்டால் இந்த ஆட்சி ஒழிந்தே தீரும்” என்று கடிதம் எழுதிவிட்டு இறந்தார். அவருக்கு இறுதிக்காலத்தில் ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். தன்னை வந்து சந்தித்த பேரறிஞர் அண்ணாவிடம், ”நீங்களாவது என் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டு உயிர் துறந்தார் சங்கரலிங்கம்.
#தோழர் ஜீவானந்தம்
கட்சிக் கொள்கைப்படி பார்த்தால் அவர் சர்வதேசியம்தான் பேசியிருக்க வேண்டும். ஆனால் ஜீவா, தமிழ்த்தேசிய சொற்களையே பயன்படுத்தினார். கம்யூனிஸ்ட் மொழியில் சொன்னால் அது இனவாதம். அதுபற்றி ஜீவா கவலைப்படவில்லை. தமிழ்நாடு பெயர் சூட்டுவது தி.மு.க-வின் கோரிக்கையே என்று காங்கிரஸ் தயங்கியபோது, ”தமிழ் அனைத்துக் கட்சிக்கும் பொது” என்றவர் ஜீவா. ”மொழிவாரியாக ராஜ்யங்கள் பிரிக்கப்படும்போது இந்திய தேசம் சுக்குநூறாக உடைந்து விடாது. காங்கிரஸ் கட்சியும் கூட சுக்குநூறாக உடையாது” என்றார். தேவிகுளம் – பீர்மேடு பகுதி தமிழகத்துடன்தான் சேர்க்கப்பட வேண்டும் என்று துடித்தார் ஜீவா. ”இது மலையாளி, தெலுங்கு மக்களுக்கு எதிரான பகைமைப் போராட்டமல்ல, நம்முடைய போராட்டம்” என்ற ஜீவா, ”ஐக்கிய தமிழகத்துக்காக போராடுவது தமிழ் மக்களின் தாய்க் கடமையாகும்” என்றும் சொன்னார். ஐக்கிய தமிழகம், தமிழ் மக்கள் என்ற சொற்கள் மீது இன்றும் சில கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒவ்வாமை நோய் இருக்கிறது. ஜீவா 1956-ல் பேசினார். பேசியதால் பெற்றோம்.
#பொட்டி_ஶ்ரீராமுலு
தமிழ்நாடு அமைய மறைமுகமாக உதவிய தெலுங்கர் பொட்டி ஶ்ரீராமுலு. அவர் அன்று தனி ஆந்திரம் கேட்டிருக்காவிட்டால் ‘தமிழ்நாடு’ அமைந்திருக்காது. சென்னை மயிலாப்பூர் லஸ் முனை அருகில் இன்றும் பொட்டி ஶ்ரீராமுலு அரங்கம் உள்ளது. 1952 அக்டோபரில் உண்ணாவிரதம் தொடங்கிய அவர் 58 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 15-ம் நாள் இறந்து போனார். சென்னையும் சேர்ந்த ஆந்திரம் கேட்டார் பொட்டி. சென்னையைக் கேட்காவிட்டால், ஆந்திரா அமைய தமிழரசு கழகம் ஆதரவு தரும் என்றார் ம.பொ.சி. ஆந்திர அரசு தற்காலிகமாக சென்னையில் அமைய ஆதரவு தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வைத்த கோரிக்கையை ம.பொ.சி. நிராகரித்தார். தகராறுக்கு இடமில்லாத வகையில் ஆந்திரா அமையும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். இப்படி ஆந்திரா பிரிக்கப்பட்டது தமிழ்நாடு அமைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.
#பி.எஸ்.மணியும் #நேசமணியும்
குமரி மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளாக விளங்கும் கல்குளம், விளவங்கோடு, தோவாளை அகஸ்தீஸ்வரம் மற்றும் செங்கோட்டையின் நகர்ப்பகுதி ஆகியவை திருவிதாங்கூர் – கொச்சி ராஜ்யத்திலிருந்து பிரித்து தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கு தெற்கெல்லை போராட்டம் என்று பெயர். இதில் முக்கியப் பங்கெடுத்தவர்கள் பி.எஸ். மணியும், நேசமணியும்.
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ், திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளுக்கு பின்புலமாக இருந்து இயக்கியவர்கள் இவர்கள். 1954-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘விடுதலை நாள் ஆர்ப்பாட்டம்’ என்ற பெயரால் நடந்த போராட்டத்தில் மார்த்தாண்டம் ஊரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 11 தமிழர்கள் உயிரிழந்தனர். காவல்துறை மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை இழந்து மக்கள் போராடினார்கள். அதன் விளைவாகவே பல பகுதிகள் தமிழகத்துக்கு கிடைத்தன.
#பூபேஷ் குப்தா
தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த வாதப்பிரதிவாதங்கள் – ஆகியவை ஏராளமாக உண்டு. இப்படி தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை செய்ய வேண்டியது மத்திய அரசு. டெல்லியில் இந்தக் குரலை எதிரொலித்தவர் பூபேஷ் குப்தா. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர். ‘வரலாறு, மொழி, கலாசார அடிப்படைப்படி, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து சென்னை மாகாண மக்களிடம் மிக ஆழமாக உள்ளது’ என்று அவர் தீர்மானம் கொண்டு வந்தார். ‘இப்படி ஒரு தீர்மானத்தை சென்னை மாகாண அரசாங்கம்தான் கொண்டு வந்திருக்க வேண்டும்’ என்று பூபேஷ் குப்தா சொன்னார். பேரறிஞர் அண்ணா அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவர் இத்தீர்மானத்தை ஆதரித்து விரிவாகப் பேசினார். ‘மக்கள் எங்களைத்தான் வெற்றி பெற வைத்துள்ளார்கள்’ என்று காங்கிரஸ் உறுப்பினர் பேசினார். பூபேஷ் குப்தாவின் தீர்மானம் இறுதியில் தோற்கடிக்கப்பட்டது.
#ஏ.கோவிந்தசாமி
மொழிவாரி மாகாணங்கள் அமைவதற்கான சட்டம் 1952-ல், சென்னை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் தி.மு.க. தேர்தலில் பங்கெடுக்கவில்லை. 1957 தேர்தலில்தான் தி.மு.க முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டது. 1952 தேர்தலில் தங்களது கொள்கைகளை ஆதரிப்பவர்களுக்கு பிரசாரம் செய்தது தி.மு.க! அந்த அடிப்படையில் சட்டமன்றத்துக்குள் சென்றவர் ஏ.கோவிந்தசாமி. இவர் திராவிட இயக்க சிந்தனைகளை சட்டமன்றத்தில் விதைத்துப் பேசினார். அன்று திராவிட நாடு கேட்டுக்கொண்டு இருந்தது திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும். அந்த அடிப்படையில் ஏ.கோவிந்தசாமி பேசினார். ”மொழிவாரியாக நாம் பிரிந்து இன அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்” என்று கோரினார் அவர்.
ஆந்திரா பிரிந்தபோது அவர்களுக்கு பிரிவு உபசார விழா சென்னை சட்டமன்றத்தில் நடந்தது. ‘பிரிகிறீர்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. வருத்தம் இல்லாமல் நீங்கள் பிரிந்து போங்கள்” என்றார். ஏ.கோவிந்தசாமி. 1952 – 57 காலகட்டத்தில் மொழிவாரி மாகாணத்துக்காக சென்னை சட்டமன்றத்தில் ஒலித்த முக்கிய குரல் ஏ.கோவிந்தசாமியுடையது.
#சி.சுப்பிரமணியம்
மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், ‘தமிழ்நாடு’ என்ற பெயரைக் கேட்டாலே எட்டிக் காயாகக் கசந்த காங்கிரஸ் கட்சிதான் ‘தமிழ்நாடு அரசு’ என்ற சொல்லை முதன்முதலில் வழிமொழிந்தாக வேண்டிய நெருக்கடிக்கும் ஆளானது. 1961 பிப்ரவரி 24-ம் நாள் பிரஜா சோசலிஸ்ட் உறுப்பினர் பி.எஸ். சின்னதுரை, தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதற்கு மறுநாள் தமிழக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் அமைச்சர் சி.சுப்பிரமணியம். ‘தமிழ்நாட்டு அரசின் வரவு செலவினை சமர்ப்பிக்கிறேன்’ என்றார். இப்படி அவர்கள் சொல்லிக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். ஆனால் அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்துக்குத் தயாராக இல்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சொல்ல வேண்டிய இடத்தில் தமிழ்நாடு என்றும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் காங்கிரஸ் பயன்படுத்த சி.சுப்பிரமணியம் காரணமாக அமைந்தார்.
#அண்ணா
பேரறிஞர் அண்ணா சொன்னார் ‘தமிழ்நாடு’ என்று. உறுப்பினர்கள் அனைவரும் ‘வாழ்க’ என்றார்கள்; ஒருமுறை அல்ல… மூன்று முறை ஒலித்தது இந்தக் குரல், தமிழ்நாடு சட்டமன்றத்தில். ‘தமிழ்நாடு என்று சொன்னால் இந்தியாவில் யாருக்கும் தெரியாது. உலகத்துக்கு தெரியாது’ என்று எந்தக் காங்கிரஸ்காரர்கள் விளக்கம் அளித்தார்களோ அதே சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் அண்ணா. எந்த சங்கரலிங்கனாருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னால் சாதாரண அண்ணாவாக இருந்து சத்தியம் செய்து கொடுத்தாரோ – முதலமைச்சர் ஆனதும் அதை மறக்காமல் நிறைவேற்றினார். இதனைத் தனது வெற்றியாக அவர் சொல்லிக்கொள்ளவில்லை. ”இது தமிழுக்கு வெற்றி. தமிழருக்கு வெற்றி. தமிழ் வரலாற்றுக்கு வெற்றி. தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில் அனைவரும் இந்த வெற்றியிலே பங்குகொள்ள வேண்டும்” என்றார் அண்ணா.
எல்லோரும் கொண்டாடுவோம்..!
#பெரியோர்களே#தாய்மார்களே, விகடன் பதிப்பகம், ஆசிரியர் ப.திருமாவேலன்