“செண்பகவல்லி மீட்போம்” – ஆவணப்படம் வெளியிடப்பட்டது. வரும் செப்டம்பர் 29 அன்று சாத்தூரில் போராட்டம் நடத்தப்படும் என்று சாத்தூரில் நடைபெற்ற விழாவில் விவசாயிகள் முடிவு எடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தாயக உரிமையை மறுத்துவரும் கேரளாவின் அடாவடியை முறியடிக்கும் வகையில், செண்பகவல்லி அணையை தமிழ்நாடு அரசே சீரமைக்க வேண்டும், வைப்பாறு நதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 2023 செப்டம்பர் 29 ஆம் நாள் சாத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட விவசாயிகள் ஒருமித்து முடிவெடுத்துள்ளனர்,
தென்காசி – விருதுநகர் – நெல்லை – தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்குக் குடிநீராகவும், 35,000 ஏக்கர் பரப்பளவுக்கு பாசன நீராகவும் விளங்கிய செண்பகவல்லி அணை, தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில், 1733ஆம் ஆண்டு சிவகிரி – சேத்தூர் சமீன்களால் ஏற்படுத்தப்பட்டது. பெருவெள்ளத்தால் உடைப்பெடுத்த இச்சிறிய தடுப்பணையை 1962 ஆம் ஆண்டு காமராசர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையினரே சீரமைத்தனர். ஆனால், பின்னர் 1969 இல் மீண்டும் இவ்வணையில் உடைப்பெடுத்த நிலையில், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பை கேரள அரசிடம் வழங்கினர். “சீரமைக்கிறோம்” என முதலில் சொல்லி, காலம் கடத்திய கேரளா இப்போது அணையே அங்கு இல்லை என அடாவடியாக வாதாடுகிறது.
கேரளாவின் இந்த அடாவடிகளை அம்பலப்படுத்தியும், தமிழ்நாட்டு உரிமையை வலியுறுத்தியும், “செண்பகவல்லி மீட்போம்” என்ற ஆவணப்படம் தமிழர் கண்ணோட்டம் வலையொளி தயாரிப்பில் உருவானது. அதன் வெளியீட்டு விழாவும், வைப்பாறு பாதுகாப்பு இயக்கத்தின் தொடக்க விழாவும், 2023 செப்டம்பர் 15 அன்று மாலை சாத்தூரில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள நாடார் மகாஜன சங்கக் கட்டிடத்தில் (மிளகாய் வத்தல் வியாபாரிகள் மண்டபம்) நடைபெற்ற இவ்விழாவுக்கு, தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் ஓ.அ. நாராயணசாமி தலைமை தாங்கினார். செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் க. பாண்டியன், பாக்கியராஜ் (எல்.ஐ.சி., சிவகாசி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு – இருக்கன்குடி விருதுநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார். நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சி – இயக்கங்கள் மற்றும் உழவர் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
சாத்தூர் வட்ட – நாடார் மகாஜன சங்கப் பொறுப்பாளர் வேலுச்சாமி, ஆவணப்படத்தை வெளியிட, செல்வ ரேணுகா தீப்பெட்டி ஆலை உரிமையாளர் பெருமாள்சாமி பெற்றுக் கொண்டார். இதனையடுத்து ஆவணப்படம் அரங்கத்தில் திரையிடப்பட்டதுடன், “தமிழர் கண்ணோட்டம்” வலையொளியில் வெளியிடப்பட்டது.
https://youtu.be/C9S3iX9KYIw?si=mf6DNsJkUAhXzxMA என்ற இணைப்பில், ஆவணப்படத்தை எல்லோரும் காணலாம்.
இதனையடுத்து, ஆவணப்படத்தை உருவாக்கிய கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டது. ஆவணப்பட இயக்குநர் தோழர் க. அருணபாரதி, பின்னணக்குரல் கொடுத்து ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலிக்கலவை ஆகிய பணிகளை மேற்கொண்ட சிதம்பரம் ச. கவின், உதவி ஒளிப்பதிவு மேற்கொண்ட தோழர் பா. மலையரசன் ஆகியோர்க்கும், தமிழர் கண்ணோட்டம் வலையொளி சார்பில் தோழர் மு. பொன்மணிகண்டனுக்கும் நினைவுப் பரிசுகளை உழவர் அமைப்பினர் வழங்கினர். பாடல் இயற்றிய பாவலர் திருமுருகன் மற்றும் இசையமைத்துப் பாடலைப் பாடிய பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்க இயலாத நிலையில், அவர்களுக்கான நினைவுப் பரிசு ஆவணப்படக் குழுவினரிடம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து தொடங்கிய உரையரங்கில், சிவகிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் இரத்தினவேல், இருக்கன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை, தென்மலை ஆசிரியர் பாப்புராஜ், திரு. தங்கம் (பா.ச.க. தென்காசி மாவட்டம் – ஓ.பி.சி. பிரிவு மாவட்டத் துணைத் தலைவர்), திரு. இராகவன் (விவசாய அணி மாவட்டச் செயலாளர்), வழக்கறிஞர் கனகவேல் இராசன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். ஆவணப்பட இயக்குநர் தோழர் க. அருணபாரதி ஏற்புரை வழங்கினார்.
இதனையடுத்து, தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் ஒ.அ. நாராயணசாமி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி. வெங்கட்ராமன் நிறைவுரையாற்றினார்.
இந்த ஆவணப்படத்தை மக்களிடையே கொண்டு சென்று போராட்ட எழுச்சியை உருவாக்க வேண்டுமென்று தோழர் கி.வெ. பேசினார்.
வைப்பாறு நதியைப் பாதுகாக்கும் வகையில் “வைப்பாறு பாதுகாப்பு இயக்கம்” தொடங்கவும், அதன் ஒருங்கிணைப்பாளராக நாராயணசாமி, இணை ஒருங்கிணைப்பாளராக சி.பி. செயச்சந்திரன், ஒருங்கிணைப்புக் குழுவில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பிரமுகர்களை இணைத்தும், இதனை மக்களிடையே விரிவாக்க முடிவெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் தாயக உரிமையை மறுத்துவரும் கேரளாவின் அடாவடியை முறியடிக்கும் வகையில், செண்பகவல்லி அணையை தமிழ்நாடு அரசே சீரமைக்க வேண்டும், வைப்பாறு நதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, 2023 செப்டம்பர் 29 ஆம் நாள் சாத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
விழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உழவர் பெருமக்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.