வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி உலக நன்மைக்காக நாராயணி மூலமந்திர மகாயாகம் நடைபெற்றது. சக்திஅம்மா தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது கணவருடன் கலந்து கொண்டார். அவர்கள் சாமி தரிசனம் செய்து, சக்திஅம்மாவிடம் ஆசி பெற்றார்.
ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாராயணி பீடத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் நான் கலந்து கொள்வேன். அதன்படி இன்றும் இங்கு கலந்து கொண்டதும், சக்தி அம்மாவின் ஆசி பெற்றதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆன்மிகம் தழைக்க வேண்டும். ஆன்மிகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது. ஆனால் சமீபகாலமாக தமிழுக்கும், ஆன்மிகத்துக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆன்மிக வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஆன்மிகத்தோடு கூடிய தமிழ், தமிழுடன் கூடிய ஆன்மிகம் இவை தான் நமது தமிழகத்துக்கு வளர்ச்சியை தரும்.
தூய்மையான ஆன்மிகத்தின் மீது தவறான கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆன்மிகத்தில் எந்தவித ஏற்றத்தாழ்வும் கிடையாது. இதிகாசங்களிலும், சரித்திரங்களிலும் அனைவரும் சமம் என்று கூறுகிறது. மதமும் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் மதம் ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும் தான் முன்னிறுத்துவதாக சிலரால் கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு இல்லை.
தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். நீங்கள் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை என்று கூறுகிறீர்களே. ஆனால் ஆன்மிக அன்பர்களாகிய எங்களுக்கு ஏன் தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதில்லை. இந்த கேள்விக்கு இன்றுவரை பதில் தரவில்லை. அவரிடம் இதற்கான பதில் எதிர்பார்த்தேன். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவது நமது தமிழக ஆன்மிக கலாசாரம்.
கொரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தற்போது உலக சுகாதார மையம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு அறிவியலும் காரணம், ஆன்மிகமும் காரணம். தடுப்பூசியும் இறைவனின் ஆசியும் சேர்ந்தால்தான் வாழ்வில் நமக்கு நல்ல உடல் நலத்தை தரும்.
புதுச்சேரி முன்னாள் முதல்- மந்திரி நாராயணசாமி நீங்கள் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? என்று கேட்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் மக்களுக்கு சேவை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட சேவை செய்யாமல் உள்ளனர்.
அவர், நான் புதுச்சேரியில் தான் அதிகமாக இருக்கிறேன் என்று கூறுகிறார். மேலும் நான் தெலுங்கானாவுக்கு செல்ல அவர் மக்களிடம் உண்டியல் குலுக்கி எனக்கு சிறப்பு விமானம் வாங்கி தருவதாகவும் கூறுகிறார். இதற்கு ஏன் அவர் மக்களிடம் கையேந்த வேண்டும். நீங்கள் சேர்த்து வைத்த பணத்திலே எனக்கு வாங்கி கொடுக்கலாம். அப்படி வாங்கி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
புதுச்சேரி மக்களும், ஐதராபாத் மக்களும் வசதியாக இருக்க வேண்டும் என்று நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். இது அவருக்கு தெரியாதா?. நான் செல்வதாக இருந்தால் சிறப்பு விமானத்தில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களோடு மக்களாகவே செல்வேன். புதுச்சேரிக்கும் ஐதராபாத்திற்கும் விமான சேவை வந்ததே அவருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் என்ன வேலை செய்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். எல்லோரையும் குறை சொல்லக்கூடாது.
இவ்வாறு, ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நாராயணி பீடத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு 10,008 பக்தர்கள் நாராயணி வித்யாலயா பள்ளியில் இருந்து ஊர்வலமாக கலசத்தில் மஞ்சள் நீர் கொண்டு சென்று சுயம்பு நாராயணிக்கு அபிஷேகம் செய்தனர். விழாவில் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, பீட மேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.