உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட இந்தக் காயம்பட்ட சிங்கம், தனது பந்துவீச்சின் மூலம் தான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. குறைவேகம் கொண்ட டொமினிக்கா ஆடுகளத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டர்களுக்கு சவக்குழி வெட்டியவர்களில் முக்கியமானவர் ரவிச்சந்திரன் அஸ்வின். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் என ஒட்டுமொத்தமாக 12 விக்கெட்டுகளைக் கொத்தாகக் கைப்பற்றினார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டை மூன்று நாள்களில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெற்றியுடன் இந்தியாதொடங்கியிருக்கிறது. பொதுவாக சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களில் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் லைனில் ஃபிளாட்டாக வீசி இடவலமாகத் திருப்பவது தான் ஆஃப் ஸ்பின்னர்களின் வழக்கமான உத்தி. ஆனால் அஸ்வினோ பேட்டர்களின் பார்வைக் கோட்டிற்கு (eye line) மேல் பந்தைப் பறக்கவிட்டு சாகசம் புரிந்தார். அஸ்வின் – ஜடேஜா இணையின் பந்துவீச்சுப் பாணி 50களின் மேற்கிந்தியத் தீவுகள் சுழலர்கள் சன்னி ராமதீன் – ஆல்ஃப் வாலண்டைன் கூட்டணியை அச்சில் வார்த்தது போல இருந்தது. அஸ்வின் காற்றில் ஃபிலைட் (flight) கொடுத்து வீசி பேட்டர்களுக்கு வலை விரித்தார் என்றால் ஜடேஜா தனது அதிவேக ஃபிளாட்டர்களில் (flatter) துவம்சம் செய்தார். அஸ்வினின் மேதமைக்கு உதாரணம் தாறுமாறாகத் திரும்பிய ஆடுகளத்தை அரவுண்ட் த விக்கெட்டில் பந்துவீசித் தனது வசதிக்காக அவர் வளைத்துக் கொண்ட விதம்.
இரண்டாவது இன்னிங்ஸில் பிளாக்வுட் விக்கெட்டுக்கு அவர் பொறிவைத்த விதத்தை எடுத்துக் கொள்வோம். பந்து இடவலமாகத் தாறுமாறாகத் திரும்புகிறது. ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசினால் உள்ளே வரும் பந்தை பிளாக்வுட் எளிதில் தடுத்தாடி விடுவார். மேலும் பந்து லெக் ஸ்டம்ப் பக்கம் திரும்பிச் செல்லவும் அதிக வாய்ப்புள்ளது. அதுவே அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து வீசும்போது தனது கடினமான சுழலின் (hard spun) மூலம் பந்தை வெளியே டிரிஃப்ட் (drift) செய்து சுழலின் எதிர்த்திசையில் செல்வதாகப் போக்குக் காட்டி அஸ்வினால் உள்ளே கொண்டுவர முடியும். அஸ்வினின் பொறியில் சிக்கிய பிளாக்வுட் தவறான லைனில் விளையாடி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் போட்டியில் அதிக தொடர் நாயகன் விருது பெற்றவர்கள் வரிசையில் இரண்டாம் இடம், டெஸ்டுகளில் ஓர் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடம், டெஸ்டில் அதிவேகமாக 200, 300, 350 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முதல் இடம், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் வரிசையில் இரண்டாம் இடம் (709 விக்கெட்டுகள்), ஐசிசி பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் தற்போது முதல் இடம் என அஸ்வினுக்குப் பெருமை சேர்க்கின்றன இத்தகைய சாதனைகள். ஆனால் இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வினுக்கு இன்றும் கூட நிரந்தர இடம் உறுதி செய்யபடவில்லை. குறிப்பாக சேனா (SENA) நாடுகளில் நடக்கும் ஆட்டங்களில். கேப்டன்சியில் மாற்றம் ஏற்பட்டாலும் அஸ்வின் நடத்தப்படும் விதத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.
இந்தியச் சுழற்பந்துவீச்சுப் பாரம்பரியத்தில் அஸ்வினின் இடம் என்ன? இந்தியச் சுழலர்களை ஒரு வசதிக்காக இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். இந்தியச் சுழல் ஜாம்பவான்களில் ஒரு தரப்பினர் மிகவும் டாம்பீகம் கொண்டவர்கள். தங்களுடைய திறமை மீது அவர்களுக்கு ஒரு மிதமிஞ்சிய கர்வம் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சு என்பது தீட்டுப்பட்டு விடக்கூடாத ஒரு சமாச்சாரம்.
”பந்தை ஃபிளாட்டாக வீசி விக்கெட் எடுப்பதை விட பந்தை ஃபிளைட் செய்து வீசி பவுண்டரி கொடுப்பது மேலானது” என பிஷன் சிங் பேடி கர்ஜித்தார். இவர்கள் எல்லாரும் நிறுவனங்கள் மீதான தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாகப் போட்டு உடைப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் லட்சியவாதிகள். அப்பாவின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஐந்து வருடங்கள் கிரிக்கெட்டை ஒதுக்கி வைத்துவிட்டுப் பொறியியல் படிப்பில் கவனம் செலுத்தியவர் எரப்பள்ளி பிரசன்னா.
இன்னொரு தரப்பினர் மிகவும் கொண்டாட்டம் நிறைந்தவர்கள். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல சாதனைகளை செய்ய முடியாதவர்கள். தங்களுடைய போதாமைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குபவர்கள். தவறான குற்றச்சாட்டில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கையைத் தொலைத்த சுபாஷ் குப்தா உடனடியாக நினைவுக்கு வருகிறார். தூஸ்ராவை அளவுக்கதிகமாக உபயோகித்து தன்னுடைய ரிதத்தை கெடுத்துக் கொண்ட ஹர்பஜன் சிங் இன்றுவரைக்கும் பொறுமிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அஸ்வின் இவ்விரு தரப்பினரிடம் இருந்தும் ஒதுங்கியே நிற்கிறார். கிரிக்கெட்டை கருப்பு – வெள்ளையாக அவர் என்றைக்குமே எளிமையாகப் புரிந்துகொள்வதில்லை. பேடி, பிரசன்னாவை போல அஸ்வினும் ஒரு கிளாசிக்கல் சுழற்பந்து வீச்சாளர்தான். ஆனால் ஃபிளைட் செய்து தான் விக்கெட் எடுப்பேன் என்றெல்லாம் அவர் அடம் பிடிப்பதில்லை. தூஸ்ரா பந்து வீச்சை அருவருப்பாக கருதும் அளவுக்கு அவர் ஒரு லட்சியவாதி. ஆனால், பேட்டர் எல்லை தாண்டும் போது மான்கட் செய்ய அவர் தயங்குவதில்லை.
அஸ்வின் எப்படிப்பட்ட ஒரு சுழலர்? கிரிக்கெட் வரலாற்றின் அறிவார்ந்த ஆஃப் ஸ்பின்னர்கள் வரிசையில் அஸ்வினுக்கும் ஓர் இடமுண்டு. ஜிம் லேக்கர், முரளிதரன், கிரேம் ஸ்வான் வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர் அவர். ஆனால் அஸ்வினிடம் அழகியல் அம்சங்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. எரப்பள்ளி பிரசன்னா, பிஷன்சிங் பேடி போன்ற தூய்மைவாதிகள் பரிந்துரைக்குன் சைட் ஆன் (Side on) ஆக்ஷன் கொண்டவரல்ல. செஸ்ட் ஆன் (chest on) ஆக்ஷன் கொண்டவர். “தனது உடலைப் பெரிதாக வளைக்காமல் பந்தில் எப்படி இவ்வளவு சுழலை (revolutions) அஸ்வின் கொண்டு வருகிறார் என்பது உண்மையிலேயே ஆச்சர்யமாக இருக்கிறது.” என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் ராம் நாரயண்.
அஸ்வினைப் போல மோசமாக நடத்தப்பட்ட ஓர் இந்திய வீரர் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் காவஸ்கர் மனம் வெதும்புகிறார். ஆனால் அஸ்வினோ புகார்களைத் தூக்கிக் கொண்டுத் திரியாமல் நம்பிக்கையுடன் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறார். எது அஸ்வினை உந்தித் தள்ளுகிறது? மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது அவர் கொடுத்த ஒரு பேட்டியில் இப்படிச் சொல்கிறார். “ஒரு கிரிக்கெட் வீரர் வாழ்க்கையில் தாழ்வுகள் இல்லாமல் எந்த உயரமும் இல்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நான் விளையாடாதது துரதிர்ஷ்டமே. இதற்காக வருத்ததுடனே நான் இருக்க மாட்டேன். அதுதான் எனக்கும் இன்னொருவருக்குமான வித்தியாசம். என்னுடைய அணியினருக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்னுடைய சிறந்த பங்களிப்பையே அளிக்க விரும்புகிறேன்.” என்றார்.
ஆதவனின் சாகாவரம் பெற்ற வரிகளில் ஒன்று ,”நாம் பூரணத்துவத்திற்காக முயன்று தோற்றவாறு இருக்கிறோம்”. இதற்கு இணையான எண்ணற்ற முத்துக்களை அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் உதிர்த்திருக்கிறார். அதே பேட்டியில் அணியில் தனக்கு நிரந்தர இடமில்லாமல் இருப்பது பற்றி பேசிய அவர், “பூரணத்துவதற்கான தேடல் தான் எல்லா நேரத்திலும் என்னை நல்ல நிலையில் வைத்திருக்கிறது, அதே சமயம், அது தாங்கொணா பாரத்தையும் அளிக்கிறது” என்றார்.
சமீபகாலத்தில் அஸ்வின் அளவுக்குப் பந்துவீச்சு ஆக்ஷனைத் தொடர்ந்து மாற்றியமைத்த ஒரு பந்துவீச்சாளரைப் பார்க்க முடியாது. இதற்கு அடிப்படைக் காரணம் அவருடைய கல்விப் பின்புலம். அடிப்படையில் இன்ஸ்ட்ருமென்டல் என்ஜினியர் என்பதால் பயோ மெக்கானிக்ஸ், ஏரோடைனமிக்ஸ் போன்ற துறைகளில் அவருக்கு ஓர் ஆழ்ந்த புரிதல் இருக்கிறது. பந்துவீச்சு முறையில் ஏதாவது தவறாகப் போனால் உடனடியாக அதில் இருந்து மீண்டு வந்துவிட முடிகிறது. இதையெல்லாம் தாண்டி அஸ்வின் ஒரு மதிநுட்பம் கொண்டவர்.
2018 தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் வாசிப்பதற்கு என்று அஸ்வினுக்குப் புத்தகங்களைப் பரிந்துரை செய்து கட்டுரை எழுதினார் சுரேஷ் மேனன். “அஸ்வின் ஓர் அறிவுஜீவி, தெளிவான மனிதர்” என்று ஹிந்து நாளிதழில் வெளியாகும் தனது பிட்வீன் விக்கெட்ஸ் (Between wickets) பத்தியில் புகழாரம் சூட்டினார்
இந்த மதிநுட்பமே அவருக்குப் பல நேரங்களில் பாதகமாகவே முடிந்துள்ளது. சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த விரிவான நேர்காணலில், தன் மீது அதிகமாக சிந்திப்பவர் என்ற பிம்பம் எப்படிக் கட்டப்பட்டது என்பது குறித்து அஸ்வின் பேசியுள்ளார். “தனக்கு இரண்டு ஆட்டங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதைத் தெரிந்த ஒருவர் அதிர்ச்சியடையவும் அதிகமாகச் சிந்திக்கவும் தான் செய்வார். சிந்திப்பது என் பணி. ஆனால் இந்தப் பிம்ப உருவாக்கம் எனக்கு எதிராகத் திட்டமிட்டு சந்தைப்படுத்தப்படுகிறது” என்றார்.
தன் ரசனைக்கு உட்பட்ட எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் அஸ்வின். எதையும் பூசி மொழுகாமல் வெளிப்படுத்தும் குணம் அவருடையது. சக வீரர்கள் உடனான தனது உறவு குறித்து அந்தப் பேட்டியில் அஸ்வின் பேசினார். “ஒரு காலத்தில் கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்தார்கள். இப்போது, அவர்கள் வெறுமனே சக வீரர்கள். அவ்வளவு தான். தனது பக்கத்தில் இருக்கும் நபர்களை எப்படியாவது முந்திவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்றார்.
2021 சிட்னி டெஸ்டின் போது அஸ்வின் – டிம் பெய்ன் இடையிலான வார்த்தைப் போர் அந்தத் தொடரின் முக்கிய பேசுபொருளாக மாறியது. அஸ்வினை நோக்கிக் கடுமையாக வசைமாறிப் பொழிந்த பெய்ன், இந்திய அணி வீரர்கள் எப்படி அஸ்வினைப் பார்க்கிறார்கள் என்பதைப் போட்டுடைத்தார் “உன்னை விட எனக்கு இந்திய அணியில் எனக்கு நண்பர்கள் அதிகம். உன் சக வீரர்கள் அனைவரும் உன்னை ஏளனமாகப் பார்க்கிறார்கள்” என்றார். இது உண்மையா இல்லையா என்பதை அஸ்வின் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றாலும் எளிதாகப் புறக்கணிக்கக் கூடிய குற்றச்சாட்டு அல்ல இது.
அஸ்வினுக்கு இப்போது 36 வயது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஒயினைப் போன்றவர்கள். வயது கூட கூடத்தான் ஆட்டத்தில் உச்சம் தொடுவார்கள். உலகின் முதல் நிலைப் பந்துவீச்சாளராக இருந்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்டவர் அஸ்வின். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலாவது கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்குமா இந்திய அணி?