கேரள மண்ணில் வைக்கம் தீண்டாமை ஒழிப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்கேற்பால் ஈட்டப் பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, இப்போராட்டத்தைத் துவக்கிய சமூகப் போராளியான டி.கே. மாதவன் கேரளாவில் மற்ற இடங்களில் நீடிக்கும் தீண்டாமைக் கொடுமைகளை நீக்க முயற்சிகளை மேற் கொண்டார். அடுத்து அம்பலப்புழை, கன்னல், குளங்கரா, திருவார்ப்பு என்று டி.கே.மாதவன் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி தனது பயணத்தை தொடர்ந்தார்.
வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்ட நாகர்கோவில் ஆ.பெருமாள் நாயுடு, 1926 ஆம் ஆண்டு, சுசீந்திரம் ஆலைய நுழைவுப் போராட்டத்தை நடத்தினார். தந்தை பெரியார் அப்போராட்டத்தை ஆதரித்தார். தனது 17 ஆவது வயதில் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் ப.ஜீவானந்தம் தனது 19 ஆவது வயதில் சுசீந்திரம் ஆலைய நுழைவுப் போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்றார். சுசீந்திரத்தை அடுத்து பாலக்காடு கல்பாத்தியில் நிகழ்ந்த தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை பெரியார் ஆதரித்தார்.
குருவாயூரில் எழுச்சி
கேரளாவில் நடைபெற்ற ஏராளமான தனித்தனி போராட்டங்களும் இணைந்து பெரிய போராட்டங்களாக முன் எடுக்கப்பட்டன. வைக்கம் அளவு முக்கியமான போராட்டம் குருவாயூர் ஆலய நுழைவுப் போராட்டமாகும். 1931 நவம்பர் 1 முதல் மன்னத்து பத்ம நாபன் தலைவராகவும், கேளப்பன் செயலாளராகவும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்கள் ஏ.கே.கோபாலன், சுப்ரமணியன், திருமுப்பில் ஆகியோர் கேப்டன்களாகவும் அமைந்த போராட்டக் குழு குருவாயூர் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன் எடுத்தது.
1932 ஆம் ஆண்டில் காந்தி – அம்பேத்கர் உடன்பாடு ஏற்பட்ட பின் காந்தி ஹரிஜன சேவை அமைப்பை (ஹரிஜன் சேவக் சங் என்ற அமைப்பை) தொடங்கி அனைத்து காங்கிரஸ் ஊழியர்களும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக அமைதியான முறையில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காந்தியினுடைய முடிவால் ஈர்க்கப்பட்ட கேரள காங்கிரஸ் தலைவர்கள், குருவாயூர் கோவில் நுழைவுக்குழு என்ற ஒரு குழுவை உருவாக்கி அங்கே கோவில் நுழைவுப் போராட்டத்தை துவக்கினர். இதைக்கண்ட கோவில் அதிகாரிகள், சில ஏற்பாடுகள் செய்து அந்த கோவில் நுழைவை தடுப்பதற்கு முயற்சித்தனர். அவர்கள் ஏராளமான குண்டர்களை, காவலர்கள் என்ற போர்வையில் பணிக்கு அமர்த்தினர். அந்தப் பகுதியிலிருந்து சாதி ஆதிக்க இந்துக்கள் காதி ஆடைகளை கிழித்து எறிந்தனர். காந்தியின் போட்டோவையும் கிழித்து எறிந்தனர்
மக்கள் போராட்டமாக…
நவம்பர் முதல் நாளில் கோவில் நுழைவுப் போராட்டம் துவங்கியது. சத்தியாகிரகம் காலை 3 மணிக்கு துவங்கி இரவு 12 மணி வரை நடைபெற்றது. பல தொண்டர்கள் அணி அணியாக வந்து மறியல் செய்தனர். தோழர் ஏ.கே. கோபாலன் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதோடு அந்த ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வந்தார். இந்த இயக்கத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் குருவாயூரில் திரள ஆரம்பித்தனர். அத்துடன் அவர்கள் இந்த இயக்கம் தொடர்வதற்காக நிதியுதவியும் அளித்தனர்.
இந்த சத்தியாகிரகப் போராட்டமானது நாடு முழுவதும் பிரபலமடைந்தது. இதைக் கண்டு வெகுண்ட அந்த கோவில் உரிமையாளர் சாமுந்திரி மன்னன் ஆங்கிலேய அரசாங்கத்தை நிர்பந்தித்து இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஏ.கே.கோபாலன் கைது
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 4 ஆம் தேதியன்று காவல்துறை அதிகாரிகள் ஏ.கே.கோபாலனிடம் வந்து சத்தியாகிரகப் போராட்டத்தை அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்தனர். கோபாலன் அதை ஏற்க மறுத்து நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று சொல்லி விட்டார். அன்றிரவே கோபாலன் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆறுமாத காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கோபாலன் கண்ணணூர் சிறையில் ‘சி’ வகுப்பில் அடைக்கப்பட்டார். அவர் தினமும் 50 தேங்காய்களை உரித்து அவற்றை கொண்டு கயிறு திரிக்கும் வேலையைச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டார். அச்சமயத்தில் அந்தச் சிறையில் ஒரு சில சத்தியாகிரகிகள் மட்டுமே இருந்தனர். வெகு விரைவில் ஏராளமான சத்தியாகிரகிகள் அங்கு வந்து சேர்ந்தனர். அதன் பின் சிறை அதிகாரிகளின் உத்தரவை எதிர்த்துப் போராட்டம் துவங்கியது. மாதத்திற்கு ஒரு முறை ஏ.கே.கோபாலனும் இதர காங்கிரஸ் ஊழியர்களும் தடியடியைத் தாங்க வேண்டியிருந்தது.
அவர் விடுதலையானார்
அச்சமயத்தில் பகத்சிங்கின் சகதோழரான கமல் நாத் திவாரி போன்றோர் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர். ஏ.கே.கோபாலன் அவர்களுடன் தொடர்பில் இருந்தார். சத்தியாகிரகிகளில் பி.கிருஷ்ணப்பிள்ளை, கோபாலனை மிகவும் ஈர்த்தார். அவருடைய நட்பு கோபாலனுக்கு சுதந்திரப் போராட்டம் குறித்து ஒரு தெளிவான பார்வை கிடைக்க உதவி செய்தது. ஆனால் சிறை அதிகாரிகளின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் 15 சிறை வார்டன்கள் சேர்ந்து கோபாலனை சுற்றி நின்று தாக்கினர். ரத்தம் அவரது உடலிலிருந்து வழிந்தது. இதே போன்று மற்றவர்களும் தாக்கப்பட்டனர் பின்னர் அவர்கள் சிறை அறைகளுக்குள் தள்ளி பூட்டப்பட்டனர்.
சிறிது காலம் கழித்து கோபாலன் தமிழ்நாட்டின் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கோபாலன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இது ஆறுநாட்கள் தொடர்ந்தது. ஏழாவது நாளில் சிறை அதிகாரி வந்து அவருக்கு ஒரு தனியான அறை தருவதாக வாக்குறுதி அளித்தார். மூன்று மாத சிறை வாசத்திற்குப் பின் அவர் விடுதலையானார். ஆனால் இந்த சிறைவாழ்க்கை அவருடைய எடையை 32 பவுண்டுகள் குறைந்தது.
மீண்டும் போராட்டம்
மிகவும் பலவீனமான நிலையில் சிறையிலிருந்து வெளி வந்த கோபாலன் வீட்டிற்கு வந்தார். சில வாரங்களுக்குப் பின் கோபாலன் மீண்டும் குருவாயூர் கோவில் நுழைவு இயக்கத்தில் குதித்தார். அச்சமயத்தில் அந்த இயக்கத்தில் ஒரு தேக்கம் இருந்தது. எனவே அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணி ஏ.கே.கோபாலனின் தோள்கள் மீது விழுந்தது. மாலையில் கூட்டங்கள் முடிவடைந்த பின் அவர் அந்த இயக்கத்தில் இருந்த நல்ல பாடகர்களின் உதவியுடன் பஜனைகள் நடத்த ஏற்பாடு செய்தார். புதிய பாடல்கள் எழுதப்பட்டன. அத்தகைய பாடல்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன.
ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே கூட ஆரம்பித்தார்கள். இதைக் கண்டு அச்சமடைந்த கோவில் நிர்வாகிகள் பல ரவுடிகளை ஏற்பாடு செய்து கோவிலின் கதவுகளை பாதுகாக்க முயன்றனர். ஒரு நாள் இத்தகைய குண்டர்களால் ஏ.கே.கோபாலன் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஆனால் மக்களின் கோபாவே சத்தைக் கண்டதும் அந்தக் கும்பல் ஓடி விட்டது. கடுமையான காயங்களுடன் கோபாலன் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறையும் கோவில் மணியடித்த பி.கிருஷ்ணபிள்ளை
இந்நிலையில், இந்திய விடுதலைக்காக நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட தோழர் பி.கிருஷ்ண பிள்ளை நேராக குருவாயூர் போராட்டக் களத்திற்குச் செல்கிறார். அங்கு தடைகளை மீறி கோயிலுக்குள் நுழைந்து கோயில் மணியை அடிக்க, குண்டர்கள் அவரைத் தாக்கிய போதும் தோழர் பி.கிருஷ்ண பிள்ளை அதையும் மீறி மணியை அடிக்கிறார்.
குருவாயூர் கோயிலில் புனிதமாக கருதப்பட்ட மணியை ஒலித்த முதல் பிராமணரல்லாதவர் தோழர் கிருஷ்ணப் பிள்ளை. குருவாயூர் ஆலய நுழைவுப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஒரு பத்திரிகையாளராக செயல்பட்டார். அங்கே ஏ.கே.கோபாலனின் ஆவேச மிக்க சொற் பொழிவை கேட்டார். அந்த துவக்க விழாவின் பிரதான உரையானது, பிரபல காங்கிரஸ் தலைவர் மு.கேளப்பனால் நிகழ்த்தப்பட்டது. இந்த இரு உரைகளும் முதல் நாள் சத்தியாகிரகமும் இளைஞராக இருந்த இ.எம்.எஸ்.-சை மிகவும் உற்சாகம் கொள்ளச் செய்தது.
வைக்கம், குருவாயூர் போராட்டங்களின் விளைவாக 1936-ல் திருவிதாங்கூர் மன்னர் பலராம வர்மா ஆலயப் பிரவேச அறிக்கையை வெளியிட்டார். கேரளத்தில் உள்ள எல்லா ஆலயங்களும் அனைத்து சாதியினர்க்கும் திறந்துவிடப்படும் என அறிவித்தார்.
கட்டுரையாளர் : மாநிலத் துணைத்தலைவர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி: நன்றி – தீக்கதிர்