பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு 2024, சென்னையில் (பிப்ரவரி 8-10, 2024) நடைபெறுகிறது. ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தினைக் குறிச்சொற்களுடன், 300 சொற்களுக்கு மிகாமல் 15.11.2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க தமிழ் இணையக் கல்விக்கழகமானது StartupTN நிறுவனத்துடன் இணைந்து கணித்தமிழ்24 மாநாட்டின் ஒரு பகுதியாக நிரலாக்கப் போட்டியினை நடத்துகிறது.
இந்த உலகை இனி வழிநடத்தப்போவது தகவல் தொழில்நுட்பத் துறைதான் என்பதை உணர்ந்து, இந்தத் துறைக்கென இந்தியாவிலேயே முதன்முறையாகக் கொள்கைகளை வகுத்த மாநிலம் தமிழ்நாடு. ஆண்டு 1997. இதிலிருந்து இரண்டு ஆண்டுகளில், ‘தமிழிணையம்99’ மாநாடு நடத்தப்பட்டது.
இதன் விளைவாக 2000–இல் உருவாக்கப்பட்டதுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். இந்நிறுவனம், இப்போது மீண்டும் ஒரு பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டை (பிப்ரவரி 8-10, 2024) ஒருங்கிணைக்கிறது.
25 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசு நடத்தும் இந்த மாநாடு, வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் தமிழுக்கான இடம் குறித்து விவாதிக்கும் விதமாக அமையும். கணித்தமிழில் ஆர்வமுள்ளவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளலாம்.
இயந்திர மொழிபெயர்ப்பு
கணித்தமிழ்24 மாநாடு உலகெங்கிலும் உள்ள வல்லுநர்களையும் ஆய்வாளர்களையும் ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து, கணினித் தமிழின் வளர்ச்சிகள் குறித்து விவாதிப்பதற்கான நிகழ்வாகும். கணித்தமிழ்24 மாநாடு, தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்பத் தளங்களில் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், புதிய சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், கூட்டுச் செயல்பாட்டை வளர்ப்பதற்குமான தளமாக அமையும்.
இயற்கை மொழி ஆய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, LLM, பேச்சைப் புரிந்துகொள்ளல், எழுத்துக் குறியாக்கம், மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட கணினித் தமிழின் பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ஆய்வுரைகள், கலந்துரையாடல், ஆய்வுக் கட்டுரைகள், செயல் விளக்கம் போன்றவையும் இதில் இடம்பெறும்.
கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரையும் ஈர்க்கும் விதமாக இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. கணினித் தமிழ் ஆர்வமும் ஒருமித்த சிந்தனையும் கொண்ட நபர்களை ஒருங்கிணைப்பதற்கான சூழலை இந்த மாநாடு உருவாக்கும்.
செம்மொழி தமிழ்
கணித்தமிழ்24 மாநாட்டின் சிறப்பம்சங்களுள் மிக முக்கியமான ஒன்று, மொழித் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் ஆகும். சமர்ப்பிக்கப்படும் இந்த ஆய்வுக் கட்டுரைகளின் தரமும் பொருத்தப்பாடும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள் மாநாட்டு அமர்வுகளில் விவாதிக்கப்படும். மாநாட்டில் பங்கேற்பவர்கள் கட்டுரையாளர்களுடன் கலந்துரையாடி, மாறிவரும் தொழில்நுட்பங்கள் குறித்த ஆழமான, பயனுள்ள தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். கணினித் தமிழின் வளர்ந்துவரும் போக்குகள், அது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விவாதமும் இடம்பெறும்.
மொழித் தொழில்நுட்பத்தின் அண்மைய வளர்ச்சிகள் குறித்த உரைகளும் மாநாட்டு அமர்வில் இடம்பெறும். உலகின் புகழ்பெற்ற வல்லுநர்கள் உரை நிகழ்த்துவார்கள். இந்த உரைகள் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்த பரந்துபட்ட கண்ணோட்டத்தை வழங்குவதோடு, புதுமையான முயற்சிகளுக்கும் வழிவகுக்கும்.
மொழித் தொழில்நுட்பத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள், அதற்கான மென்பொருள் உருவாக்குவதற்கான தேவைகள் குறித்து அறிஞர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்கும் குழு விவாதங்கள் நடைபெறும்.
நிரலாக்கப் போட்டியில் பங்குபெற்று கணித்தமிழ் தொடர்பான சிக்கல் கூறுகளுக்குச் சிறந்த தீர்வுகள் வழங்கிய குழுக்களின் செயல்விளக்கங்களும் இந்த மாநாட்டின் பகுதியாக இருக்கும்.
உலகெங்கிலும் உள்ள வல்லுநர்களை ஒன்றிணைப்பதன் மூலம் கணித்தமிழ் அறிவை மேம்படுத்துவதற்கும், மொழித் தொழில்நுட்பத்தில் கூட்டுச் செயல்பாட்டை உருவாக்குவதற்கும் ஒரு முக்கியமான தளமாகக் கணித்தமிழ்24 மாநாடு அமையும். செம்மொழியான தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் புதிய தலைமுறைக்குக் கடத்துவதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கியப் பங்காற்றும் கணித்தமிழ்24 மாநாடு!
கணித்தமிழ் கட்டுரைகள்
தொழில்நுட்ப மாநாடுகளைப் பொறுத்தவரை ஆய்வுக் கட்டுரைகள் முதன்மையானவையாகும். ஆய்வறிஞர்கள் தங்கள் கண்டறிதல்களை வெளிப்படுத்தவும் கற்போருக்கு உதவும் தளமாகவும் அவை பங்களிக்கின்றன. இந்தக் கட்டுரைகள் ஆய்வறிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிரவும், பின்னூட்டங்களைப் பெறவும், பல்துறை அறிஞர்களிடம் விவாதத்தை எழுப்பவும் வாய்ப்பளிக்கின்றன.
மாநாடானது ஆய்வறிஞர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தவும், அங்கீகாரத்தைப் பெறவும், ஒருமித்த கருத்துகளை ஒருங்கிணைக்கவும் வழிவகுக்கிறது. மேலும், மாநாடுகளில் வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் புதிய சிந்தனைகளும் கண்டறிதல்களும் அறிவை விரிவாக்கப் பயன்படும். ஆகவே, கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேம்படுத்தும் அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், பல்வேறு துறைகளில் தமிழின் பயன்பாடு குறித்து அறிந்துகொள்ளவும் ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட உள்ளன.
தமிழ் இணையக் கல்விக்கழகம் கீழ்க்காணும் பொருண்மைகளிலும், கணித்தமிழ் தொடர்பான இதர பொருண்மைகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறது:
* தமிழில் இயற்கை மொழி ஆய்வு
* இயந்திர மொழிபெயர்ப்பு மற்றும் பன்மொழித் தொழில்நுட்பங்கள்
* தமிழ்ப் பேச்சுணரி மற்றும் தொகுப்பி
* பெரிய மொழி மாதிரிகள்
* தமிழுக்கான எழுத்துணரி
* தமிழ் மொழியின் பேச்சு மற்றும் உரையின் உணர்வுப் பகுப்பாய்வு
* தமிழ்த் தகவல்களை மீட்டெடுத்தல் மற்றும் தரமான தரவுகளைக் கண்டறிதல்
* தமிழ் விரிதரவு உருவாக்குதல் மற்றும் மொழியியல் வளங்கள்
* கணினி மொழியியலுக்கான உருபனியல் மற்றும் தொடரியல்
* தமிழ்க் கல்வி மற்றும் மின் ஆளுமைக்கான மொழித் தொழில்நுட்பங்கள்
* தமிழ் மின் கற்றலுக்கான தளங்கள் மற்றும் கருவிகள்
* கணினித் தமிழுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழிக் கற்றல் மென்பொருள்கள்
* பன்-மொழிகளுக்கான தரவுதளம்
* இயற்கை மொழி ஆய்விற்கு தேவைப்படும் கருவிகள்
* எண்மமயமாக்கலில் தமிழின் பங்கு (Role of Tamil in Spatial Computing)
பிற தலைப்புகள்
கட்டுரை சமர்ப்பித்தல்
ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தினைக் குறிச்சொற்களுடன், 300 சொற்களுக்கு மிகாமல் 15.11.2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். அதன்பின் முழுமையான ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆய்வுக் கட்டுரை 2500 முதல் 5000 சொற்களுக்குள் இருக்க வேண்டும். (முகவுரை, ஆய்வு முறைமை, குறிப்புதவி விவரங்கள் உட்பட). சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அசலானதாகவும், இதற்கு முன்பு வேறெங்கும் வெளியிட / சமர்ப்பிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும்.
ஆய்வுக் கட்டுரையின் மையக் கருத்தை விளக்கும் வகையில், கட்டுரைத் தலைப்பு 20 சொற்களுக்குள் அமைய வேண்டும். சிலேடை, மரபுத் தொடர் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
ஆய்வுக் கட்டுரையினைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ அளிக்கலாம். தமிழில் TAU_Marutham எழுத்துருவும், ஆங்கிலத்தில் Times New Roman எழுத்துருவும் பயன்படுத்த வேண்டும். எழுத்துருவின் அளவு 12pt ஆகவும், வரிகளுக்கிடையேயான இடைவெளி 1.5 என்னும் அளவிலும் இருக்க வேண்டும்.
கட்டுரைகள் தன்விவரக் குறிப்புடன், கணினி மொழி நுட்பத்தில் தங்களின் பங்களிப்பு தொடர்பான தகவலையும் இணைத்து 25.12.2023க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கணித்தமிழ் நிரலாக்கப் போட்டி – வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் தமிழ்
நவீனத் தொழில்நுட்பங்களான இயற்கை மொழி ஆய்வு, இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இதர டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியின் வளமையை வெளிக்கொணரவும், புதுமைகளைச் சிந்திக்கத் தூண்டவும் நிரலாக்கப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அர்ப்பணிப்புமிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், தொலைநோக்குச் சிந்தனையாளர்கள், அனுபவமிக்க மொழியியல் அறிஞர்கள், கல்விச் சமூகத்தினர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் முயற்சி இது. இதன் மூலம், தமிழ் மொழியின் பரவலான இருப்பையும், தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் தமிழ் மொழியின் நிலையையும் வெளிக்கொண்டுவர முடியும்.
மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க தமிழ் இணையக் கல்விக்கழகமானது StartupTN நிறுவனத்துடன் இணைந்து கணித்தமிழ்24 மாநாட்டின் ஒரு பகுதியாக நிரலாக்கப் போட்டியினை நடத்துகிறது.
நோக்கங்கள்:
டிஜிட்டல் யுகத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டையும் புரிதலையும் மேம்படுத்தும் புதுமையான கருவிகள் உருவாக்குவதை ஊக்குவித்தல்.
மொழியியல் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழ் மொழியில் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துதல்.
கல்வி, உள்ளடக்க உருவாக்கம், தகவல்தொடர்பு போன்ற தளங்களில் பரந்துபட்ட பயனர்கள் பயன்படுத்தும் விதமாகத் தமிழ் மொழியைக் கொண்டுவருவதற்கான தீர்வுகளை உருவாக்குதல்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியைச் செழுமையுடன் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்குதல். இதன் மூலம், மொழி தொடர்பான தொழில்நுட்ப சாத்தியங்களை விரிவாக்குதல்.
போட்டி நடைமுறை :
போட்டிக்கான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தல் : மொழித் தொழில்நுட்பத் துறை தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்துக் கண்டறிதல். பின்னர், இவற்றை விரிவான மதிப்பாய்வுக்கு உட்படுத்தி, தீர்வுகாண வேண்டிய அம்சங்கள், சாத்தியக்கூறுகள், அவற்றின் தாக்கம் குறித்து மதிப்பீட்டுக் குழு ஆராயும்.
தலைப்புகளை வெளியிடுதல் : தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள் அறிவிக்கப்பட்டு, த.இ.க., StartupTN, இதர சமூக ஊடகத் தளங்கள் மூலமாக அனைவரிடமும் கொண்டு செல்லப்படும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : மாணவர்களிடையே இந்த முயற்சியை ஊக்குவிப்பதற்காக வெவ்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மதிப்பீட்டுக் குழு பரிசீலனை : பங்கேற்பாளர்களின் யோசனைகளை மதிப்பிட்டு, அவற்றிலிருந்து சிறந்த யோசனைகள் தேர்ந்தெடுக்கப்படும். இவர்கள் போட்டியின் அடுத்த கட்டத்துக்குச் செல்வர்.
வழிகாட்டிகளைத் திரட்டுதல் : மொழியியல், மொழித் தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களையும், புத்தொழில் நிறுவனங்கள் / தொழில்முனைவோரையும் அடையாளம் கண்டு மாணவர்களுக்கு வழிகாட்டச் செய்தல்.
வழிகாட்டிகளை இணைத்தல் : கண்டறியப்பட்ட வழிகாட்டிகளை போட்டியிடும் குழுக்களுடன் இணைத்து, தேவையான ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் தொடர்ந்து வழங்க வழிவகை செய்யப்படும்.
முகாம்கள் (இணையவழி / நேரடி) நடத்துதல் : இணையம் வழியாகவும் நேரடியாகவும் போட்டியாளர்களுக்குப் பயன்தரக்கூடிய ஆலோசனைகளை வழங்க முகாம்கள் நடத்தி அவர்களுக்குத் தேவையான வளங்கள் வழங்கப்படும் .
தொழில்நுட்ப உருவாக்கத்துக்கான கால அளவு: பங்கேற்பாளர்கள் குறைந்தபட்சம் பயனளிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு அவகாசம் அளித்தல். உருவாக்கும் காலகட்டத்தில், தேவையான உதவிகள் வழங்குதல்.
இறுதி நிரலாக்கப் போட்டி: இறுதிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தாங்கள் உருவாக்கிய தீர்வுகள் குறித்து மதிப்பீட்டாளர்களின் முன்பு வெளிப்படுத்த வாய்ப்பு வழங்குதல். சிறந்த போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தல்.
மாநாட்டு நிகழ்வு: தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் கணித்தமிழ்24 மாநாட்டில் செயல்விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கான பரிசுகள் மாநாட்டின்போது வழங்கப்படும்.
நிரலாக்கப் போட்டி முடிந்த பின், பயனுள்ள தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
உருவாக்கப்பட்ட மென்பொருட்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக www.tamilvu.org இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
சிக்கல் கூறுகள்
* பட விவரக் குறிப்பு உருவாக்கம் (Image Annotation System)
* தமிழ் மொழி விளையாட்டு (Tamil Language Gamification)
* தமிழ் மொழிக் கற்றல் (Tamil Language Learning)
* தமிழ் எழுத்துணரி (Tamil OCR)
* தமிழ்ப் பேச்சைப் (வட்டார வழக்கு) புரிந்துகொள்ளுதல் (Tamil Speech (Dialect) Recognition)
* தமிழ் உள்ளடக்க உருவாக்கம் (Tamil Content Creation)
* தமிழ்மொழி IoT ஒருங்கிணைப்பு (Tamil Language IoT Integration)
* தமிழ் உரையாடி (Tamil Chatbot)
* தகவல் திரட்டிகள் (Aggregators)
* கல்வெட்டு எழுத்து மாற்றி (Inscription Converter)
* தமிழ் நிகழ்த்து கலைகள் மற்றும் பாரம்பரிய நாடக வடிவங்களுக்கான தளம் ஒன்றை நிகழ்த்து கலைஞர்களது விவரங்களுடன் உருவாக்குதல் (Develop a platform to showcase Tamil performing arts and traditional theatre forms with a directory of performers)
* பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகத் தமிழர் பாரம்பரிய உணவுகள், திருவிழாக்கள், பாரம்பரியத் தலங்களைக் காட்சிப்படுத்த ஒரு பண்பாட்டுத் தளத்தை உருவாக்குதல் (Develop a cultural platform to showcase Tamil traditional foods, festivals and heritage sites to promote cultural tourism)
* ஆய்வாளர்கள் தங்கள் தொழில்நுட்பம் சார்ந்த/சாராத ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பதிவேற்றுவதற்கான தளத்தை உருவாக்குதல் (Develop a platform for researchers to publish their technical / non- technical research findings in Tamil language with a plagiarism detection tool and curation tool for reviewers)
* மண்டலவாரியாகத் தொழிற்துறைகளுடன் மொழியியல் வல்லுநர்களை இணைக்கும் தளத்தை உருவாக்குதல் (Develop a portal to connect nearby linguistic experts with the industries region wise to promote their goods and services to the larger tamil speaking consumers)
* தமிழ் இயங்குதளம் (Tamil Operating System)
* தமிழில் வேலைவாய்ப்புத் தளம் (Tamil Job Portal)
* தமிழில் இயற்கை மொழி ஆய்வு (Tamil Language NLP)
* தமிழில் எழுத உதவும் கருவி (Tamil Writing Tool)
* தமிழிலிருந்து பிரெய்லி (Tamil to Braille)
* தமிழ் உள்ளடக்கப் பரிந்துரைப் பொறி (Tamil Content Recommendation Engine)
* பிற தலைப்புகள்
தொடர்புக்கு
கூடுதல் விவரங்களுக்கு: https://www.kanitamil.in/
கணித்தமிழ்24 மின்னஞ்சல் : kanitamil24@gmail.com தொலைபேசி : +91 44 2220 9400