தனியாக ஒரு நாள் சுற்றுலா செல்வதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும். அந்த சிறிய பயணம், உங்களுக்கு நீங்கள் யாரென்று அடையாளப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக அமையலாம் ஒரு வாரம் முழுவதும் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து சுற்றுலா செல்வதற்கு அனைவருக்கும் வாய்ப்பு இருக்காது. அவர்களுக்கு ஏற்றது ‘ஒரு நாள் சுற்றுலா’. அந்த வகையில் ஒரு நாள் சுற்றுலா செல்பவர்கள் மனதில்கொள்ள வேண்டிய குறிப்புகள் இங்கே:
- உங்கள் பயணம் எங்கே தொடங்க வேண்டும், எங்கு முடிய வேண்டும் என்று சரியாக திட்டமிடுவது அவசியம்.
- சுற்றுலா செல்லும் ஊரில் பார்த்து ரசிக்க பல இடங்கள் இருக்கும் பட்சத்தில், முடிந்த வரை குறைந்த நேரத்தில் பார்க்கக்கூடிய இடங்களை தேர்வு செய்யுங்கள். பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து பார்க்க வேண்டிய தலங்களை ஒரு நாள் சுற்றுலாவில் தவிர்ப்பது நல்லது.
- சுற்றுலா பயணத்தின்போது குளிப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் தேவையான இடத்தை, தெளிவாக திட்டமிட்டு முன்னரே பதிவு செய்து வைத்துக்கொள்வது உங்கள் நேரத்தை நிம்மதியாக செலவழிக்க உதவும்.
- ஒரு நாள் சுற்றுலா செல்லும்போது, அது தொடர்பான மகிழ்ச்சியான விஷயங்களை மட்டுமே அனைவரும் பேசுவது அவசியம். முடிந்த வரை அன்று அலுவலகம் தொடர்பான நினைப்புகளை மனதிற்குள் கொண்டு வராதீர்கள். உங்கள் உடன் வருபவர்களிடமும், அலுவலகம் தொடர்பாக பேச வேண்டாம் என்பதை அன்பான வேண்டுகோளாக வைத்துவிடுங்கள்.
- குழுவாக அல்லது குடும்பமாக சுற்றுலா செல்லும்போது முடிந்த வரை ஒரு வேளை உணவையாவது வீட்டில் சமைத்து கொண்டு செல்லலாம். ஏனெனில் சுற்றுலா தளத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, பகிர்ந்து உண்ணுதல் என்பது அற்புதமான தருணமாக அமையும்.
- நீங்கள் சுற்றுலா சென்ற இடத்தின் அடையாளமாக, ஏதாவது ஒரு பொருளை வாங்கி அதை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியோடு நீங்கள் சென்று வந்த ஒரு நாள் சுற்றுலாவை, அந்த பொருட்கள் பல வருடங்கள் கழித்தும் ஞாபகப்படுத்தும்.
- தனியாக ஒரு நாள் சுற்றுலா செல்வதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும். அந்த சிறிய பயணம், உங்களுக்கு நீங்கள் யாரென்று அடையாளப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக அமையலாம். உங்கள் அலைபேசியை அணைத்து விட்டு, அந்த ஒரு நாளை உங்களுக்காக செலவிட்டுப் பாருங்கள். சில நேரங்களில் தனிமையில் நம்மை தொலைக்கும்போது, நாம் யாரென்று கண்டுபிடிக்க முடியும்.