பாகிஸ்தானின் 18 வயது கிரிக்கெட் வீராங்கனை ஆயிஷா நசீம், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிஷா நசீம், பாகிஸ்தான் அணிக்காக 4 ஒருநாள் ஆட்டங்களிலும் 30 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். மேல்வரிசை பேட்டரான ஆயிஷா நசீம், டி20யில் 369 ரன்கள் எடுத்துள்ளார். 2023 மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் சொந்தக் காரணங்களுக்காகச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ஆயிஷா எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய வழியில் வாழ விரும்புவதால் ஓய்வு பெற விரும்புவதாகத் தனது முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடி 24 ரன்கள் எடுத்தபோது ஆயிஷாவின் ஆட்டத்தைப் பாராட்டி ட்வீட் செய்தார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்.