தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்ட அறிக்கை:
பருத்தி விவசாயிகளைப் பாதுகாத்திட ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்
தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடி இரணடு பருவங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. நஞ்சைப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பருத்திகள் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. குறிப்பாக தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பருத்திக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புஞ்சை பகுதியில் (கோடை இறவை) பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது.
கடந்தாண்டு பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைத்ததால் இந்தாண்டு சற்று கூடுதலாக பருத்தி சாகுபடி பரவலாக நடைபெற்றுள்ள நிலையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை நடுத்தர இழை பருத்திக்கு குவிண்டால் 6620ம், நீண்ட இழை பருத்திக்கு குவிண்டாலுக்கு 7020ம் அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை போதுமானதல்ல என்ற நிலையில், இந்த விலை கூட தற்போது தமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.
ஒன்றிய அரசின் பருத்தி கழகம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக காலத்தோடு விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்யாததால் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பருத்தி கொள்முதல் செய்வது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்.
இந்திய பருத்தி கழகம் தமிழ்நாட்டில் பருத்தியை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாத நிலையில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசே பருத்தியை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொள்முதல் செய்யப்படும் பருத்தியை தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாலைகள், நூற்பாலைகளுக்கு வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொண்டால் பருத்தி விவசாயிகளை பாதுகாத்திட முடியும். எனவே, இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய முறையில் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

