டெல்லி பல்கலைக்கழகம் பி.ஏ., (ஹானர்ஸ்) அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தின் ஐந்தாம் செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்த பாடத்தை நீக்கி விட்டு இந்துத்துவா தலைவர் வி.டி. சாவர்க்கரைப் பற்றிய பாடத்தை திணிக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக ஆசிரியர்கள் சனிக்கிழமை கூறினர். இனி மூன்று ஆண்டு பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் காந்தியைப் பற்றி படிக்க மாட்டார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பான தீர்மானம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்விக் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை கல்வியை காவிமயமாக்கும் முயற்சி மட்டுமல்ல காந்தியையும் சாவர்க்கரையும் ஒப்பிடும் முயற்சி என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அகாடமி கவுன்சில் உறுப்பினர் அலோக் பாண்டே கூறுகையில், “முன்பு, ஐந்தாம் செமஸ்டரில் காந்தி குறித்த பாடமும், ஆறாம் செமஸ்டரில் அம்பேத்கர் பற்றிய பாடமும் இருந்தன. இப்போது, சாவர்க்கரைப் பற்றிய கட்டுரையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
காந்தியின் பாடத்தை நீக்கி விட்டு சாவர்க்கரை திணித்துள்ளனர். மூன்று ஆண்டு படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் இனி காந்தியைப் பற்றிய பாடத்தை படிப்பதற்கு வாய்ப்பில்லை” என்றார். மேலும் அவர் கூறுகையில், “நிலைக் குழுவில் முன்மொழிந்த பாடத்திட்டத்தை எதிர்த்தேன், அவர்கள் காந்தி பற்றிய தாள் ஐந்தாம் பருவத்தில் இருந்து நீக்கப்படாது என்று உறுதியளித்தனர். ஆனால், இப்போது கல்விக் கவுன்சிலில், நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர் என்றார்.
நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ராஜேஷ் ஜா, “காந்தி-யின் கருத்துக்கள் நமது சுதந்திரப் போராட்டத்தின் கூட்டு நனவை பிரதிபலிக்கின்றன. அவரது தத்துவம் நல்ல அரசியல் மற்றும் நல்ல தனி நபர்களுக்காக நிற்கிறது. காந்தியின் சிந்தனைகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக முதல், இரண்டாவது செமஸ்டர்களில் காந்தி தொடர்பான பாடத்தை வைக்க வேண்டும்’’ என்றார்.
தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகவே சாவர்க்கர் குறித்த பாடம் திணிக்கப்படுவதாக டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும் மகாத்மா காந்தி தொடர்பான பாடங்கள் ஏழாவது செமஸ்டரில் இடம் பெறும் என்று இப்போது எழுந்துள்ள பிரச்னையை சமாளிக்க சொல்லி இருக்கிறதா? அல்லது உண்மையிலேயே காந்தி பாடம் இடம் பெறுமா என்பது டெல்லி பல்கலைக்கழகத்தின் வருங்கால செயல்பாட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.