”தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் விருந்தோம்பல் சிறப்பாக அமைந்தது. இந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி’’ என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7 ஆண்டுகளில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். கடந்த 19-ம் தேதி சென்னையில் தொடங்கிய கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் நடைபெற்றது. இப்போட்டியின் நிறைவு விழா சென்னையில் 31.01.2024 நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறினார். ராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழாவிற்காக 11 நாட்கள் விரதம் மேற்கொண்டிருந்த நிலையிலும், இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் சென்னை வந்ததை அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். தென்மாநிலங்களில் நடைபெறும் முதலாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி இது என்றும் அவர் கூறினார். மேலும், விளையாட்டுத் துறையில் இந்தியா தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக அவர் கூறினார். இந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் விளையாட்டுத்துறையில் இந்தியாவின் சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்ததை அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று ஆற்றிய உரையிலும் விளையாட்டுத்துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்ததை அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் தற்போது நிறைவடைந்துள்ள கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 4,454 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார். இதில் மகளிரின் பங்களிப்பு கிட்டதட்ட சரிசமமாக இருந்தது என்றும் இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மகாராஷ்ட்ரா, இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாடு, மூன்றாம் இடம் பெற்ற ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார். தமிழ்நாடு 98 பதக்கங்களைப் பெற்றுள்ளதை அவர் கூட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் புதிய தேசிய சாதனைகளைப் படைத்த வீரர்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் சாதனைப் படைத்த பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த எளிய குடும்ப பின்னணிக் கொண்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். இது போன்ற வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தி சாதனைகளைப் படைக்க கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சிறந்த களமாக அமைந்துள்ளன என்று அவர் கூறினார். இது போன்ற வீரர்களுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து உதவிகளை வழங்கி ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விழாவின் முக்கிய நாயகர்கள் இளம் வீரர்கள்தான் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பதக்கமும் வீரர்களின் அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுவதாகத் அவர் தெரிவித்தார். இளம் வீரர்கள் தான் இந்திய விளையாட்டுத்துறையின் எதிர்காலம் என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று கூறிய அவர், வீரர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும் தமிழ்நாட்டின் விருந்தோம்பல் சிறப்பாக அமைந்தது எனவும் அவர் பாராட்டினார். இந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இப்போட்டியில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகளையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டுகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் வழங்கிவருவதாக தெரிவித்தார். இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் 600 வீரர்கள் பங்கேற்றதாக அவர் கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இந்த முறைதான் தமிழ்நாடு முதல், மூன்று இடங்களுக்குள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் கோப்பைகள் போன்ற போட்டிகளின் மூலம் வீரர்கள் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தற்போது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு 2-வது இடம் பெற்றிருப்பதற்கு இது போன்ற நடவடிக்கைகள் தான் காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
விளையாட்டுப் போட்டிக் குறித்த கையேடு!
நிறைவு விழாவின் ஒரு பகுதியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக, கடந்த 13 நாட்கள் தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிக் குறித்த கையேட்டை மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட அதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், மாநில அமைச்சர் சேகர் பாபு, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.