ஐஐடி மெட்ராஸ் உலகளாவிய எதிர்பார்ப்புகளைச் செயல்படுத்த ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளது.
- ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து உருவான ஸ்டார்ட்அப்கள், காப்புரிமைகள், தொழில்நுட்பங்கள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த உந்துசக்தியாக இருக்கும்
- ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உலகளவிலான சந்தைகள், முதலீடுகள், நிதி திரட்டல் போன்றவற்றுக்கு வழி ஏற்படுத்துதல்
- உத்திசார் பல்கலைக்கழக ஒத்துழைப்புகள், தொழில் கூட்டாண்மைகள் மூலம் உலக அரங்கில் ஐஐடி மெட்ராஸ்-ன் கல்வித் திட்டங்களை இடம்பெறச் செய்தல்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) உலகளாவிய எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் நோக்கில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளது. இக்கல்வி நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப சுற்றுச்சூழலில் இருந்து வெளிவரும் ஸ்டார்ட்அப்களுக்கு உலகளவிலான சந்தைகள், முதலீடுகள், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்கான நிதியுதவி, உத்திசார் பல்கலைக்கழக ஒத்துழைப்புகள் மற்றும் தொழில் கூட்டாண்மை மூலம் முதுகலைக் கல்வி மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை தரம் உயர்த்துதல் ஆகியவற்றுக்கு இது உந்துசக்தியாக இருக்கும்.
இதனை செயல்படுத்துவதற்காக, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப வல்லுநரான திருமலை மாதவ் நாராயணை இக்கல்வி நிறுவனம் நியமித்துள்ளது.
“ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை” (IIT Madras Research Foundation) என்பது ஐஐடி மெட்ராஸ்-ன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துதல், கண்டுபிடிப்பு – தொழில்முனைவு ஆகியவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்துதல், தொழில்- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மைகளின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்தல் போன்ற நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தொலைநோக்குத் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “இந்தியாவின் விஸ்வகுரு லட்சியத்தில் இணைந்து செயல்படவும், உலகளவிலான ஸ்டார்ட்அப்களை உருவாக்கவும் ஐஐடிஎம்ஆர்எஃப் ஓர் உத்திசார் முயற்சியாகும். தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாராயண் இந்த முன்முயற்சிக்கு தலைமை நிர்வாகியாக இருந்து வழிநடத்துவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டார்.
அறக்கட்டளை கவனம் செலுத்தும் முக்கிய அம்சங்கள் வருமாறு
- காப்புரிமைகள், தொழில்நுட்பங்களை வணிகப்படுத்த தயார் நிலையில் வைத்திருத்தல்
- ஐஐடி மெட்ராஸ் ஆசிரிய நிறுவனர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களால் நிறுவப்பட்ட ஸ்டார்ட்அப்கள்
- சந்தை ஆய்வுகள் அடிப்படையிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் (உதாரணமாக பசுமை வளர்ச்சி)
- ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழலில் இருந்து ஸ்டார்ட்அப்களுக்கு உலகளாவிய அணுகுமுறையை ஏற்படுத்துதல், புதிய சந்தைகள், மூலதனம், தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துதல்
- முன்னாள் மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய தொழில்நுட்பங்களை கிடைக்கச் செய்தல்
- உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் தொழில் கூட்டு முயற்சியின் மூலம் சர்வதேச கல்வித் திட்டங்களை செயல்படுத்துதல்
ஐஐடிஎம்ஆர்எஃப் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய விளைவுகள் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னூலா கூறும்போது, “ஐஐடி மெட்ராஸ்க்கு மட்டுமின்றி ஐஐடிஎம்ஆர்எஃப் நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும் என நம்புகிறோம். ஒரு கல்வி நிறுவனம் தனது கண்டுபிடிப்புகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கான மாதிரியை நிரூபித்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்” எனத் தெரிவித்தார்.
தொழில்துறையில் சிறந்து விளங்கும் மாதவ் நாராயண் 37 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். இன்டெல், எச்பி, டெல், சாம்சங், எப்சன் உள்ளிட்ட உலகளாவிய தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்களுக்கான உத்திகள், கட்டமைத்தல், மாற்றத்தை ஏற்படுத்துதல், வணிகத்தை உயர்த்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ரெடிங்டன் குழுமத்தின் நிறுவன உறுப்பினர்கள்/ தயாரிப்பாளர்களில் ஒருவர். WEF போன்ற உலகளாவிய மன்றங்களைத் தவிர, MEA, APAC பிராந்தியங்களில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்புகளில் தொடர்புடைய அரசாங்கங்களுடன் நீண்டகால உறவுகளை வலுப்படுத்தியுள்ளார்.
இந்த முன்முயற்சி குறித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஐஐடி மெட்ராஸ் டீன் (உலகளாவிய செயல்பாடுகள்) பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி கூறும்போது, “இது ஐஐடி மெட்ராஸ்–ன் பன்முக சர்வதேசமயமாக்கல் முயற்சிகளில் மற்றொரு குறிப்பிடத்தக்க முக்கியமான முயற்சியாகும்” என்றார்.
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முன்னோடியாகத் திகழும் ஐஐடி மெட்ராஸ், அமெரிக்காவில் 161 காப்புரிமைகள் உள்பட சர்வதேச சந்தைகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. ஐஐடி மெட்ராஸ்-ல் கல்வி பயின்ற 10,000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளை வகித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமான நிறுவனங்களையும், ஸ்டார்ட்அப்களையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
அறக்கட்டளையின் இலக்குகளை விவரித்த ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஐடிஎம்ஆர்எஃப்) தலைமைச் செயல் அதிகாரி மாதவ் நாராயண் கூறுகையில், “புதுமை, தொழில்முனைவு, மேம்படுத்தப்பட்ட தொழில் ஈடுபாடு, ஆராய்ச்சி– மேம்பாடு கூட்டு முயற்சி போன்றவற்றில் விரைந்த வளர்ச்சியைத் தூண்டும் வகையில் உள்ளூரின் சிறப்புகளுடன் ஐஐடி மெட்ராஸ்–ன் செல்வங்களை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு ஐஐடிஎம்ஆர்எஃப் சிறந்த நீடித்த தளமாக செயல்படும்” எனக் குறிப்பிட்டார்.
துபாய் அரசின் லட்சியமான “10X புரோகிராம்” திட்டத்துடன் தங்கள் டிஜிட்டல் உத்தியை உருவாக்க உதவுவதற்காக துபாய் அரசு முன்னணிப் பொது நிறுவனமான துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் கடந்த 2017-ல் மாதவ் நாராயணுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி நிறுவனத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழில்நுட்ப விற்பனையாளர்கள் (Microsoft, Google, SAP, Dell, HP, VMWARE, Huawei), உலகளாவிய முன்னணி கல்வி நிறுவனங்கள் (MIT, UC Berkeley, Stanford), WEF 4IR Centre போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டும், இணைந்து முதலீடு செய்தும், டிஜிட்டல் தீர்வுகளை இணைந்து சந்தைப்படுத்தியும், நீண்டகாலமாக உத்திசார் கூட்டாண்மையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இத்துறையில் நீண்ட அனுபவத்துடன் பல்வேறு அங்கீகாரங்களையும் விருதுகளையும் வென்றெடுத்துள்ளார். அவைகளில் குறிப்பிடத்தக்கவை:
- சாம்சங் சிஇஓ-வின் தங்க விருது
- டெல் நிறுவனத்தின் சர்க்கிள் ஆஃப் எக்சலென்ஸ் விருது
- மேற்காசியாவில் முன்னணியில் திகழும் முதல் 50 பேர் பட்டியலில் 2010, 2012 ஆகிய இரு ஆண்டுகளில் அடுத்தடுத்து முதலிடத்தைப் பெற்றவர்
- 1990-ம் ஆண்டில் பெரிய இந்திய வணிக இதழில் வணிக முன்னோடியாக இடம்பெற்றது (அவர்களது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் உயர் நிர்வாகப் பதவிகளில் இளம் மேலாளர்களை அங்கீகரித்தல்) மாதவ் நாராயண் 26 வயதில் எப்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்திருக்கிறார்.